அனுமார் வாலும் பிலிம் ரீலும்
- Gowtham G A
- Feb 15, 2023
- 7 min read
Updated: Dec 29, 2023
('அயல் சினிமா' மாத இதழில் பிப்ரவரி - 2019 இல் வெளிவந்த கட்டுரை)

1882 இல் ’ஜூல்ஸ் மேரி’ (Étienne Jules Marey) என்பவர் நொடிக்கு 12 பிரேம்களை பதிவு செய்யும் இயந்திரத்தை ’க்ரோனோடோகிராபி’ (Chronophotography) துப்பாக்கியில் பொருத்தி வானத்தில் பறந்து சென்ற பறவைகளை படம் பிடித்தார். அதிலிருந்தே ஷாட் (SHOT) என்ற சொல் வழக்கில் வரத்துவங்கியது. பிலிம் ரோலில் ஷாட் எனப்படுவது வெட்டப்படும் இரு துண்டுகளுக்கு நடுவில் உள்ள பிரேம்களை குறிக்கும். தற்போது டிஜிட்டலில் ரெக்கார்ட் முதல் கட் வரை உள்ள வீடியோ ஒரு ஷாட் என எடுத்துக்கொள்ளலாம்.

என்னதான் பலமுறை ஒத்திகைகள் எடுத்தாலும், படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவிலோ, நடிகர்கள் வசன உச்சரிப்பிலோ அல்லது எதோ ஒரு வகையில் தவறு ஏற்படும் போது சரி செய்ய மீண்டும் ஒரு டேக் எடுப்பது வழக்கம். இப்படியாக இயக்குனர் எழுதிய காட்சி சரியாக அமையும் வரை பல டேக்குகள் போவதுண்டு. ‘ஸ்டான்லி குப்ரிக்’ தனது Eyes Wide Shut (1999) படத்தில் ’டாம் க்ரூஸ்’ கதிவின் வழியாக நடக்கும் ஒரு காட்சியை 95 ஆவது டேக்கில் ஓகே செய்திருக்கிறார்.

95 டேக்குகள் வரை ஒரு இயக்குனரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். எனக்கு ‘வாமணன்’ படத்தில் ஊர்வசியிடம் சந்தானம் சொல்லும் “ஆக்ஷன்.. ஆக்ஷன்…ஆக்ஷன்” காமெடி நினைவுக்கு வருகிறது.
இப்படி இயக்குனர் முடிவு செய்யும் டேக்கிற்கு “ஓகே டேக்” என்று பெயர். இதே போல் பல கோணங்களில் எடுக்கப்படும் வேறு காட்சிகள் சரியாக வரும் வரை பல டேக்குகளில் எடுக்கப்பட்டு அதில் ஓக்கே டேக்குகள் குறிப்பெடுத்துக்கொள்ளப்படும். பல ஓக்கே ஷாட்கள் ஒருங்கிணைந்த காட்சி ஒரு சீன் (SCENE). ஒரு காட்சியை வெவ்வேறு கோணங்களில் படமெடுப்பதன் பெரிய வசதியே, படத்தொகுப்பின்போது எத்தனையோ திருத்தங்களையும் மேம்படுத்தல்களையும் அந்தக் காட்சியில் செய்யமுடியும் என்பது தான்.
ஆனால் இதையும் தாண்டி விறுவிறுப்பான பகுதி ஒன்றுள்ளது “LONG TAKE”. அதாவது ஒட்டு மொத்த காட்சியையும் எந்த வெட்டும் இல்லாமல் ஒரே ஷாட்டாக எடுப்பது. இன்னும் எளிதாக சொல்லவேண்டுமேயானால் மொத்தத்தையும் ’அனுமன் வால்’ போல நீண்ட காட்சிகளாக எடுப்பது. ’லாங் ஷாட்’ என்றால் அது தூரமான ஷாட்டை குறிக்கும் என்பதால் அதை ’லாங் டேக்’ என்று சொல்வதே சரியானது. உதாரணமாக,
தமிழில்
’சீதக்காதி’ (2018) படத்தில் ஔரங்கசிப் வேடத்தில் விஜய்சேதுபதி நடித்த நீண்ட காட்சி,
’தில்லாலங்கடி’ (2010) படத்தின் ”சொல்பேச்சு கேட்காத சுந்தரியே” பாடல்காட்சி.
மலையாளத்தில்
பகத் ஃபாசில் நடித்த ’ஆமென்’ (2013) படத்தின் “பம்பர பா பா” பாடல்காட்சி,
‘அங்கமாலி டைரீஸ்’ (2017) படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி,
இதிலென்ன விருவிருப்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். விருவிருப்பே இனிதான். ஏனெனில், அதை ஒரே ஷாட்டாக எடுப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. உரையாடல்கள், கேமரா அசைவுகள், ஒளி அமைப்புகள் என எதிலேனும் தவறு நிகழ்ந்து விட்டால், நீங்கள் மீண்டும் ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
இப்பொழுது நீங்கள், இரண்டு பேர் பேசும் 5 நிமிடத்திற்கான ஒரு குறும்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை 4:55 ஆவது நிமிடத்தில் கடைசி வசனம் பிழையானாலும் மீண்டும் முதலிலிருந்து துவங்க வேண்டும். உதாரணமாக, இதற்காகவே பரிட்சார்த்த முயற்சியாக இந்தியாவில் ஒரே டேக்க எடுத்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

95 நிமிடங்கள் நீளும் அந்தப்படத்தின் 94 ஆவது நிமிடத்தில், 1 நிமிடம் மட்டுமே மிஞ்சியிருக்கும் சூழலில் அக்காட்சியில் நடிக்கும் யாரேனும் ”அச்”சென்று தும்பி விட்டாலோ, கேமராவை பார்த்துவிட்டாலோ அல்லது கேமரா இயக்கத்தில் ஏதேனும் பிழையாகி விட்டாலோ இயக்குனர் தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டியது தான். இப்படியாக தலையில் அடித்துக்கொண்டு 23 முறை மீண்டும் படம் பிடித்திருக்கிறார் அதன் இயக்குநர். அதாவது, 95 நிமிடங்கள் ஓடக்கூடிய முழுப் படத்தையும் 23 முறை படமாக்க வேண்டியிருந்தது. 90 நாட்கள் விடாமுயற்சியுடன் ஒத்திகை பார்த்த பின்பும் கூட, படப்பிடிப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் நடிகர்களின் எதிர்பாராத சிறுபிழைகள் போன்ற சவால்கள் காரணமாக 23 ரீடேக்குகள் எடுக்க வேண்டியதாகியது என்று படத்தின் இயக்குனர் ஆர்.பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியாக ஒரு காட்சியை முழுமையாக எடுப்பதற்கு மிகுந்த தைரியமும் பொறுமையும் திட்டமிடலும் இருந்தால் மட்டுமே சாத்தியம். எத்தனை நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் இந்த ’லாங் டேக்’ மீது இயக்குனர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களூக்கும் இருக்கும் ஆர்வம் என்றுமே குறைவதில்லை.
சில உதாரணங்கள்:
இப்போது The Revenant (2015) படத்தில் கரடியுடன் நாயகன் ”லியானார்டோ டிகாப்ரியோ” போராடும் அந்த வலி மிகுந்த காட்சியை எடுத்துக்கொள்வோம். தாய் கரடி தனது குட்டிகளை பாதுகாக்க, நாயகனை தாக்குகிறது, கடிக்கிறது, தூக்கி வீசுகிறது, ஏறி மிதிக்கிறது. இறுதியில் போராடி அந்த கரடியை கொன்று உயிர் தப்புகிறார் நாயகன்.

இவை அனைத்தையும் எந்த வெட்டுமின்றி ஒரே காட்சியாக பார்க்கும் போது நீங்கள் உங்களையே அறியாமல் அந்த காட்டிற்குள் சென்றுவிடுகிறீர்கள். காட்சி நடைபெறும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கத்துவங்கும். (Gravity (2013) படத்தில் ‘சாண்ட்ரா புல்லக்’ விண்வெளிப்புயலில் தத்தளிக்கும் காட்சி நினைவிருக்கிறதா? ) இப்போது உங்கள் மொத்த கவனமும் நாயகன் மேல் மட்டுமே இருக்கும். அவனுக்கு வலிக்கும் போது அதன் தாக்கம் உங்களிடத்திலும் இருக்கும்.
(பி.கு: 8 ஆஸ்கார் இயக்குனர்களுடன் இணைந்து வேலை செய்திருந்தாலும், 5 முறை சிறந்த நடிகர் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டும், இதுவரை ஒரு முறை கூட ஆஸ்கார் விருது பெறாத டிகாப்ரியோவுக்கு இந்த படம் மூலம் ஆஸ்கார் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.)
Citizen Kane (1941) படத்தை இயக்கிய “ஆர்சன் வெல்ஸ்” (Orson Welles) அவர்களின் Touch of Evil (1958) படத்தின் துவக்கக் காட்சியை 3 நிமிடம் 30 நொடிகள் நீளமான ஷாட்டாக எடுத்திருக்கிறார். வெடிகுண்டு பொருத்தப்பட்ட காரையும், சாலையில் உல்லாசமாக நடந்து வரும் தம்பதிகளையும் மாறி மாறி பின் தொடரும் கேமரா பல சாலைகளைக் கடந்து நகர்ந்தபடி செல்லும் அதிசயத்தால் தான் லாங் டேக்குகளில் அது ஒரு க்ளாஸிக்.
இதே போல ‘க்வென்டின் டரான்டினோ’ வின் (Quentin Tarantino) ‘கில் பில்’ முதல் பாகத்தின் (Kill Bill 1, 2003) க்ளைமேக்ஸ் காட்சியில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இசைத்துக்கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு பின்னால் இருந்து நகரும் கேமரா, படிக்கட்டுகளை கடந்து அதில் இறங்கி வரும் கதாநாயகியை பக்கவாட்டில் (PROFILE) தொடர்ந்தபடியே தலைக்கு மேல் எழுந்து மீண்டும் பின் தொடர உணவு தாயாராகிக்கொண்டிருக்கும் பக்கத்து அறையை கடந்து கழிவறைக்குள் செல்லும் போது மேலிருந்து கீழிறங்கி இயல்பு நிலைக்கு கேமிரா பின் தொடர, அவள் ஒரு அறைக்குள் சென்று தனது ஜெர்கினை கழற்றுத்துவங்க, அந்த அறையிலிருந்து கிளம்பும் ஒரு பெண்ணை நோக்கி நகர்ந்தபடியே சென்று, சமையலறையிலிருந்து மதுபானத்துடன் வரும் உரிமையாளரை பின் தொடர்ந்து ஹாலுக்கு வந்து, படிக்கட்டில் ஏறும் வரை பின் தொடர்ந்து, இடையில் பாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை கடந்து மாடியில் வில்லி இருக்கும் அறையை அவர்கள் அடைந்த பிறகு, அங்கிருந்து கிளம்பி வரும் வில்லியின் அடியாள் ஒருத்தியை நோக்கி கேமரா மீண்டும் நகர்ந்து, அருகில் நடனமாடிக்கொண்டிருக்கும் கூட்டத்தையும் தாண்டி கழிவறைக்குள் செல்ல நின்று போகும் கேமரா அறைக்குள் இருக்கும் நாயகி அறை விளக்கை ஆன் செய்யும் செய்யும் வரை காத்திருக்கிறது.
(இப்படியாக ஒரு நீளமான ஷாட் கமாக்கள் கொண்டு நகர்ந்து சென்று முற்றுப்புள்ளி வைத்த இடத்தில் கட் ஆகிறது. இந்த பத்தியில் நான் வைத்த கமாக்கள் அனைத்தும் PAN எனப்படும் கேமரா நகர்வுகள். முற்றுப்புள்ளி கட்)
Taxi Driver (1976), Raging Bull (1980) இல் துவங்கி The Wolf of Wall Street (2013), Silence (2016) வரை இன்னும் நம்மை பிரமிக்க வைக்கும் இயக்குனர் “மார்டின் ஸ்கார்சஸி” (Martin Scorsese) தனது Goodfellas (1990) படத்தில் ஒரு அழகான 3 நிமிட லாங் டேக்கை ஸ்டெடி கேமராவில் (Steadicam) பொருத்தி இயக்கிருப்பார்.
தன் தோழியை முதல் முறையாக டின்னருக்கு அழைத்து வரும் ஒருவன், கார் பார்க்கிங் செய்வதற்கு டிப்ஸ் கொடுப்பதில் துவங்கி, வெளியே பெரும் கூட்டம் வரிசையில் காத்திருக்க பின் வாசலில் சமையலைறை வழியாக அவளை அழைத்துச் செல்கிறான். செல்லும் வழியில் அவனை எல்லாரும் அன்போடு வரவேற்பதும், அவனுக்கென ப்ரத்யேகமாக மேசை ஒன்று அமைத்துக் கொடுக்கப்படுவதும், ஒயின் பாட்டில் பரிசாக கொடுக்கப்படுவதும் எல்லாமே அந்தப் பெண்ணை அசத்துகிறது. ஒரு வேளை இதை பல ஷாட்டுகளாகப் பிரித்து எடுத்திருந்தால் எத்தனை சலிப்பூட்டுவதாக இருந்திருக்கும் என்று நீங்களே யோசித்துப் பார்க்கலாம். இந்தக்காட்சியை மார்டின் ஸ்கார்ஸ் 8 ஆவது டேக்கில் ஓக்கே செய்திருக்கிறார்.
ஒரு காட்சியை பல ஷாட்டுகளாகப் பிரித்து எடுக்கப்படும் போது, முந்தைய மற்றும் பிந்தைய ஷாட்டுகளோடு ஒரு தொடர்ச்சியை (CONTINUTY) ஏற்படுத்துவதற்கு நடிகர்கள் அதிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு பெரிய நடிகரானாலும் நிறுத்தி நிறுத்தி ஷாட்டுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளின் தொடர்ச்சி சிறிய அளவுக்கேனும் அறுபடத்தான் செய்யும். லாங் டேக்குகளில் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி அறுபடாமல் இருப்பதால் அதில் ஒரு தொடர்ச்சி இருக்கும்.


உதாரணமாக: ’பாபநாசம்’ படத்தின் க்ளைமேக்ஸில், தான் கொலை செய்ய வேண்டிய நிர்பந்த்தையும் அதற்கு மன்னிப்பும் கேட்டு கமல் அழும் காட்சி. அடுத்து ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மிஷ்கின் சொல்லும் கதை. கிட்டத்தட்ட படத்தில் நாம் பார்த்திராத முன் கதையை கண்ணீரும், கணத்த இசையுடனும் ஒரே ஷாட்டில் மிஷ்கின் சொல்லி முடித்துவிடுவார்.
ரோப் (1948)

எனக்குத்தெரிந்து நீளமான டேக்குகள் அதிகம் நிறைந்ததாக நான் பார்த்த முதல் படம் ரோப் (ROPE, 1948). 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் மொத்தமே 10 ஷாட்கள் தான். ஒவ்வொன்றும் குறைந்தது 4 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரையிலான நீளமான ஷாட்கள். ஒரே செட், கதாபத்திரங்களுடன் பயணிக்கும் கேமரா என்று படம் முழுக்க அமர்க்களப்படும். இப்படியான சோதனைக்கு என்ன தான் நாம் ஹிட்ச்காக்கை புகழ்ந்து தள்ளினாலும் உண்மையில் அவர் நோக்கம் சோதனை முயற்சி என்பதை தாண்டி ‘ரோப்’ எனும் நாடகத்தைத் தழுவித்தான் அவர் படத்தை எடுத்தார். அந்த நாடகத்தின் சிறப்பே அது மொத்தமும் ஒரே ஒரு காட்சியாக இருந்ததுதான்.
பொதுவாக திரையை மேலிழுத்த பின் துவங்கும் நாடகம் திரை இறங்கிய பிறகு தான் முடிவுறும். நடுவில் எந்த காட்சியும் மாறாது தொடர்ந்து ஒரே காட்சியிலேயே நடந்து முடியும் திரில்லர் அது. ஹிட்ச்காக், அதைப் பார்த்தபோது தனக்கு உண்டான தாக்கம் தன் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் உண்டாகவேண்டுமென்று நினைத்தார். அதனால் மொத்தப் படமும் எந்த வெட்டும் இல்லாமல் ஒரே ஷாட்டில் நடப்பது போல பார்வையாளர்களுக்குக் காட்ட விரும்பினார். ஆனால் திரைப்படக் கேமராவில் அதிகபட்சமாக 1000 அடி நீளமுள்ள படச்சுருளை மட்டுமே ஏற்ற முடியும். அது கிட்டத்தட்ட 10 நிமிடம் ஓடக் கூடியது. ஆகவே அதற்கேற்ப ஷாட்டுகளாகப் பிரித்து, ஒரு ஷாட் முடியும் இடத்திலிருந்து அடுத்த ஷாட் ஆரம்பிப்பது போலவும், அடுத்தடுத்த ஷாட் மாற்றம் கூட சாதாரணமாகக் கண்ணில் படாதவகையிலும் அமைத்துப் படமெடுத்தார் ஹிட்ச்காக்.
பேர்ட்மேன் (2014)

லாங் டேக்கில் படத்தொகுப்பாளரால் எந்த வகையிலும் உதவ முடியாது தான். ஆனால் எடுத்த ஒவ்வொரு லாங் டேக்குகளையும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைத்து ஒரே லாங் டேக் படமாக காட்ட முடியும். நீங்கள் ’பேர்ட்மேன்’ பார்க்கும் போது மொத்தப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போல தோன்றும். ஆனால் படத்தொகுப்பு மற்றும் கிராபிக்ஸ் மூலம் இவை சாத்தியமாகின. அதாவது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் நடுவில் ஏதோ ஒரு இணைப்பின் மூலம் தொகுக்கப்பட்டிருக்கும்.
ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும் போது நடுவில் சூழும் இருள், கேமரா திரும்பும் போது (PAN). இப்படியாக ஏதாவது ஒரு இணைப்பின்மூலம் அடுத்தடுத்த காட்சிகளை கோர்வையாக்கி சிங்கிள் டேக்கில் எடுத்தது போன்ற உணர்வை கடத்திவிட்டார்.
இதை படத்தொகுப்பாளர் ’வால்டர்மர்ச்’ (Walter Murch) எளிதாக விளக்குகிறார்.
“நம் கண்கள் ஒரு புள்ளியிலிருந்து, மற்றொரு புள்ளிக்கு நகர்கையில் இயல்பாக அவ்விடத்தில் ஒரு சிறிய இடைவெளி தோன்றி விடுகின்றது. ஆனால், நம் மூளை முதல் புள்ளியின் நினைவை அந்த இடைவெளியில் இட்டு நிரப்புவதனால் நம்மால் அந்த இடைவெளியை உணர முடிவதில்லை. இது தான் இந்தப்படத்தின்மிகப்பெரும் பலம்.”
’பேர்ட்மேன்’படத்தை ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படம் பிடிப்பது பற்றி படத்தின் இயக்குனர் ’இன்னாரித்து’ விடம் கேட்டபோது அவர் அளித்தபதில்.
“நான் திரைக்கதையை எழுதிமுடித்த உடனேயே, இதன்வடிவம் எனக்கு தெளிவாகியது. ஒரு 51 வயது மனிதனாக, வாழ்க்கை தொடச்சியான காட்சிகளின் கோர்வைகளால் தான் நகர்கின்றது என்பதை புரிந்துகொண்டேன். காலையில் நாம் நம் கண்களை திறப்பதிலிருந்து அன்றைய நாள் முழுவதையும் எவ்வித வெட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக நாம் நமக்குள் பதிவுசெய்து கொள்கிறோம். நம் வாழ்க்கையை நினைவில் மீட்டெடுத்து பார்க்கின்ற போதும், வாழ்க்கையைப்பற்றி உரையாடும் போது மட்டுமே வெட்டு தேவைப்படுகிறது. அதனால், நான் இடைவெட்டில்லாத தொடர்ச்சியான காட்சிகளால் படத்தை நகர்த்துவது என்று முடிவு செய்தேன்….
விக்டோரியா (2015)

ஒரு ரயில் சந்திப்போ, பார்டியோ, திருமண நிகழ்வோ எதுவாகவோ இருக்கட்டும். எதேச்சையாக நீங்கள் பார்க்கும் அல்லது சந்திக்கும் நபருடனான சந்திப்பு உங்களை ஒரு ஆட்டம் காட்டிவிடும். உதாரணமாக எனது சிறுவயது நிகழ்வு.
ஆண்டு 2006. ஊரில் சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்தில் ஒரு பெண்ணை பார்த்து மையல் கொண்டு இரண்டு நாளாக இதயம் முரளி கணக்காக பின் தொடர்ந்து ”உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொற பொன்ணு” பாட்டெல்லாம் கனவில் பாடி இரண்டாம் நாளின் இறுதியில் அம்மாவிடம் ”அந்த பொண்ணு யாருன்னு கேளும்மா. பேசி முடிச்சிருவோம்” ன்னு கேட்க “அது உன் முறைப்பொண்ணு தான். ஆனா போன முகூர்த்ததுல தான் கல்யாணம் ஆச்சு.” ன்னு தலையில் இடி இடித்தார்.
இப்படியான ஒரு இடியே இந்தப்படத்தின் நாயகி விக்டோரியாவுக்கும் நடக்கிறது. ஆனால் வன்முறை கலந்த வேறு வடிவில்.
பாரில் குடித்துவிட்டு நான்கு மணியளவில் வெளியே வரும் அவள், அங்கே நான்கு நபர்களை சந்திக்கிறாள். அங்கு இருக்கும் ஒரு கடையில் மது பாட்டில்களை திருடிக் குடிக்கிறார்கள். இரவை கழிக்கிறார்கள். அவர்களில் ஒருவனை காதலிக்கிறாள். அடுத்ததாக ஒரு வங்கியில் புகுந்து திருடுகிறார்கள். மற்றவர்கள் போலீஸிடம் மாட்டிவிட, துப்பாக்கிச்சூட்டில் தப்பித்து காதலனுடன் ஒரு ஹோட்டலில் வந்து தங்கும் போது தான், காதலன் உடலில் இருந்து ரத்தம் கசிவது அவளுக்கு தெரிகிறது. அவள் கைகளை பிடித்தபடியே அவள் காதலன் இறந்து போகிறான். கொள்ளையடித்த 50,000 யூரோக்களோடு அழுதுகொண்டே வெளியே கிளம்புகிறாள். சாலைகளில் சைரன்களோடு போலீஸ் வண்டிகள் அவளை கடந்து கொண்டிருக்க படம் நிறைவடைகிறது. இப்படியாக அவள் வாழ்வில் நடந்த அடுத்த இரண்டு மணி நேரங்கள் தான் ”விக்டோரியா”.
படத்தில் நிறைய ஆங்கில வசனம் இருப்பதால், ஆஸ்காரின் சிறந்த வெளிநாட்டு படப் பிரிவுக்கு இந்தப் படம் தகுதி பெறவில்லை. நம் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்கிறது ‘விக்டோரியா’
இந்தப் படத்தைப்பற்றி இயக்குனர் ’Sebastian Schipper’ கூறியதாவது
”ஒரே ஷாட்டில் படம் எடுப்பது என்பது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமான ஒரு விஷயம் தான். முதலில் நான் இந்தப்படத்தை ஒரே டேக்கில் எடுக்கப்போகிறேன் என சொன்ன போது யாரும் நம்பவில்லை. ஆனாலும் நாங்கள் அதை உறுதியாக நம்பினோம். அதே நம்பிக்கையோடு மொத்தம் 22 லொக்கேஷன்களில் நகர்ந்து கொண்டே படம் பிடித்தோம்”.
ரஷ்யன் ஆர்க் (2002)

துரிதமான காட்சியமைப்புகளை அதிகமாக கொண்டிருக்கும் மைய நீரோட்ட சினிமாவிற்கு எதிராக தனித்தன்மையுள்ள, அதிக சலனமில்லாத இடைவெட்டில்லாத நீளமான காட்சிகளோடு பார்வையாளர்களின் ஆழ்ந்த உள்வாங்கலுக்கு இடமளிக்கக்கூடிய சினிமாக்களை உருவாக்கிய படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் இப்படத்தை இயக்கிய அலெக்ஸாண்டர் சுக்ரோவ் (Alexander Sokurov). காட்சிகளில், நிறங்களில், இசை சேர்ப்பில் ஒருவித தனித்தன்மையை தோற்றுவிப்பதில் வித்தைக்காரர்.
இந்த படம் பொருளாதார அடிப்படையில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த காலகட்டத்தில் அது பெரிய சாதனை. 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் ஸ்டடி கேமராவில் (Steadycam Sequence Shot) ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பெர்கில் இருக்கும் குளிர் மாளிகையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
விபத்தில் ஒருவன் இறந்துவிட, அவனது ஆவி பார்வையாளனாய் அந்த மாளிகையைச் சுற்றி வருகிறது. அந்தப் பெரிய மாளிகையினுள் ஆவி சுற்றி வரும் போதெல்லாம் அங்கு 300 ஆண்டுகளாய் நடந்த நிகழ்வுகள், மனிதர்கள், எல்லாவற்றையும் ஆவியால் பார்க்க முடிகிறது. படத்தில் மொத்தம் 33 அறைகள் பயன்படுத்தப்பட்டு, 2,000 பேர் நடித்த இந்தப் படம் நான்காவது டேக்கில் தான் ஓகே ஆனது.
பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட கேமராக்களில் பிலிம் ரீல் தீர்ந்து போவது மாதிரியான தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தாலும் சமகாலங்களில் டிஜிட்டல் ஒளிப்பதிவு ஓரளவுக்கு காட்சியமைப்பதற்கு எளிமைப்படுத்தி இருப்பது வரவேறத்தக்கது. மேலும் படக்குழுவினரின் கடின உழைப்பும் இதற்கு மிகப்பெரும் பலம்.
One Cut of the Dead (2017) படத்தில் ஒரு லாங்ஷாட்டை எடுக்க படக்குழுவினர் எப்படியெல்லாம் அல்லல்படுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக எடுத்திருப்பார்கள். இப்படி உறுதுணையான குழுக்கள் இன்னும் பல லாங் டெக்குகள் எடுக்க தைரியம் கொடுக்கும்.
இப்போது டிஜிட்டல் யுகம் எல்லோர் கையிலும் கேமரா என்பதால் ஒளிப்பதிவு எளிய மக்களிடத்தில் ஏதோ ஒரு வகையில் வந்தடைந்ததுள்ளது. அதை உரிய வகையில் பயன்படுத்துங்கள். உங்களுக்கு ஆச்சரியங்கள் பல காத்திருக்கிறது.
உதாரணமாக, கடனோ அல்லது இரவலாக பெண் டிரைவை வாங்கிச் சென்ற உங்கள் உயிர் நண்பனை எதோ ஒரு இடத்தில் நீங்கள் கண்டீர்களேயானால், உங்கள் போனில் வீடியோ ரெக்கார்ட் ஆன் செய்து பாக்கெட்டில் வைத்துவிட்டு உங்கள் உயிர் நண்பனை துரத்த ஆரம்பியுங்கள். உலகின் ஆகச்சிறந்த லாங் டேக்குளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.