top of page

தூரிகை வரைய மறந்த வானம்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Mar 30
  • 3 min read

Updated: Mar 30

Doctor Who – TV Series

Season 5 – Episode 10 (2010)


டாக்டர் மற்றும் அவரது தோழி ஏமி பாண்ட் இருவரும் பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்கிறார்கள். அங்கே உலகப்புகழ்பெற்ற ஓவியர் ஒருவருடைய அரிய ஓவியங்கள் மட்டும் தனியறையில் வைகப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மேனேஜர், ஒவ்வொரு ஓவியங்களை பற்றியும் விவரித்துக் கொண்டிருக்கிறார்.


அதில், தேவாலய ஓவியம் ஒன்றில் மட்டும் ஒரு விசித்திரமான உருவம் தெரிவதை பார்க்கும் இருவரும் அது என்னவாக இருக்கும் என்ற விறுவிறுப்பில், அந்த ஓவியம் வரைந்த காலகட்டத்தை மெனேஜரிடம் கேட்கிறார்கள். ஓவியர் இறப்பதற்கு ஒரு ஆண்டு முன்பாக வரைந்தது என்று 1890 ஆம் ஆண்டை குறிப்பிடுகிறார் மேனேஜர். உடனே அந்த ஒவியனை பார்க்க கால இயந்திரத்தின் உதவியுடன் 1890-ஆம் ஆண்டிற்கு பயணிக்கிறார்கள் டாக்டரும் ஏமியும்.


அந்த ஓவியனின் காலகட்டத்தை அடைந்த இருவரும், தன் கலையின் மதிப்பு தெரியாத ஒரு கலைஞன் உலகத்திடம் போராடுவதை காண்கிறார்கள். எதிர்காலத்தில் பல கோடி பெறுமானமுள்ள ஒவியம் ஒன்றை, 1890ல் ஒரு பாட்டில் மதுவுக்காக உணவக உரிமையாளரிடம் விற்க தயாராகிறான் அந்த ஓவியன் (Tony Curran). ஆனால் அதைக்கூட வாங்க அந்த உரிமையாளர் தயாராக இல்லை.


”என்ன ஓவியம் இது? உன்ன மாதிரியே இல்ல. கண்டதை வரைந்து கொடுக்குற” என்று அவன் மீதே வீசியெறிகிறான் முதலாளி. அந்த ஓவியனை சுற்றியிருப்பவர்கள் யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.


அங்கிருந்து ஓவியனை கூட்டிவரும் டாக்டரும், ஏமியும் ஓவியனிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் அந்த ஓவியனுக்கு ஏமியை பிடித்துபோகிறது. அவள் கூந்தலின் ஆரஞ்சு நிறத்தை ரசிக்கிறான்.

ree

இனிமேல் வரையப்போகும் தேவாலய ஓவியத்தை பார்க்க டாக்டரும், ஏமியும் ஓவியனுடன் செல்கிறார்கள். ஓவியன் தேவாலயம் முன்பு வரையத்துவங்குகிறான் . நேரம் கரைகிறது. மாலை நேரத்தில், தேவாலயத்தின் ஜன்னல் வழியே ஒரு விசித்திரமான உருவம் ஓவியன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது. உடனே உள்ளே சென்று அந்த மிருகத்தை தாக்குகிறார்கள். அடிபட்டு கிடக்கும் மற்ற யார் கண்ணுக்கும் தெரியாத அந்த மிருகத்திற்காக வருந்துகிறார்கள்.

ree

அன்றைய இரவு வானத்தை பார்த்தபடி மூவரும் நேரத்தை கழிக்கிறார்கள். டாக்டருக்கும், ஏமிக்கும் தெரிகிற வானம் அந்த ஓவியனுக்கு மட்டும் வித்தியாசமாக தெரிகிறது.


“வானத்தைப்பார். இது இருட்டுமில்லை. கருப்புமில்லை. அதற்கென ஒரு வடிவில்லை. கருப்பு என்பது எனக்கு நீல நிறத்தில் தெரிகிறது. அதோ! அங்கே மெல்லிய நீல நிறம். கருப்பு நிறத்தோடும் நீல நிறத்தோடும் காற்றோடு கலந்து, அதில் மஞ்சள் நிற நட்சத்திரங்கள் மின்னுவதை தன் அகக்கண்களின் வழியே காண்கிறான் ஓவியன்.


அடுத்த நாள் கிளம்பும் டாக்டரும் ஏமியும், அந்த ஓவியனையும் தங்கள் நிகழ்கால பாரிஸ்க்கு (2010) முன்பு சென்ற அதே அருங்காட்சியகத்திற்கு அழைத்து வருகிறார்கள். அங்கே தனியறையில் தனது ஓவியங்களை அத்தனை பேர் பார்த்துக் கோண்டிருப்பதைப்பார்த்து வாயடைத்துப் போகிறான் அந்த ஓவியன். அதே சமயத்தில், டாக்டர் மேனேஜரை அழைத்து இந்த ஓவியரைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்கிறார். அவர் பேச ஆரம்பிக்க, முதுகை காட்டியபடி திரும்பி நின்று கொண்டு அதையெல்லாம் கேட்கிறான் ஓவியன்.

ree

"என்னைப் பொறுத்தவரை இந்த ஓவியர் எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த ஒவியர். எல்லாக் காலத்திலும் மிகவும் பிரபலமானவர். மிகவும் நேசிக்கப்படுபவர், வண்ணங்களின் மீதான அவரது ஆளுமை மிகவும் அற்புதமானது. அவர் தனது வதைபட்ட வாழ்க்கையின் வலியை நிலையானதாக மாற்றினார். அழகு வலியை சித்தரிப்பது எளிது. ஆனால், உங்கள் பேரார்வத்தையும் வலியையும் பயன்படுத்தி நமது உலகின் பரவசத்தையும் மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும் சித்தரிக்க முடியும். இதற்கு முன்பு யாரும் இதைச் செய்ததில்லை. ஒருவேளை யாரும் ஒரு போதும் செய்யமாட்டார்கள். பிரான்ஸ் வயல்களில் சுற்றித் திரிந்த அந்த விசித்திரமான பைத்தியக்காரன் உலகின் மிகச் சிறந்த கலைஞன் மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவன்." என மேனேஜர் பேசி முடிக்கிறார்.

ree

இதுவரை தன்னை யாரும் பொருட்படுத்தாத போது, முதன் முறையாக தன்னையும் தன் படைப்புகளையும் ஒருவர் பாராட்டுவதை முதன்முறை கேட்கும்போது அவனால் அழாமல் இருக்க முடியவில்லை. கண்ணீருடன் மேனேஜரை கட்டியணைத்து, அவர் கன்னங்களில் முத்தமிடுகிறான்.


அதன் பின்னர், ஓவியனை வழியனுப்ப டாக்டரும் ஏமியும் மீண்டும் கடந்த காலத்திற்கு சென்று விட்டு தங்களது காலத்திற்கு திரும்பும் வேளையில், "நீங்கள் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்கள் திறமையை உலகம் வருங்காலத்தில் கொண்டாடப்போகிறது. ஆக, தவறான எண்ணத்திலிருந்து வெளியே வாருங்கள்" என்று சொல்லிவிட்டு செல்கிறார் டாக்டர். அவர்களை வழியனுப்பும் ஓவியன், ஏமியை பார்த்து உன்னை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்கிறான்.


மீண்டும் சமகாலத்திற்கு (2010) வருகிறார்கள். அந்த ஓவியனுக்கு தன் ஓவியங்களின் அருமை தெரிந்த பட்சத்தில், இப்போது மொத்தமும் மாறியிருக்கும். 37 வயதில் இறக்காமல் இன்னும் நிறைய ஓவியங்கள் வரைந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவரது ஓவியங்கள் இருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள். ஆனால் ஓவியங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.


அந்த ஓவியனின் அரிய ஓவியங்களில் கடைசி ஓவியத்தை காண்பிக்கும் மேனேஜர், முன்பு சொன்னது போலவே ”37 வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டார்” என்று சுற்றுலா பயணிகளுக்கு சொல்கிறார்.

ree

கண்களில் கண்ணீர் ததும்பும் ஏமிக்கு ஒன்று மட்டும் புரிகிறது. நாம் இறந்த காலத்திற்கு சென்றதினாலோ, அந்த ஓவியனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தாலோ அவனது மரணத்தை நம்மால் தடுக்கவோ, தள்ளிப்போடவோ முடியவில்லை.

ree

ஆனால், இப்போது இவர்கள் பார்க்கும் தேவாலய ஓவியத்தில் அந்த விசித்திர உருவம் நில நீரத்தால் மறைக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் ஏற்படுத்திய மாற்றம், எதிர்காலத்தில் மாறிப்போயிருக்கிறது.

அங்கே தனியாக இருக்கும் ஒரு ஓவியத்தை பார்க்கிறாள் ஏமி. சூரிய காந்தி பூக்களை ஏந்திய ஜாடியை கொண்ட அந்த ஓவியத்தில், ‘ஏமிக்காக’ என்று குறிப்பிட்டு அவனது பெயரை கையோப்பட்டிருப்பதை பார்க்கிறாள் ஏமி.


வின்சென்ட்.


ree

வின்சென்ட் வான்கோ உயிரோடு இருக்கும் வரை அவரது ஒரு ஓவியம் கூட சமகால ஓவியர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக, எதிர்மறையான விமர்சனங்களால் குத்திக் கிழிக்கப்பட்டிருக்கிறார்.


அந்த சொந்த ஊரில் அவரது ஓவியத்தை வாங்கிக்கொள்ள ஒருவர் கூட தயாராக இல்லை. அவர் வாழ்வில் மொத்தம் விற்றது ஒரே ஓவியம் மட்டுமே. அதுவும் வீட்டு வாடகை தராததால், அவரது ஓவியத்தை வீட்டின் உரிமையாளர் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.


இன்று உங்களை முட்டாள் என்று சமூகம் சொல்லலாம்.


சமூகம் ஒவ்வொரு காலத்திலும் மாறும்.


Happy Birthday Van Gogh ❤


  • ஜி.ஏ. கௌதம்

Comments


bottom of page