top of page

நரை

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Jul 21, 2023
  • 2 min read

ree

எப்போதும் போல இரவு உணவுக்குப்பிறகான கை நடுக்கத்தில் தேநீர்க்கடைகளில் தஞ்சம் புகும் சமயத்தில் எப்போதும் காணும் வேலை முடிந்து நண்பர்களை சந்திக்கும் சந்திக்கும் ஐ.டி குடும்பஸ்தர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், இளவட்ட காதலர்கள், நடுத்தர வயது தம்பதிகள், முட்டிக்காலுக்கு கீழ் வரை ஷார்ட்ஸும் இலகுவான டீசர்ட்டும் போட்டுக்கொண்டு, தலைமுடியை கொண்டையாக சுருட்டி கட்டிக்கொண்டு, டொக்கு டொக்கென போனை நோண்டிக் கொண்டிருக்கும் பிரேம் இல்லாத கண்ணாடி அணிந்திருக்கும் ஜிம்மிலிருந்து வரும் அந்த பெயர் தெரியாத பெண் என யாருமில்லாமல் புதிதாக இரண்டு உருவம் அமர்ந்திருந்தது.


கொஞ்சம் முன்னேறி அவர்களுக்கு முன்னிருக்கும் மேசையில் அமர்ந்தேன். வயதான தம்பதிகள். யாருக்கோ காத்திருப்பது போலிருந்தது. அவர்களுக்குள் பேசிக்கொள்ள எதுவுமில்லை போல. நீண்ட நேரமாக நிலவியது மௌனம். நான் எப்போதும் போல சரி டீய குடிச்சிட்டு கிளம்பிடுவாங்க போல என்று நினைத்துவிட்டு டைப்பிக்கொண்டிருந்த வேளை “நான் தான் சொன்னேன்ல அவன் வர மாட்டான்னு” என்று முதல் பேச்சை துவங்கினார் நேரான கோடுகள் கொண்ட ஒரு நாள் அழுக்காகிப்போன சட்டையும் கிரே கலர் பேண்டும் ஓவல் வடிவத்தில் கண்ணாடியும் அணிந்திருந்தவர். தடதடவென தட்டச்சு செய்துகொண்டிருந்த விரல்கள் சட்டென்று வேலை நிறுத்தம் செய்தன.


“இல்லீங்க கோவிச்சிட்டு பொயிருக்கான் திரும்ப வருவான்” என்று குறைந்த ஒலியும் மிகுந்த நம்பிக்கையிலும் பேசினார் மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட வீட்டில் அணியும் சாதா புடவையும் அதற்கு எடுப்பாக மஞ்சள் நிற ஜாக்கெட்டில் அந்த அம்மா. “பேச பேச எந்திரிச்சி போயிருக்கான் அவன் வருவான்னு நினைக்கிறியா” என்ற மூக்கின் மீது ஏறி நின்ற கோவத்தில் அவர் பேச, அவரை சாந்தப்படுத்த மீண்டும் மீண்டும் புடவையை போர்த்தியபடியே காரணத்தை தேடுகிறார் அந்தம்மா.


“இதுக்குத்தான் அன்னைக்கே சொத்த அவன் பேர்ல எழுதி வைக்க வேணாம்னு சொன்னேன். நீ தான் மகன் வளந்துட்டான். கல்யாணமும் ஆகிடுச்சு. காலகாலத்துக்கு ஆக வேண்டியத பண்ணிருவோம்னு சொன்ன. அவன நம்புனதுக்கு எப்படி விட்டுட்டு போயிட்டான் பாரு” என்றார் எரிச்சலுடன். அம்மாவிடம் இன்னமும் அமைதி மட்டுமே எஞ்சியிருந்தது. “சொத்து வரி அது இதுங்குறானே, மாசம் மாசம் கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைச்சது நானு. ஒரு மாசமாச்சும் அவன் கடன கட்டிருப்பானா! அவன் அவன் குழந்தைகள பத்தி யோசிக்காம குடிச்சி குடும்பத்தை சீரழிக்கிறான், இல்ல அதுங்களுக்காக சேத்து வைக்காம அவனவன் வாழ்க்கைய பாக்கறான். குடும்பம் குடும்பம்னு அலைஞ்சதுக்கு இதான் மிச்சம்” என்று சொல்லி முடித்தவர் ஒரு மிடக்கு தேநீரை பருகினார். அந்த அம்மாவோ நேரம் கிடைக்கும் போதேல்லாம் மகன் வருகிறானா என்று பின்னால் திரும்பி சாலையை ஒரு எட்டு பார்த்தார்.


“சும்மா திரும்பி திரும்பி பாக்காத. அவன்லாம் வரமாட்டான்” என்றார் உலர்ந்து போன குரலில். “இல்லைங்க வந்துருவான்” என்றார் கண்ணீர் நிறைக்காத கண்களில் விழுங்கிய குரலுடன் அந்தம்மா. “அவனுக்குன்னு குடும்பம் கொழந்தன்னு ஆகிடுச்சுல்ல. நாமெல்லாம் வேண்டாத ஆளாத்தான் தெரியுவோம். உன் தம்பிக்காரன் சண்டைக்கு எதும் பொயிட போறான். அவன சும்மா இருக்க சொல்லு. இருக்குற பிரச்சனை போதாதுன்னு…” என்று சொல்லிக்கொண்டே அடுத்த மிடக்கை குடித்தார்.


“நீங்களும் எல்லாரு முன்னாடியும் அவனை அப்படி திட்டிருக்க கூடாதுங்க” என்ற அந்தம்மாவிடம் “உன் புள்ளைக்கு ஒன்னுன்னா மட்டும் முந்திக்கிட்டு வந்துருவியே. அவன் சம்பந்தி முன்னாடி அப்படி பேசுறான். கைய கட்டிக்கிட்டு நிக்க சொல்றியா. கால் வயித்து கஞ்சியா இருந்தாலும் கௌரவமா குடிக்கனும். இல்லைன்னா நாண்டுக்கிட்டு சாவலாம்” என்று அவர் சொல்லும் போது அந்தம்மா மூக்கை சிந்த ஆரம்பித்தார். தலையை குனிந்தவர் இடது பக்கமாக திரும்பி குனிந்த தலை நிமிராமல் கண்ணை கசக்கிக்கொண்டிருந்த அம்மாவிடம், “எதாச்சும் சாப்புடுறியா? அவன் பேசினதுக்காக நீ வயித்த காயப்போடாத” என்று சொன்னதில் கோபம் மிஞ்சிய அன்பும், அக்கறையும் கலந்திருந்தது.


அந்த அக்கரையில் அந்தம்மாவிடம் கேட்காமலே தேநீரை ஆர்டர் செய்தார். சொன்ன சில நொடிகளில் ஒரு கண்ணாடி கோப்பையில் சுடச்சுட ஆவி பறக்க தேநீர் அந்தம்மாவின் முன்னால் வைக்கப்பட்டது. கோப்பையின் வெளியில் நீண்டுகொண்டிருக்கும் பிடியில் தளர்ந்த விரல்களோடு எடுத்து மெதுவாக ஊதத்துவங்கினார். இப்போதும் அந்தம்மா திரும்பி ஒரு முறை பார்த்தார். மகன் வரவில்லை. இந்த முறை அவர் எதும் சொல்லவில்லை. அவர் எதுவும் சொல்லாமல் இருப்பதை யூகித்த அந்தம்மா திரும்பி அவரை பார்த்தார். அவர் அந்தம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்த பின் ஒரு வித கூச்ச சுபாவத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டு தலையை குனிந்துகொண்டார்.


அதன் பிறகு இருவரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. அவர் மடியில் வைத்திருந்த ஒரு சந்தன கலர் பையை எடுத்துக்கொண்டு எழுந்தார். அந்தம்மாவும் அவர் பின்னால் சென்றார். கடைக்கு எதிரில் இருக்கும் சாலையில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு ஷேர் ஆட்டோ ஒன்றில் இருவரும் ஏற்றிச்சென்றார்கள். அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கே செல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.


ஆண்டுகள் செல்லச்செல்ல அன்பால் இணைந்த உறவுகளுக்கிடையே வார்த்தைகள் பயனற்று போகிறது. சிறு தொடுதல், கண் பார்வை, மௌனம், பெருமூச்சு இவையே போதுமானதாக இருக்கிறது…

Comments


bottom of page