காதலில் சொதப்புவது எப்படி ?
- Gowtham G A
- Feb 8, 2023
- 1 min read
அவன் : ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சிட்டே இருந்தேன். இன்னைக்கு உன்கிட்ட சொல்லியே ஆகணும்...
அவள் : அடேங்கப்பா. சார் சீரியஸாலாம் பேசுவீங்களோ !
(நீண்டு சென்று கொண்டிருந்த வீடியோ காலின் உரையாடலில் குறுக்கிட்டபடி)
அம்மா : டேய் ! எவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன். போய் பால் வாங்கிட்டு வாடா... உங்கப்பா வேற வந்துருவாரு...
அவன் : ('உர்ர்ர்ர்' என்ற தோனியில் போனை கீழ இறக்கிவிட்டு இடதுபுறம் திரும்பி) அம்மா ! மளிகை கடை ரெண்டு வீடு தள்ளி தான இருக்கு. நீ போக மாட்டியா ? நான் பிஸியா இருக்கேன்.
(என்ற படி மீண்டும் போனை மேல் எடுத்தவன், Mute போட மறந்ததை எண்ணி கண்களை இறுக்கிக் கொண்டான்)
அவள் : பாரேன். அம்மா புள்ளையா இருந்தவன் இப்ப எதிர்த்தெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டான். அவ்ளோ முக்கியமான விஷயமா ?
அவன் : ம்ம்ம்ம் (என்றபடி மெல்லிய கண் அசைவுகளில்)
அம்மா : என்னடா ? ஷெல்ப்ல சில்லரை வேற இல்ல. இவன் வேற போக மாட்டேங்குறான். அப்படி போன்ல என்ன தான் பேசிட்டு இருக்கானோ !!!
( அம்மா பேசுவதை கேட்ட அவள் அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள்)
அவன் : (பல்ப் வாங்கிய கடுப்பில்) ஐயோ ! என் பர்ஸ்ல இருக்கும்... பாரும்மா...!
(என்று பேசி முடித்தவன் மீண்டும் அவளை பார்க்க)
(சிரித்தவள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு)
அவள் : சரி சொல்லு...
அவன் : அது வந்து...!!!
அவள் : அது வந்து...??? (புருவத்தை உயர்த்தியபடி)
அவன் : I Think... !!!!
அவள் : I Think... ??? (கண்களில் ஆர்வத்துடன்)
அவன் : I am in...
(சொல்லி முடிப்பதற்குள்)
அம்மா : டேய்....!!!
(சட்டென மேலே பார்த்தான்.போனுக்கு பின்னால் அம்மா கையில் பர்ஸுடன்... அதில் உள்ளிருந்த புகைப்படத்தை காட்டியபடி,)
அம்மா : என்னடா பர்ஸ்ல என் போட்டோக்கு பதிலா யாரோ ஒரு பொண்ணு போட்டோ இருக்கு. யாருடா இந்த பொண்ணு ?
(அதிர்ச்சியில் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தவன், திரும்பி போனில் அவளை பார்க்க)
அவள் : "உன் மருமகள், பேரு அனிதா" ன்னு உங்கம்மா கிட்ட சொல்லு...
(என்றவாறு வெட்கத்துடன் வீடியோ அழைப்பை துண்டித்தாள்)



Comments