கணக்கில் வராத சாதனை
- Gowtham G A
- Apr 29, 2024
- 3 min read
ஐபிஎல் போட்டிகளில் முன்பு 20 ஓவர்களில் 200 ரன்களை துரத்துவது என்பது பெரிய இலக்காக இருந்த நிலை மாறி. இப்போதெல்லாம் 220-230 ரன்கள் அடித்திருந்தாலே அதை ஈசியாக துரத்துகிறார்கள்.
ஆனால் பெங்களூர்...
சென்னையுடன் 173 ரன்களிலும், கொல்கத்தாவுடன் 182 ரன்களிலும், மற்றும் ராஜஸ்தானுடன் 183 ரன்களிலும் சுருண்டு, லக்னோவின் 181 ரன்களை துரத்த முடியாமல் 153 ரன்களில் தோற்று, மும்பையுடன் உயிரைக்கொடுத்து ஆடி 196 ரன்கள் எடுத்தால், 196 ரன்களை அவர்கள் 15.3 ஓவர்களிலே அடித்து வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்.
ஹைதராபாத் அணி இன்னும் மோசம். 20 ஓவரில் 287 ரன்கள் குவித்தது. அதையும் துரத்தி 262 இல் தோற்றது பெங்களூர். காலாண்டு தேர்வில் கணக்கில் 35 மார்க் எடுக்கும் சிறுவன் அரையாண்டில் 90 மார்க் எடுப்பதைப்போல இந்த லாஜிக் மட்டும் புரியவில்லை. கில்லி படத்தில் விஜய் சொல்வது போல ”பெங்களூர் ஒரு கேள்விக்குறி” தான்....
சென்னை 28 முதல் பாகத்தில் ஏற்கனவே கடற்கரையில் சிறுவர்களுடனான பந்தய போட்டியில் ஆட்டத்தை தொலைத்து, கையில் காசில்லாமல் மட்டையை கொடுத்தணுப்பும் அதே ராயப்புரம் ராக்கர்ஸ், படத்தின் இறுதியில் மிர்ச்சி கப்பின் இறுதிப்போட்டியில் அவர்களை எதிர்கொண்டு தோற்பார்கள். இப்படியாக படம் நிறைவடையும். ஆனால் இரண்டாவது பாகத்தில் தேனியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் ராயப்புரம் ராக்கர்ஸ் அதற்கு பழி தீர்ப்பார்கள். அப்படியாக காத்திருந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத்தை 171 ரன்களில் சுருட்டி பழி தீர்த்தது பெங்களூர். இருந்தாலும் இன்னும் அட்டவணையின் கடைசி பெஞ்சில் தான் அமர்ந்திருக்கிறது.
தொடர்ந்து விழுந்த அடிகளில் துவண்டு கிடந்த பெங்களூர் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக்கொள்ளும் வெற்றி அது. அதே களிப்பை தக்கவைத்துக்கொள்ள ஓவருக்கு 10 ரன்கள் என்ற கணக்கில் 200 ரன்கள் குறைந்தபட்சம் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில், குஜராத் அடித்த 200 ரன்னை துறத்த அடுத்த ஆட்டத்தில் களம் இறங்கியது பெங்களூர் அணி.
4வது ஓவரில், விராட் கோலி 11 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க, 11 பந்துகளில் 24 ரன்கள் du Plessis அதிவேகமாக விளாசிக்கொண்டிருந்தார். அப்போது சாய் கிஷோர் வீசிய பந்தில் deep mid wicket எல்லையில் நிற்கும் ராணுவ வீரன் விஜய் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் du Plessis. மொத்த ரன்கள் 40-1.
அடுத்ததாக களம் இறங்கிய வில் ஜாக்ஸ் (Will Jacks) மற்றும் விராட் கோலியின் கூட்டணி சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணிக்கு இணையாக ரகளை செய்யத்துவங்கியது.
10ஆவது ஓவரில் 31 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார் விராட் கோலி. அப்போது ஜாக்ஸ் 16 (16). மொத்த ரன்கள் 98-1.
28 பந்துகள் வரை இருக்கையின் நுனியில் அமைதியாக அமர்ந்திருந்த அமாவாசை (ஜேக்ஸ்) அடுத்தடுத்த பந்துகளில் இருக்கையின் மேல் ஏறி அமரத்துவங்கினார்.
15ஆவது ஓவரின் முதல் பந்தை மோஹித் வீசும் முன்பு, 29 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தார் ஜாக்ஸ். அப்போது கோலி 43 பந்துகளுக்கு 69 ரன்கள் எடுத்திருந்தார். முதல் பந்தில் நான்கு ரன்கள் அடித்து, அடுத்த பந்தில் விளாசிய சிக்ஸரில் தனது அரை சத்தை அடைந்தார் ஜேக்ஸ். 54 (31). அதன் பின்னும் அடங்காத வேகத்தில் மீண்டும் ஒரு சிக்ஸர், போனால் போகட்டும் என 2 ரன்கள், மீண்டும் ஒரு சிக்ஸர், அடுத்து நான்கு ரன்கள் அடித்து கடைசி பந்தை மட்டும் விராட் கோலிக்கு விட்டுக்கொடுத்தார். மொத்த ரன்கள் 177-1
”என்னங்கடா விடாம அடிக்கிறீங்க. குருநாதா! எங்க இருக்கீங்க! இருங்கடா என் குருநாதர கூட்டிட்டு வரேன்” என்ற வடிவேல் கணக்காக 16வது ஓவருக்கு ரஷீத் கானை (Rashid Khan) இறக்கினார் கேப்டன் ஷுப்மன் கில் (Shubman Gill). அது வரை ரஷித் கான் வீசிய 3 ஓவர்களில் அவர் கொடுத்தது வெறும் 22 ரன்கள் மட்டுமே.
ஆனால் சிவனே என்றிருந்த ரவுடியை அழைத்து சாணியடித்த கதையாக, ஜாக்ஸ் கும்மியடிக்கப் போவதே தனது ஓவரில்தான் என்பதை அறியாமல் 16வது ஓவரை வீசத்துவங்கினார். ரஷீத்கானின் முதல் பந்தில் ஒரு ரன்கள் மட்டும் எடுத்த கோலியால், இரண்டாவது பந்திலிருந்து ஆட்டம் மீண்டும் ஜாக்ஸ் பக்கம் திரும்பியது.
ஜாக்ஸ் 72 (36) ரன்கள் எடுத்திருந்த வேளையில், ரஷித் கான் ஷார்ட் பிட்சாக வீசிய இரண்டாவது பந்தில் பறந்தது சிக்ஸர். ‘என்னடா பொசுக்குன்னு அண்ணன அடிச்சிட்ட’ என்ற கணக்காக மூக்கு வியர்த்தது ரஷித் கானுக்கு. சுதாரித்துக்கொண்டு மூன்றாவது பந்தை வீசினார் அதுவும் சிக்ஸர். நான்காவதாக வீசப்பட்டது ஒரு புல் டாஸ். பறந்தது நான்கு ரன்கள். சரி கொஞ்சம் ஸ்டம்ப் கிட்ட போடுவோம் என Mid Range இல் வீசிய ஐந்தாவது பந்தும் சிக்ஸர். ஓவரில் இன்னும் ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் 94 (40) ரன்களுடன் நின்றுகொண்டிருந்தார் ஜாக்ஸ்.
மொத்த ரன்கள் 200-1. இரு அணிகளும் சமம்.
வெற்றி பெற தேவை ஒரு ரன். ஆனால் சதம் அடிக்க தேவை ஆறு ரன்கள்.
16வது ஓவரின் கடைசி பந்து. இதை விட்டால் அடுத்த ஓவரில் விராட் கோலி அந்த ஒரு ரன்னை எடுத்துவிடுவார். தனது சதத்திற்காக மொத்த ஓவரும் ஸ்டோக் வைக்க மாட்டார் என்பதெல்லாம் ஜாக்ஸ்க்கு நன்கு தெரியும். அப்படி ஆட இது ஒன்றும் டெஸ்ட் மேட்சும் இல்லை. ஒரு வேளை பெருந்தன்மையாக கோலி நின்றால் கூட wide அல்லது No ball ஏதேனும் விழுந்தால் சோலி முடிந்தது.
அதே வேளையில் நாம் ஒரு ரன் எடுத்தால் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை முடிக்க முடியும். ஒருவேளை நான்கு ரன்கள் எடுத்தால் கூட அதிகபட்சம் 98 ரன்கள் தான். வேறு வழியே இல்லை 6 ரன்கள் எடுத்தால் மட்டுமே சதம் அடிக்க முடியும் ஆட்டத்தையும் முடிக்க முடியும் என்ற கட்டாயத்தில், ரஷித் கான் ஸ்டம்புக்கு வெளியே வீசிய கடைசி பந்திலும் பறந்தது சிக்ஸர்.
அரங்கில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி கோலியும், ரஷீத் கானுமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். அமாவாசையாக களம் இறங்கி நாகராஜ சோழனாக மாறி புகைத்துக்கொண்டிருந்த சத்யாராஜை பார்க்கும் மணிவண்ணனைப்போல, ஜாக்ஸை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார் விராட் கோலி.

கடைசி ஐந்து பந்துகளில் அவர் குவித்த ரன்கள் மட்டும் 28 (6,6,4,6,6). கிட்டத்தட்ட கடைசி இரண்டு ஓவர்களை ஜாக்ஸ் மட்டுமே முழுமையாக கைப்பற்றியிருந்தார். விராட் கோலி கௌரவ வேடத்தில் நின்று கொண்டிருந்தார். 44 பந்துகளில் 70 அடித்திருந்த கோலியை விட குறைந்த பந்தில் (41) தனது 100வது ரன்னை எட்டினார் ஜாக்ஸ்.
Andrew Flintoff உடனான சண்டையில் Stuart Broad வீசிய ஆறு பந்துகளிலும் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்கள் (6,6,6,6,6,6) அடித்த காட்சி உங்கள் மனக்கண்ணில் ஓடுகிறதா!
2007 ஆம் ஆண்டு வெறும் 12 பந்துகளில் அரை சதம் விளாசிய யுவராஜ் சிங்கின் சாதனை 2023 வரை முறியடிக்கப்படாமல் இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து வெறும் 9 பந்துகளில் முறியடித்தார் நேபாள கிரிக்கெட் வீரர் Dipendra Singh Airee. அதே ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் ரயில்வே அணிக்காக விளையாடிய Ashutosh Sharma 11 பந்தில் அரை சதத்தை எட்டி இரண்டாம் இடம் பிடித்தார்.
Dipendra Singh Airee க்கு பிறகு இரண்டாவது இடத்தில் Ashutosh Sharma வுடன், ஜேக்ஸ் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.
கிரிக்கெட் விதிகளைப்பொறுத்தவரை, முதலில் எடுக்கப்படும் 50 ரன்களைகொண்டே ஒருவரின் அதிவேக அரை சதத்தை கணக்கில் கொள்வார்கள். ஆனால் ஜாக்ஸின் கணக்கு வேறு ரகம். 41 பந்துகளில் அவர் அடைந்த சதத்தின் கடைசி 50 ரன்களை வெறும் 11 பந்துகளில் எட்டியிருந்தார். 54 (31) - 100 (41)
நியாயப்படி பார்த்தால் ஆட்டத்தின் முதலிலிருந்து களத்தில் இருந்த கோலி தான் அதை எட்டியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ரிஸ்கை யார் எடுக்கிறார்களோ அவர்களிடம் தான் அகப்படுகிறது வெற்றி.
யாராலும் அத்தனை எளிதில் எட்ட முடியாத இலக்கை எட்டுக்கின்ற ஒருவனே மக்களின் நாயகனாகிறான். வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கிறான்.
Powerful people make places.
இந்த ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பல மைல் தொலைவில் இருந்தாலும், இந்த ஆண்டின் மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை கொடுத்திருக்கிறது பெங்களூர்.






Comments