top of page

Sun Music to 4K Resolution

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Sep 15, 2024
  • 3 min read

இப்போதிருக்கும் 40 Inch பிளாஸ்மா டிவிக்கள் இல்லாத CRT டிவிக்களை கொண்டிருந்த 1990-2010 காலகட்டத்தில் வாழ்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் பார்க்கும் அந்த குறுகிய தொலைக்காட்சிப்பெட்டிக்குள் தெரிகின்ற காட்சிகள் தான் அவர்கள் உலகம்.


ஒரு வேளை ஊரிலேயே பெரிய பணக்காரராக இருக்கும் பட்சத்தில், இருப்பதிலேயே பெரிய தொலைக்காட்சியை வாங்கிப்பார்த்தாலும் சிறிய டிவியில் பார்க்கும் அதே காட்சியளவு தான் Scale செய்யப்பட்டு பெரிதாக தெரியுமே தவிற அதில் துல்லியமான details இருக்காது.


அக்காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் நாம் பார்த்த திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்களின் காட்சியின் பரப்பளவு (Video Resolution) என்பது Full HD (1920 x 1080) கூட இல்லை என்று 2010ஆம் ஆண்டு விஸ்காம் படிக்கும் போது தான் எனக்குத் தெரிந்தது.


ஆம். நாம் பார்த்துக்கொண்டிருந்தது வெறும் 720 x 576 pixel தரத்தில் தான்.

ஊசியை வைத்து பொறுமையாகவும் நுணுக்கமாகவும் எண்ணினால் 720 புள்ளிகளை பக்கவாட்டிலும், 576 புள்ளிகளை செங்குத்தாகவும் உங்களால் எண்ணிவிட முடியும். 576 புள்ளிகளில் ஒவ்வொன்றுக்கும் 720 புள்ளிகளை சேர்த்தால் (720 x 576) மொத்தம் கிடைப்பது 4,14,720 புள்ளிகள். அதாவது 4.14 Mega Pixelகள்.


பக்கத்து வீட்டில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்ட கருப்பு நிற கேபிள் ஒயர் வழியே வரும் சிக்னல்களால் அவ்வளவு கனத்தைத்தான் தாங்க முடியும். எந்த தொலைக்காட்சியில் பார்த்தாலும் Pixelகள் அளவு ஒன்று தான். காட்சிகளின் தரம் என்பது பளிச்சிடும் வண்ணங்களில் மட்டுமே இருந்தது.

அப்போது துல்லியமான அகன்ற காட்சிகளை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே வழி திரையரங்கம் மட்டுமே. அதனால் தானோ என்னவோ, தொலைக்காட்சி வந்த பின்பும் கூட மீண்டும் மக்கள் திரையரங்கை நாடியிருப்பார்கள் போல. அதன் துல்லியமும் தரமும் ஒரு போதும் தொலைக்காட்சிகளால் கொடுக்க முடியாமல் இருந்தது.


’யூத்’ திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் திரையரங்கிற்கு பெற்றோரை சார்ந்திருந்த சூழலில், திரையரங்கில் பார்க்க முடியாமல் போனது.


’ஆல் தோட்ட பூபதி’ பாடல் ஹிட்டடித்த காரணத்தால் தொலைக்காட்சியின் Prime Time இல் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. அதே சமயம், ’சர்க்கரை நிலவே’ பாடலையும் ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் தவறியதில்லை.


கல்லூரி விழாக்களில் ஆட வைக்கும் தாரை தப்பட்டைகள் போன்ற இசைக்கருவிகள் கொண்ட Beat Songs வகையறாக்களான ”நான் ஆட்டோக்காரன், என் பேரு படையப்பா, தேவுடா தேவுடா, விக்ரம் விகரம், இளமை இதோ” போன்ற Title Songs, Heroism பாடல்களை மட்டுமே மனம் விரும்பியது அன்றைய பள்ளி மாணவனின் பால்ய மனம்.


இதனால் 'ஆஹா’ திரைப்படத்தில் ’முதல் முதலில் பார்த்தேன்’, மூன்றாம் பிறையில் ‘கண்ணே கலைமானே’ போன்ற மெலோடியான பாடல்கள் எல்லாம் வேப்பங்காயாக கசந்தது. அதில் 'சர்க்கரை நிலவே’ பாடலும் அடக்கம். (குணா படத்தின் 'கண்மணி அன்போடு’ மட்டும் விதிவிலக்கு)



ஆனால் பாடலின் இறுதியில் வருகிற,


"நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்


மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்


சுகமான குரல் யார் என்றால்

சுசீலாவின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்

என நீ சொன்னாய்


கண்கள் மூடிய புத்தர் சிலை

என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பதே சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்


அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க

என்னை ஏன் பிடிக்காது என்றாய்...?"


என்ற வரிகள் மட்டும் அப்போதே என்னை ஈர்த்திருந்தது.


ree

காதல் கொண்ட நாயகனின் பூரிப்பும், பிரிதலில் வாடும் தாபதமும் இதற்கு முன்பு நிறைய படங்களில் பார்த்திருந்தாலும், நிராகரிக்கப்பட்ட அவன் காதலின் பிறகான அவன் தரப்பு கோபத்தில் கூட அறம் கடைபிடிக்கும் நாயகன், தன் சுயம் இழக்கத் தயாராக இல்லாமல், அதே சமயம் தன் வேதனைகளை வெளிப்படுத்தாமல் இருக்கவும் முடியாமல் நாயகன் படும் பாடு வெளிப்படுவது புது விதம்.


அதை விடவும், திரையில் பாதியாக தெரியும் அளவுக்கு கேமராவுக்கு நெருக்கமாக ஒரு பாறை மேல் விஜய் சாய்ந்துகொண்டிருக்கும் ஓவியம் போன்ற ஒரு அழகான Frame இல், எவ்வித வெட்டுமின்றி நான்கு வரிகளை பாடுவார்.


ree

”1. காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

2. உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை.”


என்ற வரிகளில் 'என் உணர்வுகள் உங்களுக்கு சொன்னால் புரியாது. அதை நீங்கள் உணரும் போது தான் புரியும்’ என்பதை மெல்லிய புன்னகையுடன் சொல்லிவிட்டு அடுத்த வரியை தொடர்வார்....


”3. காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல...”


ree

என்று சொல்லும் போதே, நம்பப்பட்டு பின் இல்லாமல் போன தன் காதலை எண்ணி சட்டென்று அவர் முகமெங்கும் சோகத்தின் நிழல் ஒட்டிக்கொள்ளும். சுதாரித்துக்கொண்டவர் கண்ணீரை துடைத்துக்கொண்டு,


“4. வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை”

என்றபடி சோகத்தை மறைத்து சிரிக்கத்துவங்குவார்.


ree

இக்காட்சியை பார்ப்பதற்கேனும் அத்தனை பெரிய திரையரங்கில் அப்படத்தை நான் பார்த்திருக்க வேண்டும். வெறும் 4.14 Mega Pixelகள் கொண்ட ஒரு பெட்டியில் அடைத்து அத்தனை ஆண்டுகள் பார்க்க வேண்டிய சூழல்.


ஆனால் அத்தனை சிறிய தொலைக்காட்சிப் பெட்டியிலும் நாயகனின் நுண்ணிய அக உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதென்றால், அதற்கேற்றவாறு, காட்சியை வடிவமைத்த (Framing) ஒளிப்பதிவாளர் நட்டி (N.Nataraja Subramanian) அவர்களின் தனித்தறமையே அதில் பிரதானம்.


பிலிம் ரோலில் இருந்து Remastering செய்யப்பட்ட பாடலை, இப்போது ஆறு மடங்கு உயர்ந்த தரத்தில் பார்க்கும் போது, படம் பிடிக்கப்பட்ட காட்சியின் அழகியலும், Detail-ம் இன்னும் ஆழமாகத் தெரிகிறது.


சிறு வயதில் கே டிவியிலும், சன் டிவியிலும் இப்பாடலை பார்த்தவர்களுக்கு, இப்போது வெளியாகியிருக்கும் இந்த 4K Version நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்.


இப்போது நாம் வைத்திருக்கும் 4K டிவியில் நீங்கள் எண்ணியெல்லாம் பார்க்க முடியாது. காரணம், கூடியிருக்கும் அதன் Resolution. 3840 (அகலம்) x 2160 (உயரம்) pixel. இதன் மொத்த Pixelகள் 23 லட்சத்தி நாலாயிரம் மட்டுமே. (23 Mega Pixel)...

Comments


bottom of page