top of page

காலம் கடந்து கிடைக்கும் நீதி

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Feb 26, 2023
  • 2 min read

J.C Daniel

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விட கொடுமையானது எனும் தோழர் முத்துக்குமாரின் கடித வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.


செலுலாய்ட் / ஜே. சி. டேனியல் (2013).


இது துயரமான சினிமா கதை அல்ல. சினிமாவை உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு முன்னோடியின் வாழ்க்கை மொத்தமும் துயரமாய் போன உண்மைச் சம்பவம்.


வசதியான குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியல் ஒரு பல் மருத்துவர். சினிமா மீதான அதீத காதலில் அதன் தொழில்நுட்ப கலைகளை கற்றுக் கொள்கிறார். ஆண்டு 1920. இந்தியா முழுவதும் செல்லூலாயிட் சினிமா பிரபலமான நேரம் அது. உடல் மொழியை மட்டும் மையமாக கொண்டு எடுக்கப்படுவதால் அதில் ஒலி (ஆடியோ) இருக்காது. அதைத்தான் நாம் 'ஊமைப் படம்' என கூறுகிறோம்.


மலையாளக்கரையில் சினிமா மோகம் எட்டிப் பார்க்காத தருணம். டேனியல் தனது சினிமா கனவை அங்கு விதைக்க நினைக்கிறார். ஏற்கனவே இந்தியா முழுசும் புழங்கிக்கொண்டிருந்த புராணக்கதைகளை தவிர்த்து சமூக கதைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது டேனியலின் ஆசை. குடும்ப உறவை மையப்படுத்தி ஒரு கதை தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு 'விகதகுமாரன்' (The Lost Child).


ree

அனுபவமின்மை, சரியான சினிமா தொடர்புகள் இன்மை காரணமாக படம் எடுப்பதில் பல தடுமாற்றங்கள். எதிர்ப்பார்த்ததை விட அதிக செலவு. சினிமா எடுக்க ஏற்கனவே நிறைய சொத்துக்களை விற்றிருப்பார். செலவுகள் மேலும் மேலும் கடிக்க மீதமுள்ள சொத்துகளை விற்பதை தவிற வேறு வழி இல்லாமல் போகிறது. இத்தனை துயரிலும் மனைவி ஜேனட், அவரின் சினிமா கனவுக்கு துணை நிற்கிறார்.


படத்தின் நாயகனாக டேனியல் நடிக்க, கதாநாயகியை தேடுவதில் பலத்த சிக்கல் ஏற்படுகிறது. அக்காலகட்டத்தில் சினிமாவில் ஆண்களே பெண் வேட்மிட்டு நடிக்கும் நிலை. சினிமாவுக்கு பெண்களை கொண்டுவர விலைமாதர் வீதிகளிலும் தேடி அலைந்திருக்கிறார்கள்.


தேடிப்பிடிக்கும் ஓர் ஆங்கிலோ-இந்திய பெண் நடிகை கொடுக்கும் நச்சரிப்பில் அப்பெண்னை வேண்டாமென வேறு ஆளை தேடுகிறார். கூத்துகளில் நடிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த ஒரு பெண்னை தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார் டேனியல். சரோஜினி எனும் நாயர் சாதி பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ரோஸம்மா எனும் பி.கே.ரோஸி.


ree

கருத்த மேனியோடு ஜாக்கெட்டும் வேட்டியுமாக படப்பிடிப்புக்கு வருகிறார் ரோஸி. கையில் ஒரு தூக்குச்சட்டி. தீண்டாமையின் கொடுமையையும் ஒடுக்கப்பட்டவர்களின் அன்றைய வாழ்வியல் நிலையும் திகைக்க வைக்கின்றது. நாயர் பெண் வேடத்தில் நகையும், புடவையும், அலங்காரமுமாய் தன்னை பார்த்து கண் கலங்குகிறார். ஜாதி, இனம், மதத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த கலை சினிமா என டேனியல் எடுத்துக்கூறியும் ரோஸியால் தீண்டாமையின் தாழ்மை உணர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ரோஸியின் கதாபாத்திரம் ஆதிக்க சாதியினரின் முகத்தில் அறையும் உண்மை.


கடும் முயற்சியில் திரைப்பட பணிகள் ஒரு வழியாக முடிகிறது. 1930-ல் விகதகுமாரன் (the lost child) மலையாளத்தின் முதல் சினிமாவாக கேரளத்தில் வெளியிடப்படுகிறது. பெருமிதத்தோடு ஊர் அதிகாரிகளையும், பெரியவர்களையும் தனது படத்தை காட்ட அழைத்து வருகிறார் டேனியல். தான் கதாநாயகியாக நடித்த சினிமாவை பார்க்க ஆசையுடன் ஓடி வருகிறாரார் ரோஸி. இவளோடு நாங்கள் படம் பார்ப்பதா என ரோஸியை விரட்டி அடிக்கிறது ஜாதி வெறி.


தாழ்ந்த சாதி பெண்ணை சினிமாவில் உயர்சாதி பெண்ணாக காட்டியதால் பிரச்சனை உருவாகிறது. திரை நாசம் செய்யப்படுகிறது. ரோஸியின் வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப்படுகிறாள். இந்திய சினிமாவில் மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியின் பக்கம் நிரப்பப்படாமல் போனது வரலாற்றின் பெருந்துயரம்.


தனது சினிமா கனவை மலையாள கரையில் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு தமிழ்நாட்டில் பல் மருத்துவராக தனது சராசரி வாழ்க்கைக்கு திரும்புகிறார் டேனியல். சினிமா ஆசை யாரை விட்டு வைத்தது. பின் ஒரு நாள் எதேச்சையாக பல் வலியால் சிகிச்சைக்கு வரும் சின்னப்பாவை சந்திக்கிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட டேனியலின் சினிமா கனவு வெகுண்டெழுகிறது. சம்பாதித்து சேர்த்த மீதமிருந்த மொத்த சொத்துக்களையும் மூட்டை கட்டிக்கொண்டு சென்னை செல்கிறார். சின்னப்பாவின் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு சேர்கிறார்.


தொடர் சினிமா தோல்வி அவரை தளர்வடையச் செய்கிறது. அப்பாவை புரிந்துகொள்ள முடியாததால் பிள்ளைகளோடு இடைவெளி ஏற்படுகிறது. அப்போதும் மனைவி ஜேனட் மட்டுமே அவரோடு உறுதுணையாக இருக்கிறார். டேனியல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு முதுமைக் கோடுகளோடு அமைதியாகி போகிறார். ஒரு பக்கம், டேனியலின் வாட்டும் வறுமை. இன்னொரு பக்கம், மலையாள சினிமா டேனியல் எனும் தந்தையின் அடையாளம் தெரியாமல் வளர்கிறது. அவரை அறிந்து கொண்டு தேடி வருகிறார் மலையாள பத்திரிக்கையாளரான

கோபாலகிருஷ்ணன்.


ஜே.சி. டேனியல் இன்று மலையாள சினிமாவின் தந்தையென அறியப்படுவதற்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. டேனியலின் அங்கீகாரத்திற்காக போராடுகிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த ஆளு தமிழ்நாட்டுக்காரன் தானயா, தமிழ்நாட்டு கவர்மெண்ட் பென்சன் கொடுக்கட்டுமே’ என இன வெறியும் ஜாதி வெறியும் கேரளத்தில் பல் இளிக்கிறது.


எந்தவித அங்கீகரமும் இல்லாமல் 1975-ல் இறந்து போகிறார் ஜே.சி.டேனியல். மரணப் படுக்கையில் இருக்கும் டேனியல் காற்றசைவில் சுவரில் நிழலாடும் காட்சியை தனது செலுலாய்டாக காண்கிறார். கோபாலகிருஷ்ணனின் தொடர் போராட்டம் டேனியலின் மரணத்திற்கு பின் வெற்றி காண்கிறது. ஜே.சி. டேனியல் மலையாள சினிமாவின் தந்தையாக அறிவிக்கப்படுகிறார். திரைப்பட சாதனையாளர்களுக்கு ஜே.சி. டேனியல் விருது வழங்க ஆவண செய்கிறது கேரள அரசு. காலம் கடந்த அங்கீகாரம். பாரதிக்கு நடந்த அதே கதி...

Comments


bottom of page