லவ்வர் திரைப்படம் கூறும் உளவியல் சிக்கல்...
- Gowtham G A
- Feb 6
- 10 min read
(மணல்வீடு 52ஆம் இதழில் வெளியான கட்டுரை)

பிடிக்கிறதோ… இல்லையோ… திரையரங்குகளில் திரைப்படம் துவங்குவதற்கு முன்பு கட்டாயம் பார்த்தே ஆகவேண்டிய “நான் தான் முகேஷ்…” என துவங்கும் புகையிலை விழிப்புணர்வு விளம்பரத்தில் தன்னை முகேஷ் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவர், தொடர்ந்து ஒரு ஆண்டு குட்கா உட்கொண்டதில் வாயில் புற்று நோய் வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக சொல்லுவார். கிட்டத்தட்ட இதே வகைமையில் சொல்லப்பட்டிருக்கும் கதையாகத்தான் மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ திரைப்பத்தை பார்க்க முடிகிறது.
முகேஷ்க்கு பதிலாக “நான் தான் அருண். என்னை உயிருக்கு உயிராக காதலித்த என் காதலியின் மீது நம்பிக்கை இல்லாமல் அவளை மிகவும் கொடுமைப்படுத்தினேன். இப்போது அவளின்றி தனிமையில் வாடுகிறேன்” என்று சொல்லும் ஒரு கதையைத்தான் நாம் திரையில் காண்கிறோம்.
தனித்துவமான மற்றும் அதே நேரத்தில் தங்களுடன் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கும் காதல் கதைகள் எப்போதும் பார்வையாளர்களால் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் ‘ப்ரேக்கப்’ என்று சொல்லக்கூடிய காதலின் பிரிவை பக்குவமாகக் கையாளப்பட்ட திரைப்படங்களில் முக்கியமானது ‘லவ்வர்’.
சமீப காலமாக நச்சுத்தன்மையை குறிக்கும் ‘டாக்ஸிக்’ (Toxic) என்ற வார்த்தை அதிகம் மக்களிடையே புழங்கிக்கொண்டிருக்கிறது. டாக்சிக் மட்டுமல்ல, சென்ற தலைமுறை வரையிலுமே பெரிதாக யாரும் பயன்படுத்தாத டிப்ரஷன் (Depression), ஏன்சைட்டி (Anxiety) போன்ற புதுப்புது வார்த்தைகள் தற்கால சமூகத்தில் வெகு இயல்பாக புழங்கிக்கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு சமகால மனிதர்களிடைய மன அழுத்தமும், குரூரமும் கூடிக்கொண்டு வருவதாக கூறுகிறது அறிவியல்.
இது போன்ற வார்த்தைகள் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ, வெறும் வாயை மெல்பவனுக்கு அவுல் கொடுத்ததைப்போல, ஆண்களை குறை சொல்வதற்கான காரணங்கள் தேடும் போலி முற்போக்கு கும்பல்களுக்கும், தன் ஆதாயத்திற்கு இணை தேடும் போலி காதலர்களுக்கும் மிகவும் பயன்படுகிறது.
டாக்ஸிக் மட்டுமின்றி நட்பு, காதல் என்றிருந்த நிலைக்கு நடுவில் புதிதாக முளைத்த ’பெஸ்டி’ (Bestie) போட்ட குட்டிகளாக Friends with Benefits, Flirtationship, Situationship, Pocketing என பல உறவுகள் தங்கள் தேவைக்கேற்றவாறு அரிதாரம் பூசிக்கொள்கின்றன.
கல்லூரி நாட்களில் தான் காதலித்தவள், காலம் மாற அவள் நட்பு வட்டம் மாற முன்பு போல ‘எழுந்துவிட்டேன், குளித்துவிட்டேன், சாப்பிட்டு விட்டேன்’ என குறுஞ்செய்திகள் அனுப்பாமல் போவது, அலுவலக பணிகள் காரணமாக முன்பு போல நேரம் செலவிடாமல் போவது அவனுக்குள் ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. அந்த மன அழுத்தத்தில் அவள் அருகில் நிற்கும் எந்த ஆண்மகனும் அவனுக்கு வில்லனாகத் தெரிகிறான்.
சமூகத்தில் நிலவும் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள அஞ்சும் அருணுக்கு (மணிகண்டன்), இது போன்ற வலையில் திவ்யா (கௌரி ப்ரியா) சிக்கிவிடுவாளோ என்ற பயத்தில் அவள் மேலிருந்த நம்பிக்கையைத்தாண்டி அவளை பாதுகாக்க வேண்டும் என நினைக்கத்துவங்குகிறான்.
“உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்” எனும் பெயரில் நிகழ்த்துவதே ஒரு மிகப்பெரிய வன்முறை. முதலில் ஒருவரை எதற்கு பாதுகாக்க வேண்டும்? பயணத்தின் போது திவ்யாவின் தோழியுடைய காதலன் ‘சுஹைல்’ என்பவனிடம் அருண் “நீங்க உங்க காதலிக்கு இவ்ளோ சுதந்திரம் கொடுக்குறீங்களே! தப்பில்லையா?” என்று கேட்பான். அந்த இடத்தில் தான் அருணுக்கு இருக்கும் பிரச்சனையின் வேர் என்ன என்றே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. “அவளுக்கு சுதந்திரம் கொடுக்க நான் யார்? அவளது சுந்தந்திரம் அவளுடையது. எனது சுதந்திரம் என்னுடையது” என்று தெளிவாக பதில் சொல்கிறார் அக்கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஹரிஷ் குமார்.
“நான் சரியாகத்தானே பேசுகிறேன்?” என்று கேட்கும் போது, அதெல்லாம் சொல்ல மாட்டேன் என நேரடியாக ‘சுஹைல்’ பதில் சொன்னதும் அருணின் முகம் மாறிப்போகிறது. அருணுக்கு எதிர்மறையான எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என்பது இதில் தெரிகிறது. காரணம் அருண் வளர்ந்த விதம்.
இரண்டு மனைவி வைத்துக்கொண்டு தன் தாயை அடக்கும் ஆதிக்க மனநிலை கொண்ட தகப்பனும், அவரை கேட்க முடியாத மனைவியும் என, சிறு வயதிலிருந்து அவன் பார்த்து வளர்ந்த பெற்றோரின் கொடூரமான உறவுமுறையின் தாக்கம் தனக்கே தெரியாமல் தன்னுள் ஊடுவி கிட்டத்தட்ட தானே தன் தந்தையின் நகலாக மாறி, திவ்யாவை தன் தாயின் நகலாகவும் மாற்றியிருக்கிறான் என்பதை மிகத் தாமதமாக உணர்கிறான் அருண்.
முதலில் இந்த ‘அருண்’ கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர், திரை எழுத்தாளர் மணிகண்டன் அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களின் மூலம், தமிழ் சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகர்களில் ஒருவராக வலுவாக வேறூன்றி வருகிறார். கல்லூரி மாணவனாக பிரகாசிக்கும் போதும், தொழிலில் நஷ்மடைந்து இருள் சூழ்ந்த முகத்தில் எரிந்து விழும் போதும், அவளின்றி அழும் போதும், கல் போதையில் உளரும் போதும் மணிகண்டனின் உடல் மொழியிலும், வசனங்கள் வெளிப்படுத்தும் விதத்திலும் காட்டும் மாறுபாடுகள் இதற்கு சான்று.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்கவே பெரும்பான்மையான நடிகர்கள் விரும்புவார்கள். எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் வரை அது தொடர்கிறது. அதன் பின்னால் ஒரு பெரும் வணிகமும் உள்ளது. நட்சத்திர அந்தஸ்தை எட்டுவதற்கு இது ஒரு மிகச்சிறந்த ட்ரம்ப் கார்டு. ஆனால் இப்படி ஒரு எரிச்சல் தரும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தல் என்பது கத்தி மேல் நடப்பதற்கு சமம். கொஞ்சம் அசந்தாலும் அனிமல் திரைப்பட நாயகனுடன் ஒப்பிட்டு, குதறிவிடும் வெறிகொண்ட முதலைக்கூட்டம் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்க, இந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தன் கதாப்பாத்திரத்தின் பெயரால் தன் மீது நிறைய விமர்சனங்களும், வசைக்கற்களும் விழும் என அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், தைரியமாக அக்கதாப்பாத்திரத்தை ஏற்று அவர் நடித்திருப்பது அக்கதையின் மீதிருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
தன் சொல் கேளாத காதலியை அதட்டும் போதும், அசிங்கமான வார்த்தையில் திட்டும் போதும், கார் கண்ணாடியை உடைக்கும் போதும், பின்பு அவள் பின்னால் கெஞ்சும் போதும், கடற்கரையில் மனம் விட்டு அழும் போதும், நமது வாழ்வில் நாம் பார்த்த ஏதோ ஒரு பிரதியை நினைவூட்டுகிறது இந்த கதாப்பாத்திரம். எல்லோரும் ஒரு காலகட்டத்தில் நிச்சயம் அருண் கதாப்பத்திரமாக இருந்திருப்பார்கள்.
பொதுவாக, காதலில் முறிவு என்றால் அவளை விட்டுவிட்டு அடுத்த பெண்ணை பார்க்கும் ஆண்கள் மத்தியில், அருண் காதாப்பாத்திரம் மட்டும் வேறு யாரையும் தேடாமல் தன் காதலியின் மீது மட்டும் இவ்வளவு பைத்தியக்காரத்தனமாக இருப்பதை பார்க்கும் பெண்கள் “ஐயோ பாவம். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே!” என்று வருந்துவார்கள். ஆனால் அவரைப்போன்ற ஒருவரை தங்கள் வாழ்வில் யாரும் ஏற்றுகொண்டு அந்த ரிஸ்கை எடுக்க மாட்டார்கள்.
இத்திரைப்படத்தில் மிகவும் பாவப்பட்ட கதாப்பாத்திரம் என்றால் அது திவ்யா தான். கல்லூரியில் ரசித்துப்பார்த்த அதே காதலன் குரூரத்தின் மறு வடிவமாக இப்போது மாறிப்போய் அவனை எதிர்நோக்க முடியாமல் காட்டும் பயமாகட்டும், பொய் சொல்லி சிக்கிக்கொள்ளும் இடத்தில் காட்டும் நடுக்கமாகட்டும், அருண் கஞ்சா விற்றுக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அதிர்ந்து போய் அழுவதாகட்டும், எல்லா காட்சிகளிலும் தனியாளாக திரையை நிரப்ப முயற்சி செய்கிறார். குறிப்பாக அருணின் அம்மாவிடம் தான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் தன்னால் இந்த உறவை தொடர முடியாமல் போனதை சொல்லி அழும் காட்சியில் தெரிகிறது அவர் நடிப்பின் தீவிரம்.
என்னதான் அக்கறை எனும் பெயரில் எடுத்துக்கொண்டாலும் அதை சொல்லும் விதம் மிக முக்கியமானது. நாயகன் பேசுவதும், நடந்துகொள்ளும் விதமும், பார்க்கும் நமக்கே இவ்வளவு கோவம் வரும் போது அதை எதிர்நோக்கும் பெண்ணுக்கு அது எத்தனை கடினமாக இருந்திருக்கும்? அந்தக்கோணத்தில் யாரும் அவளைப்பார்க்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவனுக்கு வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறாள். ஒன்றல்ல இரண்டல்ல… கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள். இத்தனை காலம் காதலித்தும், அவள் வேலைச்சூழல் என்ன என்பது தெரிந்தும் அவளை புரிந்துகொள்ளாத அருண் போன்ற ஒருவனை யார் தான் தாங்கிக்கொள்வார்கள்!
இதுவரை கொடுத்த வாய்ப்புகள் எல்லாம் வீணாகிப்போக, இனியும் வேண்டாம் என்று முடிவு செய்து வெறுத்துப்போய் விலகும் போது அவனுக்குள் மாற்றம் வருவதை காண்கிறாள் திவ்யா. “என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்” என கேட்கும் தருணத்தில், அவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகிறாள். இதுவரை அவன் மீது அவள் கட்டியிருந்த பிம்பத்தில் ஒரு வித குழப்பம் சூழ்கிறது.
ஒரு பக்கம் “இவன் இனி வேண்டாம்” என்று புத்தி முடிவெடுத்திருக்க, இன்னொரு பக்கம் இவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிகிறதே என சொல்கிறது மனது. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு வித குழப்பம் அவளுக்குள். அதனால் அருண் கிளம்பும் சமயம் உடைந்து போய் அழுது இறுதியாக அருணை கட்டிப்பிடிக்கிறாள்.
இப்போது அவனுக்குள் ஒரு குழப்பம். அவளது இந்த மாற்றம் தற்காலிகமானது. நாளை ‘நாம் தவறான முடிவெடுத்துவிட்டோமோ’ என்றும் அவளை நினைக்க வைக்கலாம். இந்தப்பிரிவு சரியானது என்பதை உணரும் அருண் அங்கிருந்து கிளம்பி விடுவான். அந்த பிரிவு அவளை விட அவனுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது.
அருண் கதாப்பத்திரத்துடன் முக்கியமாக குறிப்பிட வேண்டிய மற்றொரு கதாப்பாத்திரம் ’மதன்’. மதன் அறிமுகமாகும் நேரமும், சூழலும் மிக முக்கியமானது. தன் காதலின் பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் திவ்யா, மதனுடன் வார இறுதியில் செல்லும் பயணங்கள் வழியே கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறாள். ஒரு பக்கம் போன் மேல் போன் செய்து தொல்லைபடுத்தும் அருணைவிட, எதையும் கேட்காமல் தன் இருப்பில் இருக்கவிடும் மதன் அவளுக்கு ஒரு பாதுகாப்பான வளையத்தை உருவாக்குகிறான். இதன் வழியே திவ்யாவுடன் ஒரு வித ஈர்ப்பை பெருகிறான் மதன். ஆனால் அதை பக்குவமாக கையாள்கிறான் மதன்.
நல்ல வேளையாக மதன் திவ்யாவுடன் சமீபத்தில் நட்பாகியிருந்தாலும் கூட, அருணை நன்றாக புரிந்துகொள்கிறான். காரணம், மதனுடைய முன்னாள் காதல். மதனும் தனது காதலியுடன் பிரியும் போதும் இப்படித்தான் இருந்திருப்பான். அருண் செய்வதெல்லாம் பார்க்கும் போது, நாமும் அப்போது இப்படித்தானே செய்து கொண்டு இருந்தோம் என்று நினைத்துப் பார்த்திருப்பான். அதனால தான் கடற்கரையில் நாயகன் கோவப்பட்டதை கூட மறந்திருப்பான். முதலில் நானும் அருண் போலத்தான் இருந்தேன் என்று சொல்லி அவன் எதனால் இப்படியெல்லாம் செய்கிறான் என்று மறைமுகமாக அவளுக்கு புரியவைப்பான். இதெல்லாம் வேறம் யாரும் செய்யாத ஒன்று.
மதன் கதாப்பாத்திரம் நாயகனுக்கு ஆதரவாக நின்று பேசவில்லையென்றாலும், அவனை பற்றி தவறாகவும் பேச மாட்டான். அப்படிப்பட்ட ஆண்கள் இப்போது அழிந்து வரும் அரிய உயிரினம். நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது நாம் அவள் முன்னால் நாயகன் ஆகலாம் என்று நினைக்கும் ஆட்களுக்கு, மத்தியில் மதன் ஒரு கண்ணியமான ஆண்.
அந்தப் பயணம் முடியும் போது அருணும் மதனும் நல்ல நண்பர்களாகியிருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் உடன் இருந்தால், யாராக இருந்தாலும் தனது மோசமான மனநிலையிலிருந்து சீக்கிரம் மேல் வந்து விடலாம்.
காதலர்கள் மத்தியில் நுழையும் ஒரு ஆணோ பெண்ணோ பெரும்பாலும் அந்த உறவில் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்கும் ஆட்களாகத்தான் இருப்பார்கள். “உன் தகுதிக்கு இவனெல்லாம் ஒரு ஆளே இல்ல. இன்னும் சிறந்த ஒருவன் தான் உனக்கு சரியாக இருக்கும்” என்று திவ்யாவின் தோழி சொல்லும் காட்சி ஒரு நல்ல உதாரணம்.
ஆனால் அதற்கு நேர்மாறாக அருணின் நண்பன் “திவ்யா தங்கம்டா. விட்றாத” என சொல்லுகிறான். இதற்குப்பின்னால் நுட்பமான ஒரு உளவியல் உள்ளது. ஒரு ஆணின் மீது ஆணுக்கு இருக்கும் பொறாமையை விட, பெண்ணின் மீது பெண்ணுக்கு இருக்கும் பொறாமை மிக அதிகம். அவர்கள் இன்னொரு பெண்ணின் நுண்ணிய விபரங்களையும் ஆராய்கிறார்கள். ஆனால் ஆண்களோ அதை பெரிதுபடுத்துவதில்லை. அதனால் தான் ஆண்களால் அதிக ஆண்டுகள் தங்கள் நட்பை தொடர முடிகிறது.
இது போன்ற உறவுகளின் பிரிவில், பின்னால் நிற்கும் இவர்களை ஒருவேளை நீக்கிவிட்டிருந்தால், காதலர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி சமாதானம் ஆகியிருப்பார்கள். சரியோ தவறோ அது இரு மனங்கள் முடிவு செய்து உருவான பந்தம். அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யும் வரை அது ஒரு அழகிய காதலாக முடிவுறும்.
அப்படியில்லாத உறவுகள் தான் காவல் நிலையத்திலும், மகளிர் அமைப்புகளிலும், நீதிமன்றங்களிலும், அரசியல்வாதிகளின் கட்டப்பஞ்சாயத்துகளிலும் தங்கள் உறவை மோசமான முறையில் முறித்துக்கொள்கின்றன. பின்னாளில் இதன் விளைவாக தானே நினைத்தாலும் சென்று பேச முடியாத / உறவை புதுப்பிக்க முடியாத சூழலில் அந்த பந்தம் கொள்ளி வைக்கப்படுகிறது.
“என்னிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறாயே. உன் அப்பாவுக்கு உங்கள் அம்மா ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் தானே!” என்று திவ்யா கேட்கும் இடம் முக்கியமானது. அந்த இடத்தில் தான் அருணுக்கு தன்னை இவள் எப்படி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதே புரிகிறது. அது வரையிலும் சண்டை போடுவோம். பிறகு சேர்ந்து கொள்வோம். ஆறு ஆண்டுகளாக இப்படித்தானே இருந்தோம் என நினைத்துக்கொண்டிருந்தான்.
அருண் மட்டுமல்ல உலகின் பல ஆண்களுக்கும் தன் காதலியுடனான சண்டையிலும், பிரிதலின் போதும் அவள் மனதில் எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்ற தெளிவு கிடைக்காது. அதனால் அதன் தீவிரம் புரியாமல் ஆண்கள் நகர்த்தும் காய்கள் தான் அவர்களுக்கே வினையாகிப்போகிறது.
தன் அம்மாவை ஒருவர் தவறாக நடத்துகையில் அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத போது, தானும் அப்படித்தான் தன் காதலியிடம் நடந்து கொண்டிருக்கிறோம் என்று தனக்கு தெரிய துவங்கிய பின்னரே அவனிடம் மாற்றங்கள் பிடிபட ஆரம்பிக்கிறது.
பயணம் முடிந்து சென்னை திரும்பும் வேளையில் அம்மாவிடமிருந்து அருணுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில் இனிமேல் தன் கணவன் இல்லாமல் வாழ முடிவெடுத்துவிட்டதாகவும், விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட அச்சின் (தந்தை) கதையும், நகலின் (மகன்) கதையும் ஒரு சேர முடிவுக்கு வருகின்றன.
இப்படம் எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர்மறையாகவும், எதிர்பாராமல் சில நேர்மைறையான விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பெற்றிருந்தாலும் இது சமகாலத்தில் அவசியம் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற திரைப்படங்கள் நிஜத்தில் வாழும் அருண்களையும், இதுவரை அருணாக வாழ்ந்து திருந்தியவர்களையும் நிச்சயம் உலுக்கிவிடும்.
குறிப்பாக தன்னை விட்டுச்சென்ற திவ்யா பயணங்களிலும், தன் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் அருணுக்கும் அவனுக்குள் தன்னை பொருத்திப்பார்க்கும் ஆண்களுக்கும் ஒரு வித பொறாமை குடிகொள்ளும். தான் இப்படி புலம்பும் போது தன் காதலி மட்டும் எப்படி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள்! இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக ஸ்டோரி போடுகிறாள்! என்று.
இது எல்லோருக்கும் இருக்கின்ற உளவியல் சிக்கல். இதே இடத்தில் ஒரு ஆண் தன் காதலி இல்லாமல் மகிழ்வாக இருப்பதை பார்க்கும் போது அந்த பெண்ணுக்கும் உருத்தல் வரத்தான் செய்யும். அவன் இல்லாமல் நான் இங்கே எப்படியெல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கிறேன். அவன் மட்டும் எப்படி மகிழ்வாக இருக்கிறான்? அப்போது அவன் உண்மையாக காதலிக்கவில்லையா என்று நினைக்க தோன்றும்.
இத்திரைப்படத்தை பார்க்கும் போது இதோடு மேலோட்டமாக தொடர்புடைய இரண்டு திரைப்படங்கள் நினைவுக்கு வருகிறது. முதலாவது செல்வராகவன் எழுத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ (2016).
ஆதிக்க மனநிலை கொண்ட அப்பா, அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத அப்ராணி அம்மா என்ற குடும்ப பிண்ணனியில் வளர்ந்த நாயகன் ‘பிரபு’வின் மனதில் அவனுக்கே தெரியாமல், ’தான் சொல்வதை எல்லாம் தன் மனைவி கேட்க வேண்டும்’ என்ற ஆதிக்க மனநிலை குடிபுகுகிறது. அவனது மனநிலை அவள் மனைவி மனோஜாவை (வாமிகா கபி) கொஞ்சம் கொஞ்சமாக விலக வைக்கிறது. பின்னொரு நாளில், அவளை விட்டுப்பிரியும் தருணத்தில், அவளுடன் மீண்டும் இணைய முற்படும் அவனுக்குள் மனதளவில் நிகழும் போராட்டத்திலும், அவளது முன்னால் காதலன் அவளை எப்படி அணுக வேண்டும் என்று சொல்வதும் அவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லோருக்கும் ஞானம் ஒரே நாளில் உதிப்பதில்லை.
இரண்டாவதாக, ரௌத்திரமான நாயகனும் அவன் பின்னால் அலையும் பித்துப்பிடித்த காதலியுமாக நினைவுக்கு வருகிறது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ (2019). இப்படத்தின் நாயகன் கௌதமிற்கும் (ஹரிஷ் கல்யாண்) மிக மோசமான சிறு வயது அனுபவம் இருக்கும். விவாகரத்து பெற்று வேறொருவருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் அம்மாவுடன் ஒட்டாமல், அப்பாவுடன் வாழும் நாயகனுக்குள் சிறு வயதிலிருந்தே பெண்கள் மீது பெரிய மதிப்பிருப்பதில்லை. காதல் என்று வந்தாலும் பின்னர் அங்கும் தொடரும் அதே ஆதிக்கம்.
கிட்டத்தட்ட மேலே நான் குறிப்பிட்ட மூன்று ஆண் நாயகர்களுமே மிக மோசமான பால்யத்தை கொண்டிருக்கிறார்கள். தனிமையில் தங்களை தொலைத்திருக்கிறார்கள்.
'லவ்வர்’ அருண் வீட்டிலேயே இருக்கிறான். குடிக்கிறான். புகைக்கிறான். அதிகபட்சம் அருகிலிருக்கும் டாஸ்மாக் சென்று குடிக்கிறான்.
பிரபுவுக்கு (மா.நே.மயக்கம்) அலுவலகம், நண்பர்கள், வீடு இதைத்தவிற எதுவும் தெரியாது. அதைவிட வேறு எந்தப்பெண்ணையும் ஏறெட்டும் பார்க்காமல் தன் கன்னித்தன்மையை மனைவிக்காக சேமித்திருக்கிறான்.
கௌதம் (இ.ரா.இ.ரா) மட்டும் கொஞ்சம் பயணப்படுகிறான் .
ஆனால் மூன்று பேருக்கும் தனக்கிருக்கும் ஜார்லா நண்பர்களைத்தாண்டி பெரிதாக புதிய நண்பர்களையும், நட்பு வட்டத்தையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவும் இல்லை.
ஆனால்,
அப்படியே பெண்களின் பக்கம் நின்று பார்த்தால்…
திவ்யா தன் காதல் முறிவிலிருந்து மீள நிறையவே பயணப்படுகிறாள். இணையத்தின் வழியே இசை கற்க முயல்கிறாள்.
அருணின் அம்மாவாக வரும் ‘கீதா கைலாசம்’ கூட தனியாக ஸ்கூட்டி ஓட்ட கற்றுக்கொள்கிறார். மாடியில் சிறு தோட்டத்தையே வடிவமைக்கிறார்.
மனோஜா (மா.நே.மயக்கம்) தன் வீட்டையே மாற்றி யாரும் அணுகாத தூரம் சென்றுவிடுகிறாள். புதிய வாழ்க்கையை துவங்குகிறாள். வீட்டு உரிமையாளரையே மிரட்டும் தைரியம் அவளிடமிருக்கிறது.
துவக்கத்தில் கௌதமின் கோபமும், திமிரும் பிடித்துப்போன தாராவுக்கு (இ.ரா.இ.ராணியும்) போகப்போக அந்த கோபமே அவனிடமிருந்து அவளை விலக்குகிறது.
”கௌதம்… நீ காதலிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு முறை உன் காதலை இழந்தால், உன்னால் மீண்டும் பெற முடியாது…”
இது கௌதமை விலகும்போது தாரா சொல்லும் வார்த்தை. அப்போது அதை பொருட்படுத்தாத கௌதமுக்கு மெல்ல மெல்ல உடலில் பரவும் விஷமாக அவனை ஆட்கொள்ளத்துவங்குகிறது அவளின் நினைவுகள். இப்படியாக திவ்யாவை இழந்த அருணும், மனோஜாவை இழந்த பிரபுவும் அவளின்றி என்ன செய்வது என்ற நிலையில் பித்துப்பிடித்துப்போகின்றார்கள். மனோஜாவிடம் கெஞ்சிக்கேட்கும் பிரபு நீதிமன்றத்தில் அவள் காலில் விழவும் தயாராகிறான்.
“உலகத்தில் வேறு பெண்ணா இல்லை” என்று கேட்பவர்களும், “ஆக வேண்டிய வேலையைப்பார்” என்று அறிவுறுத்துபவர்களும், தங்கள் கடமை முடிந்த பின் தத்தம் துணையை காண சென்று விடுகிறார்கள். அவர்கள் தாழிடும் கதவின் பின்னால் ஒளிந்திருந்து நள்ளிரவில் தன் வேலையைத்துவங்கும் கூர்காவைப்போல் இரவின் தனிமையில் மிகச்சரியான நேரத்தில் நம்மை சூழ்ந்துகொள்கிறது, நாம் தொலைத்தவர்களின் நினைவு. ஒரு கணத்தில் அது கோபமாகி, மறு கணத்தில் அது காதலாகி இரண்டுக்கும் நடுவில் நிற்கும் மனம் மாறி மாறி உயிரை காவு வாங்குகிறது.
இதனால் தான் இழந்த தேசத்தை எப்படியேனும் மீட்க போராடும் ஒரு மன்னனின் மனநிலையில், தான் இழந்த தனது துணையை எப்படியேனும் சமாதானப்படுத்தி விட, மேலும் ஏதோ ஒன்றை செய்து அது பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தி அதை குழப்பமான சூழலாக்கி இறுதியில் சேரவே முடியாத ஒரு சூழலை உருவாக்கி பிரிவதில் தான் பெரும்பாலான காதல்களின் இறுதி அத்தியாயங்கள் முடிகின்றன.
வீரத்தில் ப்ளாக் செய்யும் அதே மனம், சில நாட்களில் தன் அலைபேசி, வாட்சாப், மெசேஜ், டெலிகிராம் போன்றவற்றில் ப்ளாக் செய்யப்பட்ட அவளிடம்/அவனிடம் எப்படி பேசுவது என்பதற்கான சாத்தியக்கூறுகளை சிந்திக்க வைத்து, பணம் செலுத்தும் ‘கூகிள் பே’ போன்ற செயலிகளிலும் பேச வைக்கிறது. இப்படியாக சமகாலத்தின் யதார்த்த காதலை உண்மைக்கு பெரும்பாலும் மிக அருகாமையில் காண்பிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்.
இதே ‘அருண்’ போன்ற கதாப்பாத்திரங்களுக்கு பெண் வடிமமும் உண்டு. ஆனால், அருண் என்ற கதாப்பாத்திரம் எழுதப்பட்ட காரணத்தை புரிந்துகொள்ளாத, அவனது முந்தைய ஆதிக்க மனநிலையில் தன்னை நாயகனாக ஒப்பிட்டுக்கொண்டு “நானும் இப்படித்தான் கஷ்டப்பட்டேன். என்னைய ஏமாத்திட்டா!” என புலம்பி, படத்தின் இறுதியில் நாயகன் உணவகம் ஆரம்பித்த பின்பு “இதோ பார். அவன் முன்னேறிய பிறகு இப்போது நாயகி பல் இளிக்கிறாள். இந்த பொண்ணுங்களே இப்படித்தான்” என ஆண்களும், ஆதிக்க ஆண்களை பிரதியெடுத்தது போல “காதல் என்றால், என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? படம் முழுக்க தன் காதலியை டார்ச்சர் செய்வாராம்! படத்தின் இறுதியில் திருந்தி உணவகம் ஆரம்பித்து விடுவாராம்! இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்!” என்கின்ற பெண்களும், இன்னும் தனது பிற்போக்கான சிந்தனைக்கு இத்திரைப்படத்தை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு கூட்டம் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறது.
‘மாமன்னன்’ திரைப்படத்தில் ‘பகத் பாசில்’ நடித்த சாதி வெறி பிடித்த ‘ரத்னவேலு’ கதாப்பாத்திரத்தை நாயகன் போல உருவகப்படுத்தி அவரது வீடியோக்களை சமூக வளைதளத்தில் உலவ விடும் வக்கிரங்களின் குரங்குக் கைகளில் சிக்கிய பொம்மையாகிப்போனது இத்திரைப்படம்.
ஏற்கனவே காதலின் அதிநுட்பமான விஷயங்களை ஏற்றுக்கொள்ளக்கூட தயாராக இல்லாத இந்த வானரக் கூட்டத்தில் அதை பேசுவது அந்த கும்பலுக்கு இன்னும் சாதகமாகிவிடும் என்பதால் அது போன்ற சொல்லப்பட வேண்டிய நுண்ணிய கதைகளும் சொல்ல முடியாமல் போய் விடுகிறது.
ஓர் உறவின் வெளியிலிருந்து பார்க்கும் எவரும் அதை விமர்சிக்கலாம். ஆனால் கள யதார்த்தம் வேறு. உதாரணமாக, கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் ஒரு ஷாட் தவறாக ஆடும் போது அவரை அத்தனை மோசமாக திட்டுவோம். “நான் மட்டும் அங்க இருந்திருந்தா இந்த பந்தை எப்படி ஆடியிருப்பேன் தெரியுமா” என்றெல்லாம் சொல்லியிருப்போம். ஆனால் களத்தில் இருக்கும் சூழல், எஞ்சியிருக்கும் ஓவர்கள், பந்து வீசுபவர் மீது வைக்கும் கணிப்புகள், ரன்கள் துரத்தும் மன அழுத்தம் என கிரிக்கெட் எனும் விளையாட்டு அப்படித்தான் நடக்கும். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் நம் பக்குவம். அது போலத்தான் காதலும் உறவுகளும்.
நஞ்சு எனில்
நஞ்சாகவே கொடுங்கள்.
நீரில், மோரில் வேண்டாம்.
என்ற கல்யாண்ஜி அவர்களின் வரிகளைப்போல, பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதை (ஸ்டாக்கிங்) பாடல்களுடனும், பிண்ணனி இசையுடனும், அழகிய கேமரா கோணங்களிலும், அதற்கு பொருந்தக்கூடிய நாயகன் நாயகிகளைக்கொண்டு கொண்டாடும் மசாலா திரைப்படங்களுக்கு மத்தியில், விஷத்தை விஷமாகவே காட்டிய விதம் தற்கால திரைத்துறையில் ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பு.
இந்த இயற்கை பல மனிதர்களை நம் வாழ்வில் தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதில் சிலர் ஏதோ ஒரு வகையில் நமக்கு நெருக்கமாகிப் போகிறார்கள். சிலர் நம்மை விட்டு விலகவும் செய்கிறார்கள். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது போல, ஒரு பக்கம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்கள் நம் வாழ்விலிருந்து அகல இன்னொரு பக்கம் புதுப்புது மனிதர்கள் நாம் நினைத்தே பார்க்காத பல்வேறு திசைகளிலிருந்து அறிமுகமாகிறார்கள். எந்த மோசமான நமது சூழலிலும் இந்த சுழற்சியானது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், இந்த அருண் வகையாராக்கள் தான் ஜன்னலைத்திறக்காமல் புழுக்கமாக இருப்பதாக புலம்பித் தவிக்கிறார்கள். இது தனி ஒருவனின் தேர்வு. அவரவர் உலகில் வாழ்ந்து பார்க்கும் வரை அவர்கள் வேதனை நமக்குப்புரிவதில்லை.
இந்தியா இன்னும் திருமணம் எனும் உறவில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் கட்டுப்படுத்தும் சிக்கலில் இருந்து மீளவில்லை என்பது தான் உண்மை. இது காதல் மற்றும் திருமணம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. ஆணுக்கும் பெண்ணுக்குமான சமகால உளவியல் பிரச்சனை. ’ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும். அவளிடம் எப்படி பேச வேண்டும். அவளுக்கு என்ன தேவை? அவளுக்கு எதெல்லாம் பிடிக்காது? தான் சொல்ல வருவதை அவள் மனம் நோகாமல் எப்படி தெரிவிப்பது’ என்பதை ஆண் சமூகமும், ‘அவன் என்ன சூழலில் இருக்கிறான்? அவன் எதனால் இப்படி நடந்து கொள்கிறான்? அவன் கோபத்தின் பின்னால் ஒளிந்திருப்பது என்ன?’ என்பதை பெண் சமூகமும் புரிந்துகொள்வதேயில்லை. அதே சமயம் இங்கு எல்லோரும் திவ்யாக்களும் இல்லை, எல்லோரும் அருண்களும் இல்லை. சரியாக பொருந்தக்கூடிய இரு மனங்களிடம் மட்டும் காதல் அத்தனை எளிதில் வந்தடைவதில்லை.
அதனால் யார் சரி? யார் தவறு? என்றெல்லாம் அடிக்கோடிடாமல், அருண் திவ்யா இருவரின் உலகத்தையும் நமக்கு காட்டிவிட்டு, யாரையும் மதிப்பிட (Judge) நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று மறைமுகமாக உணர்த்திவிட்டு சென்றுவிட்டார் இயக்குநர்.
அடுத்தடுத்து நகரும் வேகமான திரைக்கதைக்கு மாற்றாக தன் இயல்பான வேகத்தில் நகரும் கதையும் திரைக்கதையும் பெரிதாக நம்மை சோதிக்கவில்லை. சில இடங்களில் மட்டும் மீண்டும் மீண்டும் ஒன்றையே பேசுவது போன்றதொரு உணர்வு. இருந்தாலும் திரையில் பார்க்கும் நமக்கு எப்படித்தோன்றுகிறதோ அப்படித்தான் திவ்யாவுக்கும் இருந்திருக்கும் என்பதை மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறது.
துவக்கத்தில் குறிப்பிட்ட ‘முகேஷ் விழிப்புணர்வு’ வீடியோவில் வருபவனைப்பொல அருண் துயரங்களைக்கடந்தாலும், நல்லவேளையாக முகேஷ் போல இறக்கவில்லை. தற்கொலை எத்தனை முட்டாள் தனமானது என்பதையும் அதை கடந்து வருபவர்களால் நிச்சயம் ஒரு அழகான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் தற்கொலைக்கு முயலும் அருண், மற்றும் அவனது அம்மாவின் கதைகள் வழியே உணர்த்துகிறது.
ஒரு திரைப்படத்தின் துவக்கம் எப்படி முக்கியமோ, முடிவும் (க்ளைமேக்ஸ்) அதற்கு இணையாக முக்கியமானது. அவளை விட்டுப்பிரியும் அருண் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது உணவகத்திற்கு வந்திருக்கும் திவ்யாவை அவளது வாசனைத்திரவியத்தின் வாசம் வைத்தே தெரிந்துகொள்கிறான். திவ்யாவை சந்திக்கிறான். அருணை பார்த்ததும் அவளுக்குள் சின்ன பதட்டம். ஆனால், மெல்லிய புன்னகையின் மூலம் அதை நீக்குகிறான் அருண். முன்பிருந்த இருண்ட முகம் மாறி, அவன் முகத்தில் ஒரு வித மலர்ச்சி. அடை மழையாக கொட்டும் பேச்சு மாறி இப்போது அமைதி.
அவனது மோசமான சூழலில் உடனிருந்த திவ்யாவுக்கு, இது அருணுடைய உணவகம் என்பதை அறிந்துகொள்ள மனதார மகிழ்ந்து போகிறாள். கைகொடுக்கிறாள். அருகிலிருக்கும் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்திருப்பதாகவும், இப்போது பதவி உயர்வு பெற்றிருப்பதாகவும் சொல்கிறாள். அவனுக்கும் அவளது முன்னேற்றம் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. காதலிக்கும் நாட்களில் அவளுக்கு பிடித்த கேக்கை சமைத்துக் கொண்டுவரும் அருண், இப்போது தனது உணவகத்தில் இருக்கும் அதே வகையான கேக்கை அவள் மேசையில் வைத்து விட்டு செல்கிறான். இப்படியாக முடிகிறது திரைப்படம்.
ஒருவேளை இயக்குனர் நினைத்திருந்தால் இருவரையும் அமர வைத்து, அவர்கள் காதலை புதுப்பிக்கும் ஒரு காட்சியை இணைத்து, “நீயில்லாமல் இத்தனை நாள் எப்படி தவித்துப்போனேன் தெரியுமா!” என்று இருவரையும் புலம்ப வைத்து, ‘ஓக்கே கண்மணி’ திரைப்படம் போல சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் காதலின் யதார்த்தம் இது தான். இந்த இடத்தில் தான் சமகால உளவியலை மிகச்சரியாக இணைக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.
‘தன் இணை எங்கு சென்றால் என்ன? என்னிடம் தானே வரப்போகிறார்!’ என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் இருப்பதில் தான் இருக்கிறது நிம்மதி. ஒரு வேளை பிடிக்கவில்லையா? சென்றால் செல்லட்டும். போக விரும்புபவர்களை போக விடுவதும் காதல் தான் என்பதை உணர்த்துகிறது லவ்வர்.
தொடர்புக்கு: goodbadeditor@gmail.com


Comments