top of page

பறவையே எங்கு இருக்கிறாய்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Jul 13, 2023
  • 3 min read

Updated: Jul 16, 2023


ree

கட்டிடப்பணிகளும், சாலைப்பணிகளும் நள்ளிரவை சூழ்ந்து அவர்கள் அறைக்குள் நீண்டு கனரக சப்தங்களால் இரவை நரகமாக்கிக்கொண்டிருக்க, இரு காதுகளையும் கைகளால் அடைத்தவாறு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தவளை அழைத்துக் கொண்டு அவன் கிளம்ப, வேறு வழியின்றி நிகழ்ந்தது வீட்டை விட்டு வெளிநடப்பு. எங்கு போகிறோம் என அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. இன்னமும் சொல்லிக்கொள்ளாத காதலின் இரு நெஞ்சமும் இரு சக்கரத்தில் துவக்கியது அவர்கள் பயணத்தை. இருவரிடமும் ப்ளூடூத் ஹெட்செட் இருந்தும் ஒற்றை ஹெட்செட்டை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். பிடித்த பாடல்களை ஒலிக்கும் அவனுக்கான இன்றைய சுற்றில், அலைபேசியை அவளிடம் தந்துவிட்டு பட்டியல் போட்டான். அவன் சிந்தனை அவள் விரல் நுனியின் திரை தொடுதலில் பாடலாக உயிர்பெற்று அவர்களின் செவிகளில் அடைக்கலம் புகுந்தது.


சாலைப்பணிகளால் குறுக்கிப்பொய் நெருக்கிய வழி எப்போது முடியும் என மனம் தேடத்துவங்கியது. “வகுப்பில் கை தூக்கும் ஆர்வம் கொண்ட மாணவனாய்” இடையிடையில் அவளுக்குப்பிடித்த பாடலும் அரங்கேறியது. செவி கேட்கும் பாடலை இசைக்கத் துவங்கிய நாவின் நுனியில் துளிர்த்தது செல்லும் பாதையின் தேடல். ஒரு வழியாக நெடுஞ்சாலைக் கோட்டை தொட்டது அவர்கள் வண்டி.


கண் கூசும் மின் விளக்கின் அத்தனை பிரகாசமும், தூரங்கள் செல்லச்செல்ல கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போகத் துவங்கியது. இருள் சூழ்ந்த மரங்கள் கொண்ட அரை வனத்தின் வாசலில் குளிர் சிறை பிடிக்கத் துவங்கியது. முன்னிருக்கும் அவன் உடல் நடுங்க, பின்னிருக்கும் அவள் பற்களின் நடுக்கம், அவன் ஹெட்போனுக்கும் உள்ளிருக்கும் செவியின் அறையை கடந்து ஒலித்தது. குளிருக்கு இதமாய் இறுகப்பற்றிக் கொண்டால் தான் என்ன! பாவமாய் ஏங்கியது அவன் மனம். அத்தனை குளிரிலும் தன் இரு கரங்களையும் தேய்த்தபடி கைகட்டிக் கொண்டாள். விதியின் திரைக்கதையில் இப்படியொரு பயணம்.


சந்திரனின் மென்மையான பிரகாசத்தின் கீழான கனவுகளின் பாதையில் தொடர்ந்தார்கள் அவளும் அவனும். அயராத சக்கரங்களின் முணுமுணுப்புகளில் அவர்கள் மனதினுள் ஆயிரம் கேள்விகள். ஒவ்வொரு மென்மையான குறிப்பிலும், அவர்களின் இதயங்கள் ஒத்திசைந்தன. ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலின் உருக்கமான வரிகள் அவர்களின் உணர்வுகளை மேலும் அழுத்தின. ஒன்றாய் இணைந்து பாடும் பாடல்களில் தொலைந்து போன வரிகளை தேடிக்கொடுத்தான் காதுக்குளிலிருக்கும் காப்பான்.


அடுத்த பாடலை அவளிடம் சொல்லாமல் அலைபேசியை வாங்கி ஒலிக்கச்செய்தான். அவனின் மனத்தேடல்களை வரிகளால் பிணைத்த, அவன் தனிமையின் வலிகளுக்கு இளையராஜாவின் குரலில் உருவம் கொடுத்த “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடல் நிலவொளி இரவில் குளிருக்கு இதமான வரிகளுடன் ஒலிக்கத்துவங்கியது. ஒவ்வொரு பாடலின் துவக்கத்திற்கும் முன்னுரை வாசித்தவள் இப்போது சாந்தமானாள்.


தனிமை சூழ்ந்த தருணங்களில் தனக்காக ஒலித்த பாடல், இப்போது வேறொரு விதத்தில் அவனே அவளுக்காக பாடுவது போல ஒலிக்கத்துவங்கியது. உரசிச்செல்லும் குளிரும், வெண்ணிற ஒளியும், செவியின் வழியே சொர்கத்தின் வாசலை மீட்டெடுக்கும் பாடலும் என அந்த ஆறு நிமிடம் அவர்களை நிஜ உலகிலிருந்து வெளியேற்றியது. மனமுருக வாசித்த பாடலின் வரிகளை அவளுக்கு அர்ச்சனையாக்கினான். பாடி முடிக்கும் தருணம் சட்டென்று அவன் உடலில் ஒருவித இறுக்கம் கூடியது. குனிந்து கீழே பார்த்தான். அவள் அவனை இறுக்க கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தாள்.

ree

அந்த இறுக்கத்தின் பெயர் தெரியவில்லை. காரணம் கேட்கவில்லை. அவளது அரவணைப்பு! அவன் ஏங்கிய கூடு. அதனால் திரும்பி அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. இறுக்கிய அரவணைப்பின் வழியே, அவள் முகம் பார்க்காமல் மனம் கண்டது அவளுடைய பிரசன்னம். மனமும் நாவும் ஊமையானது. யாருமற்ற சாலையில் தீர்ந்து போன பாடலும், தீர்ந்து போன குரலுமாக நீண்ட நேரம் இருவரிடமும் நிகழ்ந்துகொண்டிருந்த அவர்களின் நிசப்தத்தில் காற்றின் ஓசை இன்னொரு பாடலை அவர்களுக்குள் இசைக்கத் துவங்கியது. அவனது அமைதியும், அவளின் இறுக்கமும் இன்னமும் தொடர்ந்தது. எங்கு செல்லப் போகிறோம்? தெரியவில்லை. எங்கு வண்டியை திருப்ப வேண்டும்? அதையும் சிந்திக்கவில்லை. பாதை தெரியும் தூரம் வரை தொடர்ந்தது பயணம்.


“உன்னோடு நானும் போகின்ற பாதை

இது நீளாதோ தொடு வானம் போலவே”


இப்படியே வாழ்நாள் முழுதும் இருந்துவிடக்கூடாதா என ஏங்கத்துவங்கியது மனம். காதலின் சிம்பொனி மனதிற்குள் சரியான தாளத்தில் குதித்தது. அவளின் தொடுதலும், அகப்படாத பார்வையும், ஒரு ரகசிய அடையாளமாக அவன் மார்பினை தைத்தது. முடிந்து விட்ட பாடலின் வரிகள் அவன் மனதிற்குள் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு அவனுக்கு வாழும் ஆசை துளிர்விடத் துவங்கியது.


“முதல் முறை வாழப்பிடிக்குதே

முதல் முறை வெளிச்சம் பிறக்குதே

முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே”


கண்ணுக்குத் தெரியாத ஒரு நூல் அவர்களை கட்டிப்போட்டது. அடுத்த பாடலை கேட்கவுமில்லை. இறுகப்பற்றிய அவள் கரங்கள் விடுபடவுமில்லை. உரசிக்கொண்டிருக்கும் அவர்களின் மனதோடு, அந்த பலவீனமான தருணத்தில், அவனும் அவளும் யார் என்பதை கிட்டத்தட்ட மறந்திருந்தார்கள். அந்தத் தருணத்தில் அவன் மனம் ஏங்கியது ஒன்றே ஒன்று தான்.


“இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா!

என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா!”


அவன் சிந்தனையினூடே அவளும் அதையே தான் சிந்தித்திருப்பாள் என யூகித்தான். தூரத்து வெளிச்சத்தில் தெரிந்த அவள் கன்னத்தில் முத்துக்களைப் போல அவளுடைய கண்ணீர் அதை உறுதி செய்தது. அவனுடைய மௌனமும், அவளது கண்ணீரும் அவர்களுக்குள் ஒரு புது மொழியில் பேசிக்கொண்டன. அத்தருணம் இருவருக்குமான ஒரு இனிமையான சரணாகதி.


இசையின் அரவணைப்பில் பிறந்தது அவர்கள் காதல் கதை. நா.முத்துக்குமாரின் வரிகள் அவ்விரு மனங்களை இணைத்த பாலம். இரவும் பகலும், கவிதைகளும், பாடல் வரிகளும், அவர்கள் வாழ்வின் பக்கங்களில் ஒவ்வொரு நாளும் மையிட்டது. அத்தருணத்திலிருந்து அந்தப்பாடல் அவர்கள் காதலின் தேசிய கீதமானது.


இப்படியொரு உலகிலிருந்து மனதை வெளியேற்ற நினைப்பது எத்தனை பாவம்! அந்த பாவத்தை செய்ய ஒவ்வொரு நாளும் முயன்று தோற்கிறான். தனிமை, தேடல், காதல், காமம், மகிழ்ச்சி, வேதனை, தோழமை, பிரிவு, வாழ்வு, மற்றும் காத்திருக்கும் மரணம் என அத்தனைக்கும் உடனிருக்கும் நா.முத்துக்குமாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


1 Comment


Guest
Jul 13, 2023

❤️

Like
bottom of page