top of page

துபாய் ரிட்டர்ன் Uncensored Version

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Feb 15, 2023
  • 4 min read

Updated: Apr 5, 2024


ree

அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்”.

படித்த பின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள்.


பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. அம்பானியின் ஜியோ ஒரு வகையில் வரம் என்றாலும் இன்னொரு வகையில் சாபமும் கூட. சராமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதை பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக்கொள்ளலாம்.


என்றைக்கும் போல அன்றைக்கும் முட்டை பப்ஸ்க்கான ராசியில்லை. நான் எந்த நேரத்தில் வந்தாலும் அது காலியாகிப்போவதின் மாயமென்னவோ தெரியவில்லை. டீ சொல்லி நாலு ஸ்டேடஸ் ஏழு கமெண்ட் போட்ட பிறகு தான் ஷூட்டிங் வரும் சிம்புவைப்போல பொறுமையாக ’டீ’ வந்து சேரும். அப்படியான இன்றைய தேநீருக்கு பின் வீட்டிற்கு கிளம்பும் போது அலுவலகத்திலிருந்து போன். சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றும் கூட அலுவலகங்கள் பாவம் பார்ப்பதில்லை. சொன்னதெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு தலையை சுற்றி மூக்கைத்தொடும் கதையாக வேலை செய்து கொண்டிருக்கையில் நடுவில் வந்தது போன்கால். துபாய் ப்ளைட்டுக்கு இன்னும் நேரமிருக்கே. அதுக்குள்ள எப்படி வந்திருப்பான். ஒருவேளை பைளட் எந்த ஸ்டாப்பிலும் நிக்காம சீக்கிரம் வந்திருப்பானோ என்றெல்லாம் கற்பனை விரிய, எடுத்துப்பார்க்கையில் இன்னொரு வாணரம். .


அவன் :

”பாம்பே ரயில் 8:30க்கு மச்சி. பேண்ட் ஆல்டர் கொடுத்தேன்.

வண்டியில்ல வா மச்சி போய் வாங்கிட்டு வருவோம்”.


நான் :

“இல்ல மச்சி கொஞ்சம் வேலை இருக்கு. நடுவுல விட்டுட்டு வரமுடியாது.

அப்படியும் முடிச்சிட்டு வர முப்பது நிமிசமாகும். முடிச்சிட்டு கால் பண்றேன்”


அவன் :

”உடனே போகனும் மச்சி. நீ மட்டுந்தான் இருக்க.”


நான் :

“நான் வர்றது கஷ்டம் மச்சி. நீ வேனா ஓலா புக் பண்ணிக்க”


இதென்னடா திரைக்கதை வடிவத்திலிருக்கேன்னு பாக்கிறீங்களா. கிட்டத்தட்ட படத்தில் வரும் ஒரு சீன் மாதிரித்தான் இருந்தது அது. அப்படியே ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மியூசிக்கை யாரேனும் பிண்ணனியில் இசைத்திருந்தாலோ ஆரோல் கோரலி என் பின்னால் பியானோ வாசித்திருந்தாலோ இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். ஆனால் அப்படி வாசிப்பது போலத்தான் பட்டது. ஓலாபுக் பண்ணிக்கனு சொன்னதுக்கே. அதிக நேர நிசப்தத்திற்குப் பின் “சரி, நான் பாத்துக்குறேன் தேங்க்யூ…” என்ற பதில் வந்தது. ஏன் நான் மெனக்கெடவில்லை என்றால்,

  • பாம்பே ட்ரிப் போடும் போது நான் நினைவில் இல்லை.

  • மற்ற நண்பர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போது நான் நினைவில் இல்லை.

  • அட்லீஸ்ட் கிளம்பிய நாளின் காலையில் ஒரு பேச்சுக்காவது சொல்லியிருக்க வேண்டுமே என்று தொன்றவில்லை.

  • உடனிருக்கும் அத்தனை நண்பர்களும் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தான் தலைவருக்கு என் நினைப்பே வருகிறது.


ஆனால் கேட்கும் உதவிகளுக்கு மட்டும் இல்லை என்று சொல்லாது சேவகம் செய்ய வேண்டும். ஆனால் நேரமில்லாமலோ, முடியாமலோ மறுத்த உதவிகள் மட்டும் பசுமரத்தாணி போல் நண்பர்கள் மனதில் பதிந்து தொலைத்து விடுகிறது. இந்த லச்சனத்தில் “நாம் பிறருக்கு செய்த உதவிகளை மறந்துவிடவேண்டுமாம்” திருக்குறள் சொல்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவது போல இந்த திருக்குறளின் சில பகுதிகளை அப்டேட் செய்து தொலையுங்கள் மாநில அரசே.


மொத்த வேலையும் முடித்துவிட்டு “மச்சி இப்ப தான் வேலை முடிஞ்சுது. வண்டி கிடச்சுதா? வரவா?” என்ற கேள்விகளுக்கு ”நான் ஆட்டோல போயிட்டு இருக்கேன். THAAAAAANKS” என பதில் வந்தது.


இந்த முறை பதுங்கியோ, ஒளித்து வைத்தோ வண்டியை பார்க்கிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. நன்றி மெட்ரோ ரயில் சேவைக்கு. இரண்டு மணி நேரத்திற்கு பதினைந்து ரூபாய் மட்டுமே. நிறுத்திவிட்டு ARRIVAL நோக்கி நடந்து கொண்டே தோழிக்கு போனைத்தட்டினேன். ARRIVAL போர்டு பக்கத்துல உக்காந்திருக்கோம்னு கை காட்ட குத்த வச்சு முகநூல் சண்டைகளில் எல்லாம் என் பங்குக்கு வம்பிழுக்க தொடங்கியாயிற்று. பெண்கள் செய்யும் பகடிக்கா பஞ்சம்! பேச்சில் கழுவேற்றி புதைத்து விட்டு பார்க்கையில் மணி 8:30. ஆகா, மணியாச்சே என்று ARRIVAL பொர்டுக்கு போய் பார்த்தால் DELAYED 8:38 என்று மாறியது. ரோட்டுல தான் டிராபிக்குன்னு சாவடிக்கிறானுங்களே விமானத்துக்குமா !!!


உண்மையில் விமானங்களுக்கும் டிராபிக் உண்டு. பலமுறை விமானம் தேவையில்லாமல் கத்திப்பாரா பாலத்தின் மேல் கார்டூனில் வரும் ’ஸ்வாட் கேட்ஸ்’ ஜெட் போல நின்று கொண்டிருப்பதை கவனித்திருக்கலாம். அதே போல் ஏர்போர்ட் வந்த விமானங்கள் சிலமுறை வேண்டுமென்றே திரும்பி மெரினா வரை போய்விட்டு மீண்டும் வரும். எல்லாம் தரை இறங்கும் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடக்கும் கூத்துகள். இந்த சிக்னல்கள் தொலைபேசி அலைவரிசையை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் எல்லார் போனிலும் ‘FLIGHT MODE’ என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் விமானத்தை தவிர எல்லா இடத்திலும் பயன்படுத்துகிறோம். சிலர் விமானத்தில் கூட FLIGHT MODE மாற்றுவதில்லை. விமான பணிப்பெண்களின் வடிவழகை ரசிப்பதோடு சரி. INSTRUCTIONS எல்லாம் காற்றோடு காற்றாய் கரைந்துவிடும்.


விமான நிலையம் என்பது முற்றிலும் மேட்டுக்குடி மக்களால் நிறைந்தது என்பது பொதுவான கருத்து. ஏனெனில் டிக்கெட் விலையும், பயணிப்பவர்களின் பண பரிமாற்றமும் அப்படி. ஆனால் நண்பர்களை, சொந்தக்காரர்களை, தெரிந்தவர்களை வழியனுப்பவோ, வரவேற்கவோ வருபவர்கள் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை தானே. அதைப்பற்றி எல்லாம் இங்கே யாருக்கும் கவலை இல்லை. வெளியில் விற்கும் சைக்கிள் கேன் ‘டீ’ பத்து ரூபாய் என்றால் இங்கே இருபது ரூபாய். கடைகளில் வாங்கினால் முப்பது ரூபாய். சமோசா கட்லெட் குறைந்தது ஐம்பது ரூபாய். ஒரு முறை ஜெய்ப்பூர் செல்லும் போது பசியில் வேறு வழியில்லாமல் குறைந்தபட்ச செலவில் ரூபாய் நூறு கொடுத்து ஒரு பாக்கெட் நூடில்ஸ் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கூட 10 ரூபாய் மதிப்புள்ள அதே டீ 20 ரூபாய்க்கு முழுவதுமாக கூட நிரப்பப்படாமல் கைக்கு வந்து சேர்ந்தது.


மணி 8:38 லிருந்து 8:42 ஆனது.


என்னடா இது பெட்ரோல் விலை மாதிரி நேரம் ஏறிக்கிட்டே போகுதே என்ற கொதிப்பில் நீரை ஊற்றும் விதமாக விமான பணிப்பெண்களின் வருகை. ’தரமணி’ ஆண்ட்ரியாவின் இறுக்கிய பாவாடையின் அதே சாயல். கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தது போல இரத்தமும் சதையுமாய் மேனியோடு ஒட்டிக்கொண்டபடியாய் படர்ந்திருந்தன அவர்களின் ஆடை. இவர்களெல்லாம் பூமியில் தான் பிறக்கிறார்களா? அப்படியே பிறந்திருந்தாலும் ஏன் எங்கள் தெருப்பக்கங்களில் இவர்களை காண முடிவதில்லை. வெளிநாட்டு விமான பணிப்பெண்களின் மொத்த வயதையும் கூட்டினால் வரும் மொத்த வயதுள்ள பணிப்பெண்களை கொண்டிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஏன் குப்பைத்தனமாக இருக்கிறது என இப்போது தான் புரிகிறது. TASTELESS FELLOWS. அழகான நான்கு பெண்களை ஒரு விமான பணிக்கு சேர்க்க தெரியாத இந்த அரசா 110 கோடி மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு ஆட்சி செய்யப்போகிறது.


அவர்கள் உதட்டுச்சாயம் மிகவும் அளவானது. நம்மூர் பெண்கள் அவர்களிடத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஒப்பனைகள் மற்றும் ப்ஃர்பியூம் உட்பட. எந்த பெண்ணும் அதிக ஒப்பனையோ, தலை வலிக்கும் அளவுக்கு அதிக பர்ஃபியூமோ போட்டுக்கொள்வதில்லை. நம்மூர் பெண்களாவது பரவாயில்லை. இந்த மலேசியா, சிங்கப்பூர் தமிழச்சிகள் இன்னமும் மோசம். இங்கே ஒரு மாதத்தில் காலியாகும் அனைத்து ஒப்பனைகளும் அங்கே ஒரே வாரத்தில் தீர்ந்துபோகும். அடுக்கு மேல் அடுக்காக அடுக்கி போடும் ஒப்பனைகள் “ப்பா” என்று கத்தி சொல்ல வைத்துவிடும். அவர்கள் ஒருநாள் பூசும் லிப்ஸ்டிக் வழித்து பகிர்ந்தால் ஒரு தெருவுக்கே பூசலாம்.


இப்படியான சிந்தனை ஓட்டத்திற்கு நடுவில் ஏக் மார் தோ துக்கடா ஸ்டைலில் ’ஹமாப்கே ரெயின்கோட்’ பேமிலி அருகில் வந்து நின்றது. சந்தன நிற சட்டை பிரவுன் நிற பேண்டுடன் அந்த மொழு மொழு ஆசாமிக்கு அருகில் தலைக்கு மேல் சேலை சுற்றியிருந்த அந்த “மீரா” அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். உச்சி நெற்றியில் இருக்கும் அவளின் குங்குமமும். சிடுசிடுவென பார்க்கும் அவரின் பார்வையுமே சாட்சி. திருமணமாகி எப்படியும் ஒரு ஆண்டு தான் ஆகிருக்கும். அதற்குள் அவசரப்பட்டு குழந்தை பெற்றெடுத்தாச்சு போல. இங்கே எல்லாருக்கும் அவசரம். கல்யாணம் அவசரம். கல்யாணம் ஆனதுமே குழந்தைக்கு அவசரம். இல்லாட்டி ‘மலடி’ அல்லது ’ஆண்மையற்றவன்’ என்ற பெயர் விழுந்து தொலைக்குமே என்ற பயம். இதற்கெல்லாம் நடுவில் மனைவியை காதலிக்க மறந்துவிடுகின்றார்கள்.


அடுத்தடுத்து வேறு நாட்டினரும் அவர்கள் வந்த விமானத்தின் பணிப்பெண்களும் இரயில் பெட்டிகளைப்போல என்னை கடந்து கொண்டே இருந்தார்கள். அதீத வெறுப்பின் உச்சித்தில் தலை குனியத்துவங்கிய தருணத்தில் ”8:30 துபாய் விமானம் தரையிரங்கியது” என்று காதில் தேன் ஊற்றினாள் அந்த அறிவிப்பு தேவதை. இந்தக்கூட்டத்தில் எங்கோ இளையாராஜா எனக்காக பிண்ணனி இசை வாசிப்பதாக உணர்ந்தேன். கொஞ்சே நேரத்திலேயே என்னுடனிருந்த அத்தனை வௌவால்களும் என் பின்னால் நிற்கத்துவங்கினார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு கூட்டம் கூட்டமாக கொஞ்சம் நபர்கள் வெளியேற அவர்களுக்கு இடையில் வந்து தொலைத்துவிட்டானா என்ற தேடலில் அவ்வப்போது குல்பிக்களையும், ஜாங்கிரிகளையும் பார்த்தவாரே தலை இடதுபுறமாக திரும்பும் போது உடனிருக்கும் ரசனை கெட்ட ஜென்மங்கள் தலையை திருப்பி “டேய் அந்தப்பக்கமா பாருடா” என கடுப்பேத்துவது எனக்கு நரி ஊளையிடுவது போல கேட்கும்.


கிரிக்கெட்டில் பீல்டிங் மாற்றுவதைப்போல நாங்களும் வேறு வேறு பொசிசனில் கண்களில் விளக்கெண்ணைய் ஊற்றி தேடிப்பார்த்துவிட்டோம். ம்ஹூம். அவன் வந்த பாடில்லை. போனும் எடுக்கவில்லை. மணி வேறு ஒன்பதுக்கு மேல் ஆகிப்பொனது. எல்லோர் முகத்திலும் நம்பிக்கை தேய ஆரம்பித்தது. ஆர்வத்துடன் காத்திருந்த முகங்கள் எப்போடா வருவான் என்பதை தாண்டி, வரும் பொது வரட்டும் என்ற மனநிலையில் மாறிப்போய் அவரவர் செல்போனின் திரையினை சிணுங்க வைத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு காதல் ஜோடி வேறு தள்ளிநின்று சிதம்பர ரகசியம் ஓதிக்கொண்டிருந்தது. சரி, வெளியே வரும் பணிப்பெண்களிடம் விசாரிக்கலாம் என்று பார்த்தால் அந்த பூம்பூம் மாட்டுக்கு பிறந்த காக்கிசட்டை குரங்கு போக விடாமல் தடுத்துவிட்டது. கடமையை செய்கிறானா, இல்லை "எனக்கே சிக்கல உன்ன மட்டும் போக விட்டுறுவனா' என்ற தமிழனின் அடிப்படையான சில்லரை மனநிலையா என தெரியவில்லை. மணி இப்போது 9:30. கிட்டத்தட்ட இவனையெல்லாம் எதுக்கு துபாய்க்கு போவ சொன்னான் என்னும் அளவுக்கு நண்பர்கள் கடுப்பாகி ”நாம கிளம்புவோம் வந்ததும் நாயி அதுவே போண் பண்ணும்ல அப்ப வச்சிக்குவோம்” என்ற புரட்சி போராட்டத்திற்கு தயாரகிக்கொண்டிருந்தார்கள்.


இதற்கிடையில் “அரே துபாய் ப்ளைட் ஆகயா” என்று பக்கத்தில் இருப்பவன் சொல்ல, “உங்க நண்பர் துபாய் பிளைட்ல இருந்து வராரா” என்ற கேள்விக்கு ”நண்பன் இல்ல. என் தம்பி வரான்” என்று பதில் வந்தது. கடகடவென அதிரும் விமானம் தரையை தொட்டதும் சாந்தமடைவது போல எங்கள் மனம் அமைதியடைந்தது.


“என்னங்க டைமிங் கூட ஒழுங்கா மெயிண்டெய்ன் பண்ண மாட்டேன்றாங்க. 8 மணி விமானத்துக்கு இவ்ளோ நேரமாக்கிட்டாங்க. ச்சை” என்றேன். அதற்கு அவர்


“சார் என் தம்பி வந்தது 7 மணி விமானம்” என்றார்…


Comments


bottom of page