அதனால் ?
- Gowtham G A
- Jun 8, 2023
- 1 min read

பிரிக்கப்படாத புத்தகம் ஒன்றை வெறித்துப்பார்த்தபடியே உட்கார்ந்திருந்தவனை கவனித்த அவன் நண்பன் கேட்டான்…
ஏனடா இன்னும் கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாய். இதிலிருந்து விடுபட ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்கலாம் தானே ?
பார்த்தால் என்ன நடக்கும் ?
உன் பிரச்சனைகளிலிருந்து வெளிவர அவர்கள் உதவுவார்கள்.
எப்படி ?
உன் துயரத்திலிருந்து மீளும் வழியை அவர்கள் சொல்லுவார்கள்.
அப்படியென்றால் என் நினைவுகளை அதன் ஆழத்திலிருந்து மீட்டு வரச்செய்வது விடுவார்கள் தானே!
ஆம்.
இந்த நோய் தீர்ந்துவிடக்கூடாது என்று தானே இத்தனை மாதங்கள் ஆகியும் மருந்துகளை தவிர்த்துக்கொண்டு இருக்கிறேன். அதையே நீ மீண்டும் சொல்கிறாயே.
என்னடா சொல்கிறாய் !
வலிக்கிறது. இன்னமும் வலிக்கிறது. உயிர் போக வலிக்கிறது. வலிக்காமல் இருக்க இனியும் வலிநிவாரணி போட்டுக்கொள்வதில் விருப்பமில்லை. அதனால்…
அதனால் ?
வலியை மட்டும் அகற்றிவிட்டு நோயை அப்படியே வைத்திருக்கும் ஒரு மருத்துவரையோ அல்லது ஒரு மருந்தையோ கண்டால் எனக்கு சொல்லேன்…
இத்தனை கஷ்டப்படுவதற்க்கு...
இத்தனை கஷ்டப்படுவதற்கு ஒரு மாத்திரையில் ஒரேயடியாக போய்த்தொலையேன் என்று தானே சபிக்கிறாய்.
அப்படியல்ல...
நீ சொல்லாவிட்டாலும் நான் இறந்துகொண்டு தான் இருக்கிறேன். ஒரு மாத்திரை செய்யும் வேலையைத்தான் ஒவ்வொரு நாளும் செய்துகொண்டிருக்கிறது. நினைவுகளிலிருந்து மீள மறுக்கும் இதயம் ஒவ்வொரு நொடியிலும் தரையில் விழுந்த மீனாக செத்துக்கொண்டு தான் இருக்கிறது...



Comments