top of page

“ஒரு கதை சொல்லட்டா சார்…”

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Feb 15, 2023
  • 4 min read

Updated: Nov 30, 2023

('அயல் சினிமா' மாத இதழில் மார்ச் - 2019 இல் வெளிவந்த கட்டுரை)


ree
ree

இதை சொன்னதும் உங்களுக்கு கீழே உள்ள வசனம் நிச்சயம் நினைவுக்கு வரும்.


“உன்ன மாதிரி ஆளுங்களுக்கேல்லாம் ஒரே கதை தான....

கீழ இருந்தேன். தெரு நாயா இருந்தேன். இது செஞ்சு அது செஞ்சு பெரிய ஆள் ஆயிட்டேன். அவ்ளோ தானே…”


நாம் பார்த்த, கேள்விப்பட்ட பிரபலங்கள், தலைவர்கள் எல்லோருக்கும் இந்த ஒரே வரிக்கதை தான். நான் ஒன்னுமில்லாம இருந்தேன். கஷ்டப்பட்டேன். உச்சத்துக்கு போனேன். அதே போலத் தான் இந்தக்கதையும். படம் பார்க்கும் எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. உலகறிந்த, விக்கிபீடியாவில் இருக்கும் கதையை மீண்டும் உங்களுக்கு சொல்வதை விட, காட்சிகளின் வழியே நான் கண்ட வியந்த தருணங்களுக்கான பதிவு இது.


படத்தின் துவக்கத்தில் நமக்கு நன்கு பழக்கப்பட்ட 20TH CENTUREY FOX நிறுவனத்தின் டைட்டில் இசையில் ஏதோ மாற்றம். அதிர்ச்சியில் ஸ்பீக்கரில் ஏதும் கோளாரா என செக் செய்து கோண்டேன். பிறகு மீண்டும் ஒரு முறை கேட்கையில் தான், ”ஆஹா இவங்க இங்கயே ஆரம்பிச்சிட்டானுங்கப்பா” என்றாகிவிட்டது. ஆம். 20TH CENTUREY FOX டைட்டில் இசையை கித்தாரில் இசைத்திருக்கிறார்கள். அத்தனை தனித்துவம்.


’தனித்துவம்’ அது தான் அவர்களின் அடையாளமும் கூட. புதுமைகள், வித்தியாசமான வரிகள், இசைக்கோர்ப்புகள். ”WE WILL, WE WILL ROCK YOU” என்ற பாடல் உங்களுக்கு இன்னமும் நினைவிருக்கிறதெனில் ஒன்று நீங்கள் 90s Kids ஆக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் QUEEN இசைக்குழுவின் அதி தீவிர ரசிகராக இருந்திருக்க வேண்டும். எனக்குத்தெரிந்து ’டெக்’ மற்றும் ’கேசட்’ பயன்படுத்திய கடைசி தலைமுறை நாங்களாகத்தான் இருப்போம். கிராமபோன்கள் எல்லாம் எங்களுக்கு முன்னாலே வழக்கொழிந்து விட்டன. 90களின் இறுதியில் டியூசன் படித்துக்கொண்டிருந்த பூமாதேவி டீச்சரின் ஸ்டோர் ரூமில் தூசி படிந்தவாறு ஆக்கிரமித்திருந்த கிராமபோன் தகடுகளை நான் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். பின் ஒரு நாளில் அங்கும் அது இல்லாமல் போனது.


2000இன் ஆரம்பகட்ட காலங்கள் வரை டேப் கேசட்டுகள் ஆக்கிரமித்திருந்தன. ஒரிஜினல் கேசட்டில் இருந்து இன்னொரு கேசட்டில் திருட்டு காப்பி அடிக்கும் முறையை கோபிச்செட்டிப்பாளையத்தின் யாகூப் வீதி நன்கு அறியும். பிரெட்டியின் ”WE WILL ROCK YOU”, மைக்கெல் ஜாக்சனின் “BEAT IT” உட்பட பல ஆங்கிலப்பாடல்களை கேட்டபடியே தெருவை கடந்திருக்கிறேன். பிறகு சிடிக்கள். அடுத்த பரிணாமமாக MP3. ஒரு குறுந்தகட்டில் 100-200 பாடல்கள் வைத்துக்கொள்ளலாம் என்ற தொழில்நுட்பம் முந்தைய அத்தனை இசைத்தட்டுகளையும் முடக்கிவைத்தது. ஆனாலும் அத்தனை ஆண்டுகள் கடந்தும் இசையால் கட்டிப்போட்டும் வித்தகர்களை நாம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்.


இரவில் ஒரு கிளப்பில் யாரோ மூன்று நபர்களின் சந்திப்பு இப்படி வரலாற்றில் இடம் பெறும் என்று அவர்களே கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். சரியான விதை சரியான இடத்தில் சரியான நேரத்தில் விதைக்கையில் வீரியத்துடன் மண்ணை முட்டிக்கொண்டு வெளியில் வளரும் அது போலத்தான் சரியான நட்பும் கூட. அப்படியான நண்பர்களால் நிறைந்தது குயின் என்ற இசைக்குழு. புதிதாக இணைந்த ”பிரெட்டி” தன் குரலால் ரோஜர் டெய்லர், ப்ரையான் மேரி இருவரையும் அசத்துகிறார். பழகிய ஒரு ஆண்டின் முடிவிலேயே ஒரு ஆல்பம் செய்வோம் என முடிவெடுக்கிறார்.


அதை எல்லோரும் ஆமோதிக்க, அப்படியாக வெளிவந்தது தான் ”பொஹிமியன் ராப்சோடி” என்ற பாடல். அதற்கு ”கற்பனை உலகக் கலைஞன்” என்று அர்த்தம். 3 நிமிடங்கள் மட்டுமே ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் 6 நிமிடத்திற்கு ஒரு பாடல். அதுவும் வித்தியாசமான குரல்வளையில், குரல் ஒலியளவில், ஒலிக்கலவையில் என தனி ராஜ்ஜியமே நடத்தியிருப்பார்கள்.


இப்படியான இசையை மையமாகக்கொண்ட ஒரு படத்தை ஒரு இசையமைப்பாளாரே படத்தொகுப்பு செய்தால் !!! அது தான் இந்தப்படத்தில் நிகழ்ந்த அற்புதம். அவர் பெயர் ஜான் ஓட்மன். அவரது படத்தொகுப்பில் 12 ஆவது படம். ஆனால் இந்தப்படத்தில் ஓட்மன் இசையமைக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களது இசைக்கோர்புகளையே பயன்படுத்தியுள்ளார்.


ஏனெனில் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை அதன் தன்மை மாறாமல் மேட்டெடுப்பது என்பது அசாதாரண உழைப்பால் மட்டுமே சாத்தியம். ”தெரிந்த கதை தானே” என்ற சலிப்புத்தட்டாமல் உங்கள் இருக்கைகளில் பரிமாற வேண்டுமெனில் அதற்கு எத்தனை கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது பாருங்கள்.


இப்பொழுது புரிகிறதா !!! எல்லோருக்கும் தெரிந்த நொய்டாவில் நடந்த இரட்டைக்கொலை பற்றிய கதையை மையமாககொண்ட Talwar (2015) படத்தின் படத்தொகுப்பு ஏன் பெரிதளவில் பேசப்பட்டது என்று.


உதாரணமாக இப்படத்தில்,


ஒரு காட்சியில் அடுத்த பாடலுக்கான கம்போசிசனில் வாத்தியங்கள் இல்லாமல் புதுமையாக நம் கை, கால் ஓசையை வைத்துக்கொண்டே ஒரு பாடல் வடிவமைக்கலாம் என முடிவுக்கு வருகிறார்கள். ப்ரெட்டி தாமதமாக வருகிறார். மன்னிப்பும் கேட்கிறார். அவரிடம் இதை வாசித்துக் காட்டுகிறார்கள். ”எங்கே பாடல்வரிகள்” என ப்ரெட்டி கேட்கும் போதே


1. அரங்கிற்கு காட்சி மாறுகிறது. அங்கே பார்வையாளர்கள் இவர்களைப் போலவே ஒன்று கூடி இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2. அடுத்த வெட்டில் அவர்கள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள்.

3. அரங்கில் WE WILL ROCK YOU என்ற பாடலை பாடத்துவங்குகிறார் ப்ரெட்டி.

4. பயிற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள்.

5. மேடைக்காட்சிகள்.

6. பயிற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள்

7. மேடைக்காட்சிகள்……etc


இப்படியாக இரண்டு வேறு வேறு காட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் ஆனால் பிரிந்தும் வருகிறது. ரயில் தண்டவாளம் போல. இதனை தனியே பிரித்தெடுத்தால் உங்களுக்கு இரண்டு வெவ்வேறு காட்சியமைப்புகள் கிடைக்கும்.


1. ஒன்று பயிற்சி செய்யும் மாண்டேஜ் அல்லது காட்சி.

2. மற்றொன்று பார்வையாளர்களும், அரங்கத்தில் பிரெட்டியும் அவர் நண்பர்களும் குதூகலிக்கும் காட்சி.


இதை விட ஒரே விதமான காட்சியை இரண்டு இடத்தில் பயன்படுத்தி ஒரு கால ஓட்டத்தை கடத்தியிருப்பார் படத்தொகுப்பாளர்.


காட்சி 1: படத்தின் துவக்கத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பாடல் வரிகளை திருத்தி எழுதிக்கொண்டிருப்பார்.

காட்சி 2: ரோஜர் டெய்லரையும், ப்ரையான் மேரியையும் சந்தித்த ஒரு

வருடம் கழித்து மீண்டும் அதே இடத்தில் பேப்பர் படித்துக்கோண்டு நண்பர்களுக்காக காத்திருக்கும் அந்த ஒற்றை காட்சியை மீண்டும் பயன்படுத்தியிருப்பார்.


அதாவது காலங்கள் மாறினாலும் அவர் இன்னமும் தன் இயல்பில் இருக்கிறார் என்பதை ஒரு ஷாட்டில் Transition ஆக பயன்படுத்தியிருக்கிறார்.


இப்படியாக அணு அணுவாய் படத்தின் ஒவ்வொரு செல்களிலும் படத்தொகுப்பாளரின் உழைப்பு தெரிகிறது. குறிப்பாக பிரெட்டியின் எமோஷனான சீனகளில் ஒப்பேரா இசையை பயன்படுத்தியிருந்த விதம்.


ஏனெனில் ஒப்பேரா இசையின் மிகப்பெரும் விசிறியாக இருந்திருக்கிறார் பிரெடி. மேரியிடம் மோதிரம் கொடுக்கும் போதும், மேரியுடன் போனில் பேசும் நீண்ட உரையாடலிலும் பின்னால் ஒப்பேரா இசை மெல்லிய ஓசையில் ஒலித்துக்கொண்டிருக்கும்.


சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட பிறகு அந்தப்படத்தின் ஒரு காட்சியை வெளியிட்டு, அதில் 77 நொடியில் 50 வெட்டுகளை நிகழ்த்தியிருக்கும் இப்படம் ஆகச்சிறந்த படத்தொகுப்புக்கு உதாரணம் என வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவு. பெரிய வைரலனாது. பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.


என்னைக்கேட்டால் அவரின் ஆகச்சிறந்த படத்தொகுப்பு உத்திக்கு உதாரணமாக கீழே வரும் காட்சியை சொல்லுவேன்.


மியூசிக் வீடியோக்கள் முளைக்கத்துவங்கிய காலகட்டத்தில் அடுத்த படியாக அந்த கலாச்சாரத்தில் அடியெடுத்து வைக்கிறது ’குயின்’. அப்போது ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தனது பாலினம் குறித்த சர்ச்சையான வாக்குவாத்தத்தால், மிகுந்த மன உலைச்சலில் இருந்தார் பிரெட்டி


அதற்கு தகுந்தவாறு


BUT LIFE STILL GOES ON…

I CANT GET USED TO LIVING WITHOUT YOU BY MY SIDE


என்ற பாடல் காட்சி படமாக்கப்படும் ஒரு காட்சியின் படத்தொகுப்பு ஆகப்பெரும் கலையாக பார்க்கிறேன். பாருங்கள் அதன் காட்சி அடுக்குகளை.


1. கேமிராவில் எடுக்கப்பட்ட பிரெட்டியின் வீடியோ

2. அதை ஒளிப்பதிவு செய்யும் காட்சி

3. படப்பிடிப்பு முடிந்த பின் பிரெட்டியின் மனநிலை (க்ளோசப்) பிறகு திரும்பும் கேமிராவில் தன் நண்பர்கள் மகிச்சியுடன் இருக்கும் காட்சி

4. கேமிரா வீடியோ

5. பின்னால் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பெண்ணின் ஆடையில் மன உலைச்சலில் அமர்ந்திருக்கும் பிரெட்டி

6. கேமிரா வீடியோ

7. ஒளிப்பதிவு செய்யும் காட்சி

8. சலிப்புடன் அமர்ந்திருக்கும் பிரெட்டி காதுகலில் அணிந்திருக்கும் தோடுகளை கழற்றி வைக்கும் போது பாடல் முடிவுறுமாறு காட்சிகளை தொகுத்திருப்பார் ஓட்மன்.


இப்படியாக மூன்று வெவ்வேறு காட்சிகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து ஒரு கோர்வையாக்கிருப்பார். படப்பிடிப்பு முடிந்த பிறகான ஒரு காட்சியை பாடலின் துவக்கத்தில் பயன்படுத்தி அவர் பாடல் ஒளிப்பதிவு செய்யும் போது எந்த மனநிலையில் இருந்திருப்பார் என்பதையும் அவர் நண்பர்களோடு எந்தளவு விலக்கிகொண்டிருக்கிறார் என்பதையும் காட்சிகளின் மூலம் உணர்த்திருப்பார்.


ஏனெனில் அவரது பாடல்கள் அத்தனையும் அவரது உணர்வுகளே.


1. முதன் முதலில் ரோஜர் டெய்லரையும், ப்ரையான் மேரியையும் சந்திந்து வாய்ப்பு கேட்க I KNOW WHAT I AM DOING….I GOTTA FEELING என்றும்.

2. 6 நிமிட பாடலை 3 நிமிடமாக்க வேண்டும் என நிர்பந்தித்த நிறுவன உரிமையாளரிடம் சண்டை போட்டுவிட்டு, அடுத்த கச்சேரியில்

SO YOU THINK YOU CAN STONE ME AND SPIT MY EYE என்றும்

3. இசைக்கருவிகளே இல்லாமல் ”WE WILL ROCK YOU” என்றும்

4. காதலியுடனான பிரிவின் போது ”LOVE OF MY LIFE YOU HURTING ME. YOU HAVE BROKEN MY HEART” என்றும்

5. கடைசியில் தனக்கு எய்ட்ஸ் உள்ளது என்று தெரிந்த பிறகான LIVE AID இசை நிகழ்ச்சியில்


MAMA DIDN’T MEAN TO MAKE YOU CRY,

MAMA IF I AM NOT BACK AGAIN THIS TIME TOMORROW

TOO LATE MY TIME HAS COME


என்றும் வரிகளில் தன் வலிகளை கரைத்துக்கொண்டே தன் வாழ்க்கையையும் கரைத்துக்கொண்டார்.


பிரெட்டி எழுதிய பொஹிமியன் ராப்சோடி பாடலுக்கான நிகழ்ச்சி, வீடியோ வணிகத்தின் வரலாற்றில் முதல் வீடியோ கிளிப்பாக மாறியது,


ஒரு கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் காலம் ஏதேனும் ஒரு வழியில் அவரை நம்மிடம் சேர்த்து விடுகிறது.


எப்படிப்பாத்தாலும் நீயும் நானும் ஒன்னு தான சார்…


எங்கள் மெழுகுவர்த்தியின் இரு முனைகளும் அனலில் தான் உறங்குகின்றன.

Comments


bottom of page