பீஃப் கடையில் பாலுமகேந்திரா
- Gowtham G A
- Feb 15, 2023
- 3 min read
Updated: Feb 21, 2023
ஆண்டு : 2018 இன் எதோ ஒரு நாள்.
நேரம் : மாலை (மணி பார்க்கவில்லை)
”தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத வித்தியாசமான கதை. நம்ம படத்துக்கு கன்ஃபார்மா நேஷ்னல் அவார்டு”
என்ற வழக்கமான தோனியில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த நண்பர்களை வழியனுப்பி விட்டு திரும்பிப் பார்க்க,
டீக்கடை சேட்டன் மூன்று விரல்களை காட்டி ”சரியா” என கேட்டுவிட்டு ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டார். நான்கு அடி எடுத்து வைக்கையில் அருகில் இருக்கும் இருள் சூழ்ந்த மைதானத்தை கொண்டுள்ள ஆர்.டி.ஓ ஆபிஸை ஒட்டியுள்ள அந்த தள்ளுவண்டி கடை கண்ணுக்கு தெரிந்தது.
என்னை பார்த்ததும் ’மூன்று இட்லியும் ஒரு பீப் கறியும்’ தானாக என் மெனுவில் சேர்ந்துவிடும். மூன்று சாலைகளும் சேருமிடம். ’டிங் டங் டிங் டங்’ ஓசையும் அதை சுற்றி தலை குனிந்தவாரு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களும் தான் அதன் அடையாளம்.
எதிரில் பேருந்து நிறுத்தம். வழக்கம் போல பேருந்து நிறுத்தத்தை விட்டு பத்தடி தள்ளி நிற்கும் அரசு பேருந்தில் கண்ணுக்கு அகப்படாமல் போகும் நங்கைகளால் துவண்டு போகும் உள்ளம், பீஃப் வாசத்தில் குதித்தெழும். இதோ என் பெயர் எழுதப்பட்ட மாட்டுத்துண்டு வெந்துகொண்டிருக்கிறது. வெங்காயமும் கூட்டணி அமைக்கின்ற வேளையில் ஆறுமுகத்திடம் கேட்டேன்.
”என்னன்னே இன்னிக்கு கூட்டம் எப்படி”
1. ”எங்கப்பா…. எல்லாம் அப்டியே இருக்கு.
2. எப்டியும் 11 மணிக்குள்ள தீந்துடும்னு நெனிக்கிறேன்.
3. இந்த போலிஸ்காரனுவ கண்ணுல பட்டுத்தொலஞ்சுற கூடாதுன்னு பாக்குறேன்.
4. அவனுங்களுக்கு காசையும் கொடுத்துட்டு ஓசில வேற வடிச்சு கொட்டணும்.அஅதுக்குத்தான்.”
அலுத்துப்போன அந்த 4 புலம்பல்களை கேட்டுக்கொண்டே கடையை ஒட்டியுள்ள மதில் சுவரில் அமர்ந்தேன். பின்னால் பெரும் மைதானம். காலை வேளையில் பெரும்பாலும் ஓட்டத்தெரியாத ஸ்கூட்டிகள் நிரம்பி வழியும். 8 போடுகிறேன் பேர்வழி என்று 7½ போடுவதும், சகித்துக்கொள்ளாத இன்ஸ்பெக்டர் பெயில் செய்வதும், “இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க சார்” என்று நடு மைதானத்தில் நடக்கும் சீரியல் டிராமா எல்லாம் காலை வேலையில் கடக்கும் போது கண்டிருக்கிறேன். இரவெல்லாம் இந்த மைதானத்திற்கு அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் ஆறு சக்கர வாகனங்களே துணை.
நாங்கள் இந்தக்கடையின் ராயல் கஸ்டமர்ஸ். எங்களுக்கென்று சில சலுகைகள் உண்டு. பின்னால் நாலு பேர் நின்னாலும் நாம் வந்ததும் ஆம்லெட்டோ, பீஃப் கறியோ சொல்லி முடித்து கை கழுவி விட்டு வரும் போது அடுப்பில் வெந்துகொண்டிருக்கும். நீண்ட நேரம் காத்திருந்து சாப்பிடும் ஒரு கூட்டம் இந்த ’தனி கவனிப்பால்’ என்னை ஏதோ பக்கத்து ஏரியா ஐட்டக்காரன் போல பார்ப்பார்கள். நாமும் கடன் காரனை பார்த்தது போல அசால்டாக தலையை ஒருக்கழியாக திருப்பி விடுவேன். இப்படியாக அடுப்பில் பொறியல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, காத்திருந்த வேளையில் எப்படியோ வாயில் அந்த வரிகள் விழுந்துவிட்டது.
"பன்னீரை தூவும் மழை. சில்லென்ற காற்றின் அலை......"
என் வலது பக்கம் அமர்ந்திருந்த மெரூன் நிற சட்டையணிந்த ஒருவர்...
"தம்பி. நீ பாடுனது எவ்ளோ பழைய பாட்டுன்னு தெரியுமா" என்றார்.
”ஆம் தெரியும்” என்பது போல தலையை மெலிதாக அசைத்தேன்.
(கித்தார் இசையும், குடியும், சிக்கன் துண்டுகளும் நிறைந்த நண்பர்கள் சந்திப்பில் முதலில் பாடத்துவங்கும் எங்கள் தமிழ்த்தாய் வாழ்த்து அது. பிறகு அப்படியே மோகனுக்கு மைக் மாறிவிடும்)
கறியும் வெங்காயமும் சரியானபதத்தில் வெந்து முடிந்தது. கரண்டியால் அள்ள முற்படுகையில்
"அண்ணே. தட்டுல இலை வைங்க. பாலிதீன் கவர் வேண்டாம்"
என முன்பே எச்சரித்து விட்டேன். அப்படியே வந்தும் சேர்ந்தது. (ப்ளாஸ்டிக் தடை செய்யப்படுவதற்கு முன்பான சம்பவம்) அதைப்பார்த்த இடது பக்கம் நின்றிருந்த கோடு போட்ட சட்டைக்காரர் ஒருவர் "அப்படித்தான் தம்பி இருக்கணும். கரெக்டு" என்று சொல்லிவிட்டு ஆறுமுகத்திடம் கடிந்து கொண்டு போனார். ஆறுமுகம் எனை திரும்பிப் பார்க்க என் தலை அரச மரத்தில் அமர்ந்திருந்த அந்த அரிதான கறுப்பு நிற பறவையை நோக்கியது.
கறித்துண்டுகளுக்கிடையுள்ள மாசாலாவுடன் இட்லியிலிருந்து பெயர்த்தெடுத்த சிறுசிறு துண்டுகளை ஒத்தடம் கொடுத்து துணைக்கு ஒரு கறியோடு நாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் தருணம்,
அதீத யோசனைக்குப் பின் அந்த மெரூன் சட்டைக்காரர் பேசத்துவங்கினார்.
அது பிரதாப் போத்தன் நடிச்ச படம் தான ?
ஆம் என்பது போல மெலிதாக தலையசைத்தேன்.
இளையராஜா மியூசிக் தான ?
ஆம் என்பது போல மெலிதாக தலையசைத்தேன்.
பாலுமகேந்திரா படம் தான ?
ஆம் என்பது போல மெலிதாக தலையசைத்தேன்.
படம் பேரு 'மூடுபனி' தான ? ஆம் என்பது போல மெலிதாக தலையசைத்தேன். சினிமால இருக்கியா ? ஆம் என்பது போல மெலிதாக தலையசைத்தேன்...
"மூடுபனில நான் கேமரா அசிஸ்டண்ட். பாலுமகேந்திரா சார் கிட்டலாம் வேலை செஞ்சிருக்கேன். அப்போ நான் ரொம்ப சின்ன பையன். அதுக்கப்புறம் டி.ஆர் படத்துக்கு போயிட்டேன். எந்த கேமராமேன் கிட்டயும் சேர முயற்சி பண்ணல. தினமும் பேட்டா காசு கரெக்டா வர்றதால கேமரா அசிஸ்டண்டாவே வாழ்க்க போயிடுச்சு"
என ஆரம்பித்தவர் தனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திருமணம், மகன் பிறந்த போது 'முரட்டுக்காளை’ ஷூட்டிங்கிற்கு வெளியூர் போனது, விபரம் அறிந்த ரஜினி பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பியது என ஷோபா மரணம் வரை சொல்லிக்கொண்டே போனார். என்னோடு சேர்ந்து இட்லிகளும் கதை கேட்டுக் கொண்டிருக்க, தட்டிலிருந்த மூன்று இட்லியும் காலியாகி போனது.
”அண்ணே இன்னொன்னு”.
இன்னொரு இட்லி உடனே வந்தது. அதற்கு ஸ்பெசலாக பீப் கிரேவியும் வந்தாயிற்று. தற்சமயம் வரை சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் இயங்கிக்கொண்டிருந்தது.
"என்ன தம்பி நான் பேசிட்டே இருக்கேன். எதுமே சொல்லல"
"ஒன்னுமில்லன்னே" என்று மட்டும் சொல்லிவிட்டு மீதமுள்ள இட்லியை காலி செய்யும் பணியில் தொடர்ந்தேன். அவர் வேறு எதோ சிந்தனையில் மூழ்கினார். தட்டில் மீதம் உள்ள இலையையும் திண்ணுமளவு பசி இல்லாததால் அதோடு நிறுத்திவிட்டு என் பாக்கெட்டில் சிரித்துக்கோண்டிருந்த நீலநிற காந்தியை ஆறுமுகத்தின் பாக்கெட்டிற்கு கடத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
ஹாரன் எரிச்சல்களுக்கு நடுவே அவர் சொன்ன கடைசி வரிகள் மீண்டும் என் மனதில் ஓடத்துவங்கின.
”நல்லவேளை தம்பி. லைட்மேனா போகல. நான் அன்னிக்கே என் பிரண்டு கிட்ட சொன்னேன். அங்கல்லாம் போவாத இரும்பா தூக்க வச்சிருவானுவ. உடம்பு வீணாப்போயிடும்னு. எங்க !!! எதையும் காதுல வாங்கிக்கல. இப்ப முடியாம கெடக்கான். ஒருத்தன் கூட எட்டிப்பாக்கல. எவ்ளோ தான் வேலை செஞ்சாலும் அதுக்கேத்த காசு மட்டும் வராது.”
ஆம். லட்சியங்கள் கொட்டும் சினிமாவில் இங்கே லட்சங்களில் சம்பாதிப்பவர்கள் வெகு சிலரே.
’வாய்ப்பு’
இந்த ஒரு வார்த்தைக்காக நாள் கணக்கில், மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட காத்திருக்கிறது ஒரு பெரும் கூட்டம். இவர்களை கடந்து வெற்றி பெற்றவனை மட்டும் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கிறது. அதுவும் சில காலம் தான். முயற்சி செய்தவன் எவனும் வரலாற்றின் இடுக்குகளில் கூட இல்லை.
நமக்கும் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கை உள்ள வரை கலைத்துறை எனும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் ஏதேனும் ஒரு வழியில் அது தனக்கு தேவையானவற்றை இணைத்துக் கொள்ளும். அப்படியான சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் அமையும் வரை யாராக இருந்தாலும் வெயிட்டிங் லிஸ்ட் தான்.
சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உதவி இயக்குனராக பணிபுரிந்து கடைசி வரை ”ஆக்ஷன்” சொல்லாமல் இறந்துபோன என் நண்பனின் கதையை பதிலுக்கு அவரிடம் சொல்வதில் என்ன இருக்கிறது.
சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனம் அதிகம் பேசுகிறது...



Comments