பட்டாம்பூச்சிகள்
- Gowtham G A
- Mar 14, 2023
- 1 min read
Updated: Mar 16, 2023
ஞாயிறு இரவு 9:30 மணி இருக்கும். கிட்டத்தட்ட புத்தக கடையை விட்டு எல்லாரும் கிளம்ப ஆயத்தமாகும் சமயம் கண்ணாடிக்கதவுகளை திறந்த படி உள்ளே நுழைந்தார்கள் அந்த தம்பதி. கையில் ஒரு குழந்தையோடு. உள்ளே வந்தவர்கள், வெள்ளத்தை பார்வையிடும் மந்திரிகள் போல சில நிமிடங்கள் கொஞ்ச தூரம் செல்ல அவர் மனைவி அவருக்கு பிடித்த புத்தகங்களை தனியாக எடுத்துப்பார்த்துக்கோண்டிருந்தார். குழந்தையை கணவர் பார்த்துக்கொள்ள மனைவி புத்தகம் வாங்குவது என்பது நாவல்களிலேயே இதுவரை யாரும் யோசிக்காத கண்கொள்ளாக்காட்சி. ஆனால் அது நிஜத்தில் நடந்தது. சில சமயம் நிஜம் கற்பனைக்கும் அப்பாற்பட்டு உள்ளது. இப்படி ஒரு காட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து காண்பேன் என தெரியவில்லை.
தான் தேர்ந்தெடுத்த புத்தகங்களை ஓரிடத்தில் வைத்து விட்டு குழந்தையை அவர் மனைவி பெற்றுக்கொள்ள, கணவர் தனக்குத்தேவையான ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மனைவி தனியாக எடுத்து வைத்த புத்தகங்களுடன் சேர்த்து பில் போடும் இடத்திற்கு வந்து விட்டார். பில் போட புத்தகங்களை ஸ்கேன் செய்யும் சமயத்தில் அவர்களிடத்தில் இருந்த குழந்தையை காணவில்லை. எங்கே என்று பார்த்தால் அவர்கள் முட்டிக்கு கீழ் உயரத்தில் அந்த பிஞ்சு உயிர் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப்பார்த்துக்கொண்டிருந்தது.
இவர்கள் மற்ற தம்பதிகளைப்போல வார இறுதிகளில் ஷாப்பிங் போகும் ரகம் இல்லை. ஆடைகளிலும் பெரிய அலங்காரம் இல்லை. வெகு இயல்பான தோற்றம். அவர்கள் பிரம்மாண்டத்தை வாழ்க்கையில் பார்க்கிறார்கள் போலும். பில் போடப்பட்டது. 538 ரூபாய் என பில் தொகை பல் இளித்தது.
சரி. 38 ரூபா நான் தரேன். 500 ரூபா நீ கொடு என மனைவியிடம் ஈகோ இல்லாமல் 38 ரூபாய்க்கு இரண்டு 20 ரூபாய் நோட்டுக்களை பாக்கெட்டில் இருந்து எடுத்தார். மீதி பணத்தை அவர் மனைவி பர்ஸில் தேடி ஒரு 500 ரூபாய் நோட்டை நீட்ட எந்த அதை வாங்கி சேர்த்து 540 ரூபாயாக கொடுத்தார் அந்த கணவர். எத்தனை சேட்டைகள் செய்தாலும் அந்தக் குழந்தை கடைசி வரை செல்போனை தொடவே இல்லை. எந்த ரைம்ஸும் கேட்கவும் இல்லை. அவர்கள் கிளம்பும் வரை ஒவ்வொரு புத்தகமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த குழந்தை கடைசியா ஒரே ஒரு புத்தகத்தை கை காட்டி அது வேண்டும் என்பதை விரல் நுனியில் கேட்டது. அந்த பிஞ்சு கேட்ட புத்தகம் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன். இப்போது அந்த புத்தகத் தலைப்பின் ஆழம் உணரத்துவங்கினேன்.
அவர் பட்டாம்பூச்சி விற்பவர் அல்ல.
பட்டாம்பூச்சிகளுக்கும் விற்பவர்.



Comments