அவளைக் காதலிக்காதீர்கள்...
- Gowtham G A
- Mar 10, 2023
- 1 min read
Updated: Mar 27, 2023

வாசிப்பை வழமையாகக் கொண்ட பெண் மீது காதல் வயப்படாதீர்கள்.
உணர்வுகளை ஆழமாக அனுபவிக்கத் தெரிந்த, எழுதவும் கூடிய பெண்ணுடன் காதல் கொள்ளாதீர்கள்.
கற்கையை வழிமுறையாக்கியவளிடமும் மாயம் செய்யும் உன்மத்தப் பிச்சி ஆனவளிடமும் சிந்திக்கத் தெரிந்தவளும், தன்னை அறிந்தவளும், சிறகு விரித்தெழும் வித்தைக்காரியும், மனவுறுதியும் கொண்டவளுமான பெண்ணுடன் காதல் வயப்பட்டு விடாதீர்கள்.
கலவியின் உச்சத்தில் சிரித்துக் கொண்டிருப்பவளிடமோ கண் கலங்கிப் போகுபவளிடமோ காதல் கொண்டு விடாதீர்கள்.
உடலையே உயிராக்கத் தெரிந்தவளிடம், கவிதைகளைக் காதலிப்பவளிடம் (இவளே அனைத்திலும் பேராபத்தானவள்), ஒரு ஓவியத்தில் அமிழ்ந்து போக்கக் கூடியவளிடம், இசையின்றி வாழ்வில் இயையாதவளிடம், காதலுற்று விடாதீர்கள்.
அரசியல் ஆர்வமுள்ளவளிடம், அநீதிகளுக்கெதிராய் நிற்கத்தெரிந்த கலகக்காரியிடம் காதல் வயப்படாதீர்கள்.
தொலைகாட்சியில் தன்னை இழக்காதவளும், உடலழகைக் கடந்த பேரழகு மிளிரும் பெண்ணுடன் காதல் கொண்டுவிடாதீர்கள்
தீவிரமும் தெளிவுமுள்ள அலட்சியப் பேர்வழியான ஒரு குறும்புக்காரியை காதலித்து விடாதீர்கள்.
இப்படிப்பட்ட பெண்ணிடம்
காதல் வயப்படுவதை
நீங்கள் விரும்பவும் மாட்டீர்கள்.
ஒருவேளை அவள் மீது நீங்கள் காதல் கொண்டு விட்டீர்களெனின்...
அவள் உங்களோடு இருக்கின்றாளோ இல்லையோ... காதல் செய்கிறாளோ இல்லையோ...
அந்தப் பெண்ணிடமிருந்து உங்களை மீளப் பெற முடிவதேயில்லை.
- Martha Rivero-Garrido தமிழாக்கம் : கவிதா லட்சுமி



Comments