முள்
- Gowtham G A
- Jul 19, 2023
- 2 min read
Updated: Jul 21, 2023

என் கைகடிகாரத்தின் வாரை மாற்றிவிட்டு அப்படியே செல்லையும் மாற்றிவிடலாம் என்று அருகிலிருந்த கடிகாரம் பழுதுபார்க்கும் ஒரு கடைக்கு சென்றேன். மிக சிறிய கடை. இரண்டு பேருக்கு மேல் அருகருகில் நிற்க முடியாத பரப்பளவு. எனவே நான் கடைக்கு கிட்டத்தட்ட வெளியில் நின்று கொண்டிருந்தேன். அங்கே எனக்கு முன்பாக ஏற்கனவே ஒரு கைக்கடிகாரத்தை கடைக்காரர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் அந்த பழைய கைக்கடிகாரத்தின் வயதில், கட்டம் போட்ட சந்தனக்கலர் சட்டையும், அடர் நீல நிற கால்சட்டையுடன் துடைக்காத மூக்குக்கண்ணாடிஅணிந்திருந்த ஒரு வாடிக்கையாளர். தனது மனைவியின் கைக்கடிகாரம் என்று குறிப்பிட்ட நினைவு. அறுவை சிகிச்சை நிகழும் போது வெளியில் காத்திருக்கும் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தவர், பழுது நீக்கிய அந்த கைக்கடிகாரத்தின் முட்கள் நகருவதை பார்த்த பிறகு தான் அவருக்கு உயிரே வந்தது. முகம் முழுக்க அத்தனை புன்னகை.
நான் கடைக்காரர் அருகில் நகரும் போது, சரியாக அவரது கைக்கடிகாரத்தை துடைத்து கொடுத்துவிட்டு, எனது கைக்கடிகாரத்தை வாங்கி அவர் பார்ப்பதற்கு முன்பு சட்டென்று இன்னொரு உருவம் எனக்கு இடையில் புகுந்தது. சுவற்றில் மாட்டும் பெரிய கடிகாரம் ஒன்றை அவர் முன் வைத்தார். அதைப்பார்க்க குறைந்தபட்சம் பத்து அல்லது இருபது ஆண்டுகள் கடந்திருக்கும். அதை கடைக்காரரிடம் கொடுத்து "நீங்கள் நான்கு மாதம் முன்பு பழுது பார்த்துக் கொடுத்த கடிகாரம் இப்போது மீண்டும் வேலை செய்யாமல் போய்விட்டது" என்று சொல்லி அதை மீண்டும் பழுது பார்க்க முடியுமா என்று அதன் உரிமையாளர் கேட்டார்.
அந்த கடிகாரத்தை வாங்கிய கடைக்காரர் ஒரு நொடி யோசித்துவிட்டு கடகடவென அதன் பின்னால் இருக்கும் பேட்டரியை கழட்டி புதிதாக இன்னொரு பேட்டரியை போட்டு வேலை செய்கிறதா என்று பார்த்தார். வேலை செய்வது தெரிந்தவுடன் "பேட்டரி தீர்ந்துவிட்டது. அதனால் தான் வேலை செய்யவில்லை. கடிகாரம் ஒன்றும் பழுதாகவில்லை. நன்றாகத்தான் இயங்குகிறது. இப்போதெல்லாம் எந்த பேட்டரியும் நான்கு மாதம் தாண்டுவதில்லை" என்ற அதிர்ச்சித்தகவலை கொடுத்த கடைக்காரர், "பேட்டரிக்கு இருபது ரூபாய் மட்டும் கொடுங்கள்" போதும் என்றார்.
பிறகு, என் கைக்கடிகாரத்தை வாங்கிப் பார்த்தவர் "இந்த மாடல் கைக்கடிகாரத்திற்கு இத்தனை ரூபாய்க்கு செல் போட்டால் இத்தனை மாதங்கள் நீடிக்கும். இந்த ரூபாய்க்கு போட்டால் சீக்கிரமே தீர்ந்துவிடும். இந்த மாடல் வாரை வாங்கினால் சீக்கிரம் போய்விடும். வாரை இப்படி பயன்படுத்துங்கள் மடிப்பு ஏற்படாது. உங்கள் வியர்வை பட்டு அடியில் துருப்பிடிக்கும். அதனால் வெளியில் சென்று வந்தவுடன் கைக்கடிகாரத்தை துடைத்துவிடுங்கள். நீண்டகாலம் உழைக்கும்" என்று வெளிப்படையாக சொல்லி அவரே நல்ல நிறுவனங்களின் பெயரை பரிந்துரைத்தார்.
கைக்கடிகாரத்தை கழட்டிப் பார்த்தார். நான் இதுவரை பார்த்திருந்த அத்தனை கைக்கடிகாரத்திற்கும் பின்னால் அதே பரப்பளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்களை இப்பொழுது காணவில்லை. மாறாக, மாரியம்மன் கோவிலில் குண்டம் மிதிக்க வேண்டிக் கொள்ளும் மஞ்சள் நிற சேலை அணிந்த பெண்களின் நெற்றியில் இருக்கும் பொட்டின் அளவில் அத்தனை சிறிதாக அந்த கைக்கடிகாரத்தின் கழட்டப்பட்ட வெள்ளி நிற பின் சட்டைக்கு பிறகான முதுகின் மத்தியில் ஒரு தீவைப்போல இருந்ததை கவனித்தேன். அதை பார்த்துவிட்டு அவரிடமும் "முன்பெல்லாம் வாட்ச்சின் பின்புறம் முழுவதும் பாகங்கள் இயங்கிக் கொண்டிருக்குமே. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்குமே. இப்போது அந்த பாகங்கள் எல்லாம் என்னவாயிற்று" என்று கேட்டேன்.
"அறிவியல் வளர்ச்சி தான். பொதுவாகவே எல்லா இயந்திரங்களின் பாகங்களும் சுருங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்பொழுதெல்லாம் அது போல கைக்கடிகாரத்தின் இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தயாரிக்கும் வேலையை யாரும் இங்கே செய்வதில்லை. மிக எளிதாக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்துவிடத் துவங்கி விடுகிறார்கள்" என்று சொல்லிவிட்டு கண்களில் பொருத்தியிருந்த ஒரு வட்டமான லென்சை கழற்றி இன்ஜினின் ஒரு பாகத்தை காண்பித்து அதில் 'மேட் இன் ஜப்பான்' என்று போடப்பட்டிருந்ததை எனக்கு காண்பித்தார். மேலும் இப்படியாக, ஜப்பான் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அரசியல், இன்னமும் தரத்துடன் பாகங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் நிறுவனங்கள் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. "இவ்ளோ வருஷமா நல்ல கம்பெனின்னு நம்பிட்டு இருக்குற அளவுக்கு நல்ல பேரை மக்கள் கிட்ட சம்பாதிச்சிட்டு இப்ப இப்படி தரம் குறைவான பொருட்களை தயார் செய்யுறது எவ்ளோ பெரிய துரோகம் தெரியுமா!" அவர் சொல்வதும் உண்மை தானே. அதிகம் நம்பிக்கை வைப்பவர்கள் தானே ஏமாந்து போகிறார்கள்...
அவர் நினைத்திருந்தால் அந்த முதியவரிடம் "சரி செய்து வைக்கிறேன். நாளை வாருங்கள்" என்று சொல்லிவிட்டு ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் பேட்டரியை மட்டும் மாற்றி விட்டு, அதற்கு ஒரு நூறு ரூபாய் வாங்கியிருக்க முடியும். என்னிடமும் விலை மலிவான செல் ஒன்றை தலையில் கட்டியிருக்க முடியும். ஆனால் இவர் போன்ற சில எளிய மனிதர்களால் தான் இன்னமும் சத்தியத்தின் மீதான நம்பிக்கை தவறாமல் இருக்கிறது...



Comments