வரேன்...
- Gowtham G A
- Apr 27, 2023
- 2 min read

அக்டோபர் 12
தனது பிறந்தநாளுக்கு சிறையில் உள்ள கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கிறார் திலீப் (கமல்). அருகில் வார்டன் ராஜகோபால் அவர்கள் செய்த குற்றங்களை விவரிக்கிறார்.

பங்காளித்தகறாரில் மொத்த குடும்பத்திற்கும் விஷம் வைத்த ஆயுள் தண்டணைக்கைதி ஒருவன் தானாக முன்வந்து கைகொடுக்க எத்தனிக்க ராஜகோபால் திட்டுகிறார். திலீப் இருக்கட்டும் என கைகாட்டிவிட்டு கைதிக்கு கைகொடுக்கிறார்.

தங்க நகைக்காக ஐந்து வயது குழந்தையின் கழுத்தை நெறித்தவன், தான் வாங்கிய ஆப்பிளை எகத்தாளமாக அவர்கள் முன்பாகவே கடித்துக்கொண்டு செல்கிறான்.

அடுத்ததாக, ஆண்டணி என்ற கைதியை சுட்டிக்காட்டி இவர் தன் மனைவி மேல் சந்தேகப்பட்டு கொன்றுவிட்டு சிறைக்கு வந்திருப்பதாகவும், அதற்காக இப்போது வருந்துவதாகவும் சொல்கிறார். ஆண்டணியைப் பாத்தவுடன் திலீப்புக்குள் ஒரு வித எண்ண அலைகள் ஓடத்துவங்குகின்றன. இனிப்புகளை வழங்கியவர் தானாக முன்வந்து அவருக்கு கை கொடுக்கிறார்.

எல்லாருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு கிளம்பும் சமயத்தில் திலீப்பிடம் பேசத்துவங்குகிறார் ராஜகோபால். தான் மூன்று ஆண்டுகளாக இந்த சிறையில் வேலை செய்வதாகவும் ஒவ்வொரு பிறந்தநாளிலும் நீங்கள் இனிப்பு வழங்குவதன் காரணம் என்ன என்றும் திலீப்பிடம் கேட்கிறார்.
பெருமூச்சுடன் பேசத்துவங்குகிறார் திலீப்...
“கூண்டுக்கு உள்ளே இருப்பவர்களை தான் சமுதாயம் குற்றவாளி என நினைக்கிறது. கூண்டுக்கு வெளியே நிறைய பேர் இருக்கிறார்கள் தானே.”
”நிச்சயமாக. குற்றவாளி என தெரிந்திருந்தும் சாட்சிகள் இல்லாமல் எத்தனை பேர் தப்பித்திருக்கிறார்களே...” என வருந்துகிறார் ராஜகோபால்.
”100 குற்றவாளிகள் வெளியே இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே இருக்கக்கூடாது அப்படித்தானே!?” என சந்தேக தோனியில் திலீப் கேட்க,
(நடந்தபடியே பேசிக்கொண்டிருந்த ராஜகோபால் சட்டென்று நின்றுவிட்டு)
”ஆமாம். அதிலென்ன சந்தேகம்”
(முன்னால் சென்ற திலீப் திரும்பி ராஜகோபாலிடம்)
”ஆனால் இந்த சிறையால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் நடக்கதுவங்குகிறார்.
”அப்படியா! எந்த விதத்தில்?” என பின்தொடர்கிறார் ராஜகோபால்.
(தொடரும் திலீப்...)
”என் அப்பா அப்படித்தான் எந்த குற்றமும் செய்யாமல் ஏழு ஆண்டுகள் இந்த சிறையில் இருந்தார். அதன் விளைவாக விடுதலையான பிறகும் மனநிலை பாதிக்கப்பட்டு அவுட்டவுஸில் கைதியாக வாழ்ந்துக்கிட்டு இருக்கார். எங்க அப்பா மாதிரி நிறைய பேர் இங்க இருப்பாங்க என்ற நம்பிக்கைல தான் ஒவ்வொரு வருடமும் கைதிகளுக்கு அன்பளிப்பு கொடுத்துட்டு இருக்கேன்.”
என்று சொல்லி முடிக்கும் போது திலீப் குரலின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறையத்துவங்கியிருந்தது.

"நீங்கள் சொல்வது உண்மையானால் I feel very sorry" என வருந்துகிறார் ராஜகோபால்.

"Well...Its Too Late... வரேன்..." என்று சொல்லிவிட்டு கிளம்பியவரிடம்,
"மிஸ்டர் திலீப்...! போறேன்னு சொல்லிட்டு போங்க. நீங்க வந்துட்டு போற இடம் ஜெயில்." என சிரித்தபடி சொல்கிறார் ராஜகோபால்.

அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த திலீப் திரும்பி சிறு இடைவெளி அமைதிக்குப்பிறகு,
"வருவேன்"
(ஒரு நொடி கழித்து)
"என்னுடைய அடுத்த பிறந்தநாளுக்கு..."
என்றபடியே சிரித்துவிட்டு கிளம்புகிறார்.

The Last Line is one Hell of a Brilliant writing...

வசனம் : பாக்யராஜ்
இயக்கம் : பாரதிராஜா
படம் : சிவப்பு ரோஜாக்கள் (1978) 🌹



Comments