top of page

நினைவுறுத்தியவை

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • May 22, 2023
  • 2 min read

ree

குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு விசித்திரமானது. இங்கே சாத்தியமில்லாத அனைத்தும் அவர்களின் உலகில் வெகு இயல்பாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஹல்க்கும் ராமனும் பிரண்ட்ஸாம். வானத்தில் கீறல் விடுகிறதாம். குழந்தைகளை உங்கள் உலகத்திற்கு அழைத்து வராதீர்கள். அவர்கள் உலகத்திற்குள் நீங்கள் சென்று பாருங்கள். அப்பொழுதுதான் அவர்கள் உலகின் பல ஆச்சரியங்களும், நம் கற்பனைக்கு எட்டாத அவர்கள் கற்பனையின் உச்சமும் நீங்கள் காண்பீர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

ree

இன்று தோழர் முதல்வனும், அவன் சகோதரி நிவேதாவும் விறுவிறுப்பாக எதோ செய்து கொண்டிருந்தார்கள். என்னவென்று கேட்டால் ஈபில் டவர் செய்கிறார்களாம். வெள்ளைக்காரன் என்ன ஈபில் டவர் கட்டுவது. நம்ம ஆளு கட்டிருக்கார் பாருங்க. ஈபில் டவர்க்கு கண்ணு முழுக்கு காது எல்லாம் வச்சு. அதைவிட இதோ பாருங்கள் அடுத்த படம் ஒரு பில்டிங் முழுக்க அத்தனை தளங்களும் கழிவறையாம். ஆனால் கை கழுவுவதற்கு மட்டும் மாடிக்கு செல்ல வேண்டுமாம். இது போக டைனோசர் குட்டிகள் போட்டிருக்காம்.

ree

அடுத்ததாக அவர்கள் தயாரித்த ராக்கெட். 9 8 7 என்று எண்களை குறைத்துக் கொண்டே வந்து பூஜ்ஜியத்திற்கு பிறகு, கைகளாலேயே அவர்களின் வானத்திற்கு உயர்த்தி, வானத்திலிருந்து ராக்கெட்டின் ஒவ்வொரு பகுதியாக மேலிருந்து கீழே போடத் தொடங்கினார்கள். கேட்டால் ராக்கெட் வானத்தில் சென்றவுடன் ஒவ்வொரு பகுதியாக தானே கழண்டு விடும். அதைத்தான் நானும் செய்கிறேன் என்று சொல்லியது நாசாவுக்கு ஒரு மினியேச்சர் போல இருந்தது.

ree

முதல்வனை பார்த்துக்கொண்டே பாரதியிடம் சொன்னேன். ”ஒரு வேளை அவள் இங்கிருந்திருந்தால், அவளுக்கு முதல்வனை மிகவும் பிடித்து போயிருக்கும். இந்த மாதிரி சேட்டை செய்யும் புத்திசாலித்தனமான, க்ரியேடிவான குழந்தைகளை அவள் அதிகம் விரும்புவாள்” என்று. இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு பேரும் டக்கென்று என் கண்களை எதிர்பார்த்து நோக்கியபடி ”அது யாரு?” என்று கேட்க, ”அது ஒன்னும் இல்லமா என் பிரண்டு” என்று சமாளித்தேன்.


அடுத்த பேச்சில் வேறு எங்கெங்கோ நகர, ஒரு இடத்தில் தனக்குத்தெரிந்த ஒரு வீடு காலியாகி இருப்பதாக சொன்னார். ஒருத்தருக்கு இந்த வாடகை மிக அதிகம் என்று நான் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு ஆளை வைத்துக் கொள்ளலாமே என அவர் சிபாரிசு செய்ய, அப்பொழுது டக்கென திரும்பிய முதல்வன் ”உங்க ஆள கூப்பிடலாமே. ரெண்டு பேருன்னா வாடகை குறையும்ல” என்று உடைத்து விட்டான். எனக்கு ஷாக்.


நான் மனதிற்குள் வைத்திருந்து வெளியே எப்படி மாற்றிச்சொல்கிறேன் என்பது கூர்மையாக தெரியும் அளவுக்கு ஒரு 7 வயது குழந்தையால் முடியுமா என்ற ஒரு ஆச்சரியம். இந்த பக்கம் நிவேதா எதையும் கண்டுகொள்ளாதது போலிருந்தாள். பாரதிடம் கேட்டேன் ”ஏழு வயது பிள்ளை கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டான். ஆனா 11 வயசு புள்ள வாய் திறக்க மாட்டேங்குதே...” அப்போது அவரிடமிருந்து வந்த பதில் ”வெயிட் பண்ணு ராசா”.


அடுத்து அவர்கள் கிளம்பும் நேரம் தலையை சீவிக் கொண்டிருந்த நிவேதிதா சீவி முடித்த பின், நெற்றியின் ஓரம் இருக்கக்கூடிய முடிகளை பிரித்தெடுத்து அவற்றை விரல்களால் சுற்றி நெற்றியில் இருந்து கன்னங்கள் வரை சுருண்டபடியே தொங்கும் வண்ணம் என் 'அவளைப்போலவே' படர விட்டிருருந்தாள்.


அப்படியே எனக்கு அவளை நினைவூட்டியது. அவளையே ஒரு சிறுகுழந்தையாக பார்த்தது போலிருந்தது. பாரதியிடம் ”இவள் செய்வதை பார்க்கும் பொழுது....” என்று ஆரம்பிக்கும் பொழுதே ”உங்க ஆள் இப்படித்தான் பண்ணுவாங்க கரெக்டா !” அவள் முடித்துவிட்டாள்.


இப்போது பாரதி சொன்னார் ”அவளுக்கு அப்பவே தெரியும். ஆனால் சொல்லாமல் வைத்திருந்து, இப்போது சொல்கிறாள்”. ஒரு பெண்ணால் எத்தனை ரகசியங்களையும், வலிகளையும் துளியும் கசியாமல் மனதிற்குள் பூட்டி வைத்துக்கொள்ள முடிகிறது அல்லது புதைத்துவிட முடிகிறது. ஆண்களால் தான் முடியவே இல்லை. பாவம் புலம்பிச் சாகிறோம்.

Comments


bottom of page