top of page

காத்திருப்பின் குரல்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Apr 22, 2023
  • 3 min read

Updated: Apr 23, 2023


ree

எல்லாரும் எதிர்பார்த்துக்கோண்டிருந்த அந்த நாளின் மாலை வேலையில், தங்களுக்குள் சிரித்தபடியே பேசிக்கோண்டும் கலாய்த்துக்கொண்டபடி மொத்த கிரிக்கெட் வீரர்களும் அலுவலகத்தின் வெளியில் காத்துக்கொண்டிருக்க, சுவற்றில் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு மேலே பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறான் அர்ஜீன்.


தலையை கீழறக்கி தரையைப் பார்த்தவன் இன்னும் யாரும் வரவில்லை என்பதை உணர்ந்தபடியே மூச்சிரைக்கிறான். விளையாட்டு வீரர்கள் சூழ்ந்து இருந்த கூட்டத்தின் நடுவே காக்கி சட்டை அணிந்த ஒருவன் எல்லோரையும் கடந்து அறிவிப்புப் பலகையில் ரஞ்சி போட்டியின் ஹதராபாத் அணியில் தேர்வான விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒட்டுகிறான்.

ree

அங்கு நின்று கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் தேனிக்களைப்போல அந்த பட்டியலைச்சுற்றி ஆர்வமாக தங்கள் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் ஓவென்று கத்திக்கொண்டு தனது சக நண்பர்களே கட்டியணைத்துக் கொள்கிறார்கள். சிலர் ’ச்ச’ என்றவாறு கையை உதறியபடி, முகத்தை தொங்க விட்டு தலையை ஆட்டிக்கொண்டே செல்கிறார்கள். உடன் வந்த சில நண்பர்கள் தேர்வான தனது தோழனை தோளில் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்.


அர்ஜுன் இவை அனைத்தையும் தூரத்தில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருக்கிறான். சர்க்கரை காலியான எறும்ப்புக்கூட்டம் போல, மெல்ல கூட்டம் கலைய துவங்குகிறது. பட்டியலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் ஒருவித ஏளன பார்வையுடன் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அர்ஜுனனை பார்த்தபடி செல்கிறான். அர்ஜூனுக்கு இன்னும் பதட்டம் கூடுகிறது. ஆர்வம் கூச்சலிட மெல்ல நடந்து வந்து கூட்டத்தின் நடுவில் பட்டியலில் உள்ள பெயர்களை வாசிக்க தொடங்குகிறான்.

ree

ஒவ்வொரு பெயராக பார்க்க பார்க்க, அடுத்த வரிசையில் நம் பெயர் இருக்குமோ என்ற கண்களில் ஒரு வித பயமும், ஏக்கமும் கூடுகிறது. 15ஆவது பெயரை அடையும் பொது இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக உயர. சட்டென்று மேலே பார்த்தவன் 12 ஆவது பெயராக தேர்வானவர்கள் பட்டியலில் தனது பெயரை பார்க்கிறான். ஒரு புறம் நிம்மதி பெருமூச்சுடனும், மற்றொரு புறம் ஒரு வித தயக்கத்துடனும் நின்று கொண்டிருக்க, இரண்டு மாத பயிற்சியில் அவனது கடின உழைப்பை பார்த்த சக வீரர்கள் தோளில் தட்டியபடியே வாழ்த்த யாரையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்புகிறான்.

ree

யாரையோ கொலை செய்யப் போவது போன்ற ஒருவித தீவிரமான முகத்துடன் அந்த கூட்டத்திலிருந்து விலகி செல்கிறான். வெளியே வந்தவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு பதட்டத்துடனும் ஒருவித வேகத்துடனும் எங்கோ செல்கிறான். கண்களில் நீர் தேங்க ஆரம்பிக்கிறது. முகம் ஒருவித அழுகை உணர்ச்சியை ஏந்திக்கொள்ள துவங்குகிறது. சிமிட்டிய கண்களுடன் தேக்கிய கண்ணீரை மனதில் வைத்துக் கொண்டு இன்னும் அழாமல் அருகில் இருக்கும் ரயில் நிலையத்தின் பார்க்கிங்க்கு வந்து சேர்கிறான்.

ree

ஒருவேளை அங்கிருக்கும் தனது மனைவியை பார்க்க செல்கிறானா அல்லது சக நண்பனை பார்க்கப் செல்கிறானா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் படியேறி ரயில்நிலையம் உள்ளே வந்தவன் முதலாவது பிளாட்பாரத்தில் வரப்போகும் ரயிலுக்காக, இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கிறான். ரயில் கடக்கும் வரை காத்திருந்தவன் தன்னை கடக்க துவங்கிய பிறகு, உயிர் போகும் அளவுக்கு உரத்த குரலில் ஓ என்று கத்தத் துவங்குகிறான். தனது காத்திருப்பின் அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்த பலனாக தனது குரலில், தனது அழுகையில் அதை தெரிவிக்கிறான்.


கண்களை துடைத்துக் கொண்டவன் இரு கரங்களையும் உயர்த்தியவாறு ’ஓ’ வென்று கத்தி அந்த ரயிலின் ஓசையோடு தனது வெற்றிக்களிப்பை யாருக்கும் தெரியாதவாறு ஒளித்து வைத்தபடியே ரயிலோடு சேர்த்து அனுப்பி விடுகிறான்.

ree

இது தேர்வானதற்கான மகிழ்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல.

• 10 ஆண்டுகால காத்திருப்பின் வலி.

• 500 ரூபாய்க்கு ஜெர்சி வாங்கி தர முடியாமல் போன ஒரு தகப்பனின் வலி.

• தன் மகனுக்காக மீண்டும் வாழ நினைக்கும் ஒரு விளையாட்டு வீரனின் வலி.

• சொந்த வீட்டிலேயே திருட வேண்டிய அளவுக்கு மாறிப்போன சூழலால் தன்னைத்தானே நொந்துகொள்ளும் ஒரு பாமரனின் வலி.

• தான் யார் என்பதை நிரூபிப்பதற்கு முன்பு வரை வயதின் காரணமாக ஒதுக்கப்பட்ட ஒரு நடுத்தர இளைஞனின் வலி.

• நாள் கணக்கில் அலுவலகத்தின் வெளியே ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்த ஒரு விளையாட்டு வீரனின் வலி.

• தான் யாருக்காக இத்தனையும் செய்கிறோமோ அவளே நம்மை ஏளனமாக நினைக்கும் அளவு நிராகரிக்கப்பட்ட ஒரு காதலனின் வலி.

ree

இந்த ரயில் காட்சி ஏதோ ஒரு வகையில் தனக்கு தொடர்புபடுத்திக் கொள்வதாக அதிக அளவில் நண்பர்களால் பகிரப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். நானும் பகிர்ந்திருக்கிறேன். வலி எல்லோருக்கும் பொதுவானது. அவன் அடைந்த அவமானங்கள், காத்திருப்புகள், ஏக்கங்கள், அவனது வலிகள். இதை நாமும் கடந்திருப்போம். பார்த்துக் கொண்டிருப்போம். பார்க்கப்போகிறோம்.


ஏதோ ஒரு தருணம் நம்முடைய நீண்ட நாள் காத்திருப்பு நிஜமாகி போகும்போது அதை இப்படியாக சிலர் கண்ணீரின் வழியே தெரிவிக்கிறார்கள். சிலர் தனது வெற்றியின் வழியே தெரிவிக்கிறார்கள்.

ree

வெற்றியை விட ஆகச்சிறந்த பழி வாங்கல் ஏதுமில்லை.


சினிமா சினிமான்னு போனியே ! எவ்ளோ சம்பாதிச்ச?, புடிச்ச வேலைன்னு போனியே ! எவ்ளோ சேர்த்து வச்சிருக்க?, எப்போ கல்யாணம்?, கடனை எப்படி அடைப்ப?, குடும்பத்த எப்படி பாத்துக்கப்போற?, இனிமேல் என்ன பண்ன போற? இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் சூழல் இல்லாவிட்டாலும் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் அதற்கான பதிலை தேடி எடுத்துத்தருகிறது. வாழ்க்கை ஒன்றும் அத்தனை குரூரமானது இல்லை. நம்பிக்கையோடு போராடுபவர்களை அது அத்தனை எளிதில் கைவிடுவதில்லை.


உண்மையில் அங்கே அழுதுகொண்டிருப்பது அர்ஜீன் அல்ல. வாழ்வின் பல தருணங்களில் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, ஒரு சமயம் மனம் வெடித்து ”எனக்கும் சரியான நேரம் வரும். நானும் ஜெயிப்பேண்டா” என்று கத்திக்கூட சொல்ல முடியாமல், அத்தனை அவமானங்களையும் தனக்குள் புதைத்துக்கொண்டு பொறுமையாக நமக்காக உதிக்கும் அந்த ஒரு நாளுக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்த, காத்துக்கொண்டிருக்கும் நீங்களும் நானும் தான்...


4 Years of Jersey ❤

Comments


bottom of page