top of page

சிறந்த படத்தொகுப்பு என்றால் என்ன?

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Aug 15, 2024
  • 4 min read

Updated: Aug 24, 2024


ree

இந்தக் கேள்விக்கு எளிமையான பதிலை என்னிடம் கேட்டால், ’கண்களை உறுத்தாத படத்தொகுப்பே’ சிறந்த படத்தொகுப்பு என்பேன்.


ஆம். ஒரு காட்சியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு காண்பிக்க வேண்டிய நேரத்தில் பாதியிலேயே நிறுத்தி வேறு காட்சிக்கு செல்லும் போது, முந்தைய காட்சியுடனான பார்வையாளர்களின் பிணைப்பு அறுபட்டுப்போய்விடும்.

அதை சரியாக பயன்படுத்தும் வேளையில், அக்காட்சியின் தீவிரமும் நம்பகத்தன்மையும் கூடும்.


அதற்கான இரண்டு உதாரணங்கள்…


உதாரணம் 1:

பாபநாசம் படத்தின் இறுதிக்காட்சி


ஊரை விட்டு கிளம்பும் வருணின் பெற்றோர் கீதா மற்றும் பிரபாகர் இறுதியாக ஒரு முறை சுயம்புலிங்கத்தை சந்திக்கிறார்கள்.


ree

ஷாட் 1:

எத்தனை ஆண்டுகள் காத்திருப்புக்கும், வேண்டுதலுக்கும் பிறகு பிறந்த ஒரே குழந்தை ‘வருண்’ என்பதையும், தன் மகன் காணாமல் போன பின்னால் ஒவ்வொரு முறையும் அலைபேசி அடிக்கும்போது பதறும் அவர்கள் வாழ்க்கை எப்படி நரகமாக மாறியது என்றும், அமைதியான குரலில் அழுதுகொண்டு கூறியபடி தன் மகனின் நிலை பற்றி கேட்பார் பிரபாகர் (ஆனந்த் நாராயணன்).


ree

ஷாட் 2:

அதன் பிறகு சுயம்புலிங்கம் (கமல்ஹாசன்) பேசும் காட்சியில், தன் உலகம் எவ்வளவு சிறியது, தனக்குத்தெரிந்ததெல்லாம் தன் குடும்பம் மட்டும் தான், அதற்கொரு பிரச்சனை என்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என நடுத்தர குடும்பத்தலைவனாக தன் மகளையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு என்னென்னவோ செய்தாலும் சரியென்ற சூழல் அமைந்துவிட்டதாக மன்னிப்பு கேட்டு முடிப்பார்.


ஷாட் 1 மற்றும் ஷாட் 2.

இரண்டும் நீண்ட வசனத்தை கொண்டிருக்கும்.

இரு ஷாட்டையும் பகுப்பாய்வு செய்து பார்த்தால், ஒருவர் பேசும் போது இன்னொருவர் முகம் காண்பிக்காமல் மொத்த ஷாட்டும் பேசுபவர் மீதே இருக்கும்.


ஆனந்த் நாராயணன் பேசி, கெஞ்சி, அழுது, உயிரோடாவது இருக்கிறானா என முடிக்கும் வரை கமல் முகம் காண்பிக்கப்பட மாட்டாது.

அதே போல, கமல் தன் குடும்பம், அதற்கு வரும் பிரச்சனை பற்றி பேசி முடிக்கும் வரை ஆனந்த் நாராயணின் முகம் காண்பிக்கப்படாது.


திரை மொழியில் இருவரின் உணர்வுகளும் சமம் என்று ஒரு வகையில் எடுத்துக்கொண்டாலும், தொழில்நுட்ப வகையில் முதல் வசனம் நான்கு நிமிடம் என்றால் அதற்கு இணையான பதிலாக சொல்லப்படும் இரண்டாவது வசனமும் நான்கு நிமிடம் இருக்கும். இரு வசனங்களும் ஒரே நீளத்தில் இருப்பது காட்சியின் உணர்வுகளை சமன் செய்வதைப்போன்றது.


ஒரு வேளை, கமல் பேசும் போது ஆங்காங்கே ஆனந்த் நாரயணன் முகம் வந்திருந்தால் கமல் தீவிரமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பேசிய வசனங்கள் ஆழமாக மனதில் ஊன்றாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. இதே போல் தான் ஆனந்த் நாராயணன் பேசும் காட்சியிலும்…


படத்தின் துவக்கம் முதல் பார்த்தவர்களுக்கு இறுதிக்காட்சியின் தீவிரம் புரியும். ஒரு பக்கம், அதிகாரம் படைத்த ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உளவியல் மற்றும் உறவுச்சிக்கல். இன்னோர் பக்கம், சாதாரண ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உளவியல் மற்றும் சட்டச்சிக்கல்.


மகனின் தாயான கீதா பிரபாகர் ஐ.பி.எஸ் (ஆஷா சரத்) கதாப்பாத்திரம் அறிமுகமானது முதல், ஒரு வில்லியைப்போல நமக்கு காண்பிக்கப்படுவார். இருக்கும் அத்தனை அதிகாரிகளையும் கொண்டு கமல்ஹாசனை நசுக்குவார். அதனால் நாம் கமல்ஹாசன் பக்கம் தான் நிற்போம்.


ஆனால் இறுதிக்காட்சியில் மகனை இழந்த துக்கத்தில் வேலையை ராஜினாமா செய்த கீதா ஐ.பி.எஸ், இப்போது வெறும் கீதாவாக கணவனுடன் ஊரை விட்டுக்கிளம்பும் போது, மகனை இழந்த இருவரின் மீதும் ஒரு மெல்லிய கரிசனம் நம்முள் ஒட்டிக்கொள்ளும்.


காரணம், என்ன தான் அரசின் உச்ச அதிகாரத்தில் இருந்தாலும், நாங்களும் உங்களைப்போல ஒரு மகனைப்பெற்ற சாதாரண பெற்றோர் தான் என்பதை அக்காட்சியில் உணர்த்துவார்கள்.


ஒரு மணி நேரம் தாமதமாக உணவகம் வரும் நீங்கள், அங்கு உங்களுக்காக காத்திருக்கும் காதலியிடம், வெறும் “சாரி” மட்டும் சொல்லிவிட்டு அவளைத் தொட்டால் என்னாகும்! உங்கள் கையை உதறி விடும் காதலியின் கோபத்தில் அந்த இடமே போர்க்களமாகிவிடாதா!


அதனால் வீட்டிலிருந்து கிளம்பும் போது வந்த மேனேஜர் போன் கால், பஞ்சர் ஆன வண்டி, கால தாமதம் செய்த மெக்கானிக், பாதி வழியில் தீர்ந்து போன பெட்ரோல், மெட்ரோ வேலைகளால் குறைக்கப்பட்ட U TURNகள், நின்று வந்த மொத்த சிக்னல்களின் எண்ணிக்கை என ஒரு திரைப்படத்துக்கான Bounded Script ஐயே நீங்கள் காதலியிடம் கொடுக்க வேண்டும் தானே!


அது போலத்தான், படம் முழுக்க அடித்து விட்டு, கடைசியாக ஒரே வசனத்தில் ”சாரிப்பா. தெரியாம பட்ருச்சு” என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா? அவர்களை சமாதானப்படுத்த இத்தனை நீளமான ஒரு வசனமும், ஒரு காட்சியும் தேவைப்படுகிறது.


அதனால் தான் எந்த வித வெட்டும் இல்லாமல் ஒரே டேக்கில் ஆனந்த் நாராயணை பேச வைத்திருப்பார்கள்.


படத்தின் துவக்கம் முதலே, கமல்ஹாசனுக்கு தன் குடும்பம் எத்தனை முக்கியம் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான். ஆனால், வருணின் பெற்றோர்களுக்கு இது தெரியாது. அதனால், இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு ஒரு சிறிய ’இதுவரை’ தேவைப்படுகிறது.


”இப்படியிருந்த எங்க குடும்பத்தை உங்க பையன் இப்படி ஆக்கிட்டானுங்க” என்று அவன் பெற்றோர்களிடம் நியாயம் சொல்ல வேண்டியிருக்கிறது.


----------------------------------------------------


உதாரணம் 2:

முத்து: ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ பாடல் காட்சி


சிறுவயதிலிருந்து ராஜாவைப்போல தான் வளர்ந்த வீட்டை விட்டு தன் முதலாளி போகச்சொல்வார். அதைக்கேட்டு அதிர்ந்து போகும் ரஜினி காரணம் தெரியாமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு செல்லும் காட்சிகளால் நிறைந்தது இந்தப்பாடல்.


நன்றாக கவனித்தீர்கள் என்றால், அப்பாடலின் ஒவ்வொரு வரி பாடப்படும் போதும், ரஜினியே பாடுவது போல அவர் முக பாவனைகளும், உடல்மொழியும் காண்பிக்கப்படும்.

அது போல ஒவ்வொரு பாடல் வரிக்கும் ரஜினியின் ஷாட் மாறிக்கொண்டே இருக்கும். கேமரா கோணங்களும் (Angles) மாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு பாடல் வரிக்கும் இன்னொரு பாடல் வரிக்கும் இடைப்பட்ட இடங்களில், அங்கிருப்பவர்களின் உணர்வுகள் ஷாட்டாக காண்பிக்கப்படும்.

அதன் காம்பினேஷன்கள் கீழ்கண்டபடி இருக்கும்...

//

சரத் பாபு:

”நானே உன்ன கழுத்தப்புடிச்சு தள்ள வேண்டியிருக்கும்...”


'விடுகதையா இந்த வாழ்க்கை... (Wide to Mid shot - Crane)


இசை: ரஜினி சரி என்று சொல்லும் ஷாட் (Mid to Close up shot - Track )


இசை: சரத் பாபு உள்ளே செல்லும் ஷாட் (Mid shot)


ரஜினி - ’விடை தருவார் யாரோ’ (Wide to mid shot)


இசை: செந்திலிடம் ரஜினி வருந்தும் ஷாட் (Low angle)


ரஜினி - ’எனது கை என்னை அடிப்பதுவோ.... ஆறு குளமாக மாறுவதோ’ (Wide Shot - Track)


இசை: வடிவேலு, பாண்டு, காந்திமதி ஒன்றாக வருந்தும் ஷாட் (Mid shot)


ரஜினி - ’ஏனென்று கேட்கவும் நாதியில்லை’ (Low Angle)


இசை: செந்தில், விசித்ரா அழுகின்ற ஷாட் (Close up)


ரஜினி - ’ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை’ (Low Angle)


இசை: அழும் யானையின் ஷாட் (Mid to Close up)


ரஜினி - ’பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும் காம்பினில் விஷம் என்ன கலக்கவா முடியும்?’ (Top Angle to Low Angle)


இசை: பொன்னம்பலம் ஷாட் (Mid shot)


ரஜினி: ’பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும் காம்பினில் விஷம் என்ன கலக்கவா முடியும்?’ (Mid shot to Wide shot)


இசை: மக்கள் பார்க்கும் ஷாட் (Wide shot)


ரஜினி - ’உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும் நான் செய்த தீங்கு என்ன’ (low angle)


ரஜினி - ‘நான் செய்த தீங்கு என்ன' (close up)


//


இப்படியாக அந்தப்பாடல் முடியும்...


பாடலும் அதன் வரிகளும் ஏற்படுத்தும் உணர்வுகளுடன், காட்சியின் உணர்வுகள் கலக்கும் போது அது இன்னும் தீவிரமான ஒரு உணர்வை பார்வையாளர்களுக்கு கொடுக்கும்.


இப்போது கூட இந்தப்பாடலை எங்காவது கேட்டால், முகமெங்கும் ரத்தத்துடன் கை கூப்பி வணங்கும் பாவப்பட்ட ரஜினியின் முகம் நிச்சயம் உங்கள் மனதில் தோன்றும். அது தான் ஒரு காட்சி உங்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பது.


எல்லோருக்கும் ஷாட் இருக்கு. வெளிய போக சொன்னவருக்கு ஷாட் எங்கப்பா? என் நீங்கள் கேட்டால், ரஜினியை வெளியேறச் சொல்லும் சரத் பாபுவுக்கு முந்தைய காட்சியில் அதற்கான காரணங்கள் பொன்னம்பலத்தால் தவறாக திரிக்கப்பட்டு விளக்கப்பட்டிருக்கும்.

மேலும், மொத்தக்காட்சியும் ரஜினி வெளியேறுவதில் கவனம் செலுத்துவதால், ஒரு வேளை சரத் பாபு மாடியில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு ஷாட்டை வைத்தால், காட்சியின் தீவிரத்தில் அது கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். அதனால், இப்பாடல் முடியும் வரை அவரின் முகம் காண்பிக்கப்படாது. இதன் விளைவாகத்தான் ரஜினியின் கண்ணீர் உங்களுக்கு வருத்தத்தை தருகிறது.

இப்பாடலில் ரஜினியின் நீண்ட கால நண்பனான செந்திலின் முகம் மட்டும் மூன்று முறை காண்பிக்கப்படும்.


ree

ஷாட் 1: காரணம் புரியாமல் கிளம்பும் ரஜினி ‘என்னவென்றே எனக்குப்புரியவில்லை. இப்போது நான் எங்கு போவது’ என செந்திலிடம் உடல்மொழியில் வருந்துவார். இந்த ஷாட்டின் நீளம், மற்ற ஷாட்களின் நீளத்தை விட அதிகம்.

ree

ஷாட் 2: வீட்டை விட்டு சென்று கொண்டிருக்கும் ரஜினியை பார்க்கும் செந்தில் அழத்துவங்குவார்.

ree

ஷாட் 3: கடந்து சென்ற ரஜினியை பார்க்கும் செந்தில் வருந்துவது.


ree

ரஜினியை பார்த்து வருந்தும் யானைக்குட்டியைக் கூட க்ளோசப் ஷாட்டில் காண்பித்திருப்பார்கள். படம் துவங்கிய முதலே யானைக்குட்டி அந்த வீட்டில் இருக்கும். 'கொக்கு சைவக் கொக்கு’ பாடலில் யானையின் மீது அமர்ந்து ரஜினி புல்லாங்குழல் வாசிப்பார். எப்படிப்பார்த்தாலும் ரஜினியுடன் அந்த வீட்டில் வளர்ந்த பிணைப்பு அது. அதனால் தான் Mid ஷாட்டிலிருந்து அதன் கண்ணுக்கு வைக்கப்படிருக்கும் க்ளோசப் ஷாட் வரை அந்த ஷாட்டின் நீளமும் அதிகமாக இருக்கும்.


ree

இப்பாடலில் மிகக்குறைந்த நீளமான ஷாட் பொன்னம்பலத்திற்கு தான். ஒரு நொடி கூட இருக்காது.

ஏனெனில், தன் திட்டம் வெற்றி பெற்ற அகந்தையில் பார்க்கும் பொன்னம்பலத்தை, மாயி படத்தில் வடிவெலு பெண் பார்க்கும் காட்சியில், மின்னல் போன்று வேகமாக ஓடுகிற பெண்ணைப்போல, சரக்கென்று காண்பித்தால் கூட போதும். அவரது ரியாக்‌ஷன்கள் கூட நீண்ட நேரம் காண்பிக்கத் தேவையில்லை. அவர் கடமை முடிந்துவிட்டது. அதனால் தான் க்ளோசப் கூட வைக்காமல் MID SHOT ல் காண்பித்திருப்பார்கள்.


ree

வடிவேலு, காந்திமதி மற்றும் ஏனைய நாடக குழுவினர் சமீபத்தில் ரஜினிக்கு அறிமுகமானவர்கள். செந்திலைப் போல நீண்ட கால பிணைப்பு என்பது அவர்களுக்கில்லை. அதனால், அனைவருக்கும் சேர்த்து ஒரே ஷாட்டில் காண்பித்திருப்பார்கள்.

இப்படியாக, ஒரு காட்சியில் (Scene) பயன்படுத்துகிற ஷாட்கள் (Shot), ஒரு காட்சியில் காண்பிக்கப்படும் ஒரு ஷாட்டின் நிளம் போன்றவை அவ்வளவு நுட்பமானவை.

இந்த இடங்களில் தான் பெரும்பாலும் படத்தொகுப்பாளருக்கும், இயக்குநருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதை இயக்குநர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார்.

அந்த வகையில் காட்சிகளின் நீளத்தையும், கேமரா கோணங்களையும் காட்சியின் வேகம், தன்மைக்குத்தார் போல திறம்பட பயன்படுத்தத் தெரிந்தவர்களே இதில் மாஸ்டர்களாகிறார்கள்.

 
 
 

Comments


bottom of page