ஹைக்கூ காதல்
- Gowtham G A
- Feb 8, 2023
- 3 min read
கோபியிலிருந்து திருப்பூர் வழியாக பொள்ளாச்சி செல்லும் போது, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு பேருந்துகள் கிடைத்தன. ஆனால் பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர்க்கு திரும்பி வரும் போது அதே பழைய பேருந்து நிலையத்தில் கோபி செல்ல பேருந்து கிடையாதாம். புதிய பேருந்து நிலையம் தான் செல்ல வேண்டுமாம். இது என்ன லாஜிக் என்றே புரியவில்லை.
சரி. புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் எங்கே நிற்கும் என கேட்டால், பேருந்து நிறுத்தத்தின் தென்கோடி மூலையை விரல் நுனியில் சுட்டிக்காண்பித்து அங்கே என தெரிவித்தார் ஒரு நடத்துநர். நன்றி சொல்லிய வண்ணம் அங்கே செல்லும் போது சரியாக ஒரு நகரப் பேருந்து வந்தது. அதுவும் காலியாக. உள்ளே அதிக பட்சம் மூன்றிலிருந்து நான்கு பேர். அதுவும் இருள் சூழ்ந்த மாலை நேரம். ஆச்சரியம். உள்ளே ஏறிக்கொண்டேன்.
வண்டியில் ஏறிய போதே கவனித்தேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்தது ஒரு காதல் ஜோடி. அந்தப்பெண் மஞ்சள் நிற சுடிதாரும், அந்தப்பையன் கறுப்பு நிற பேண்டும், சிவப்பு நிறத்தில் கறுப்பு நிற கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார்கள். இருவரும் மாநிறம். துணிக்கடையிலோ, தொழிற்சாலையிலோ வேலை செய்பவர்கள் போல. அவர்கள் பேசும் போது நடுவில் சூப்பர்வைசர், மேனேஜர் போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தன.
பேருந்து கிளம்பிய சில மணித்துளிகளில், கண்களால் அந்தப்பெண் வேண்டாம் என கருவிழிகள் இடப்பக்கமும் வலப்பக்கமும் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், நமது ஹீரோ சடாரென அவள் மடியில் படுத்துவிட்டான். அப்பெண்ணின் முட்டைக்கண்கள் விரிந்து, குவிந்த வாயை கைகளால் பொத்திக்கொண்டாள். “டேய் என்னடா பண்ற” என்பதை அவன் காதில் மட்டும் விழும் அளவுக்கு மெல்லிய குரலில் கெட்டாள். அது என் காதில் நன்றாகவே விழுந்தது. (நான் ஒட்டுக்கேட்கவில்லை தோழர்களே. காரித்துப்ப வேண்டாம்). பிறகு சுற்றும் முற்றும் பார்த்தாள். நானும், எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு திருநங்கையைத்தவிர வேறு யாருமில்லாததால் இயல்புக்கு திரும்பியவள் மெல்ல அவன் தலையை கோதி விட ஆரம்பித்தாள். அவள் விரல்களுக்கிடையில் அவன் பரட்டைத்தலையின் கூந்தல் வசமானது.
வார நாட்களில் நிற்க இடமில்லாமல் நெருக்கித்தள்ளும் பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு, இத்தனை காலியான ஒரு பேருந்தில் முதல்முறையாக செல்ல இப்போது தான் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் போல. அதன் நீட்சியே அவள் மடியில் துயில்கொள்ளத் துவங்கிவிட்டான். அந்தப்பெண்ணோ அவன் கண்களை பார்த்தபடியே அவள் கேசத்தை தடவியபடி, அவ்வப்போது ஜன்னல் வழியே தெரிந்தவர்கள் யாரேனும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டபடியே இருந்தாள். சொந்த ஊரில் காதலிப்பவர்களுக்கு இது பெரும் தொல்லை.
படுத்திருந்தவன் ஓரக்கண்ணால் நம்மை யாரேனும் புகைப்படம் எடுக்கிறார்களா என கண்களை சுழல விட்டான். நான் அவனை கண்டுகொள்ளவே இல்லை. பயணத்தின் போது நான் படித்துக்கொண்டிருந்த (அப்படியாக உங்களை நம்ப வைக்க) ஒரு புத்தகத்தை வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.
குறுக்கே வந்த கௌஷிக் கணக்காக, அடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். நின்ற பேருந்தில், சடசடவென ஒரு சிறுவன் கத்திக்கொண்டே படியில் ஏற, பயந்த நம்ம ஹீரோ டப்பென்று எழுந்து கொண்டார். வேண்டுமென்றா அல்லது யதார்த்தமாகவா அவர்கள் அருகில் சென்று அமர்ந்த அந்த சிறுவனை முறைத்தபடியே பார்த்தான். எனக்கு பாம்பே படத்தில் அரவிந்த்சாமியும், மனிஷா கொய்ராலாவும் கட்டிப்புடித்துக்கொண்டிருக்கும் போது குறுக்கே ஓடும் சிறுவர்கள் கூட்டம் நினைவுக்கு வந்தது. என்னடா திரையில பார்த்ததெல்லாம் தரையில நடக்கிறது என தோன்ற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பத்து முதல் பன்னிரெண்டு பேர் ஏறியிருப்பார்கள். அதுவும் சரியாக அவனைச்சுற்றி எல்லாரும் அமர்ந்தார்கள்.
எல்லாரையும் சுற்றி முற்றி பார்த்தவன் விரக்தியில் தொங்கிவிட்ட முகத்துடன் அவள் பக்கம் திரும்ப, அவளோ அவன் தாடையைப் பிடித்து “இப்ப என்ன? எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சிருக்க? சும்மாவே உன் மூஞ்சிய பாக்க சகிக்காது” என்றபடியே சிரிக்க ஆரம்பித்தாள். அவள் பிடியில் அவர்கள் காதலின் நீண்ட ஆயுள் தெரிந்தது.
அவர்கள் கண்களில் அகப்பட்டது அத்தனை காதல். இடைவிடாத பணிகளுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் நேரம் கண்களால் கொஞ்சிக்கொண்டு கடந்து சென்றுவிட்டு, வேலை விட்டு பேருந்தில் செல்லும் தருணத்தில் கூட்டத்தின் இடையில் பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது அதையும் நழுவ விடாமல் பிடித்துக்கொள்ளும் ஒரு பேரழகு நிறைந்த காதல்.
“உலகத்தின் கடைசி நாள்இன்று தானோ என்பது போல்பேசிப்பேசி தீர்த்த பின்னும்ஏதோ ஒன்று குறையுதே”
என்ற தாமரையின் வரிகள் இதற்கு மிகச்சரியாகப் பொருந்தின.
அத்தனை உரையாடல்கள். அத்தனை உணர்ச்சிக் குவியல்கள். அத்தனை கோபங்கள், அத்தனை மன்னிப்புகள், அத்தனை ஊடல். அவர்களை சுற்றியிருக்கும் எதுவும் அவர்கள் கண்களில் அகப்படவில்லை. அவள் மடியில் படுத்திருந்த வரை எந்த பூமர் கண்டக்டரும் அதை கேட்கவில்லை. இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது...
திருப்பூரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதென்பதே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்வது போல. அத்தனை தூரம். அந்த தூரத்தை அவர்களின் காதல் மிக அழகாக அவர்களுக்குள் நிரப்பிக்கொண்டிருந்தது.
அவன் சீரியஸாக சொல்லும் பல விஷயங்களை அவள் வெகு எளிமையாக கையாண்டு கொண்டிருந்தாள். அவளுடனிருக்கையில் அவன் வயது குறைந்திருந்தது. அவள் வயது கூடியிருந்தது. அத்தனை பெரிய கப்பல் எறும்பின் அளவு இருக்கும் கேப்டன் ஒருவனின் கரங்களில் கட்டுப்படுவது போல, அவள் கண்கள் அவனை இயக்கிக்கொண்டிருந்தன.
அவளிடம் இளித்த படியே பேசிக்கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான். அறைகுடமாய் சிரித்த அவன் சிரிப்பு “நீங்கள் ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லையே” என்பதை உணர்த்தியது. நானும் கண்களாலே “நான் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. எஞ்சாய்” என்பதை மெல்லிய புன்னகை கலந்து பதிலளித்தேன்.
ஒருவழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. அதற்குள் வந்துவிட்டோமே என்ற ஏமாற்றம் அவனுக்கும், மாலை நேரம் என்பதால் சீக்கிரம் வீட்டுக்குச்செல்ல வேண்டும் என்ற பதட்டம் அவளுக்கும். அது அவளுடைய நிறுத்தம் போல. அவள் முதலில் இறங்கினாள். அங்கிருந்து அடுத்த பேருந்தை அவள் பிடிக்க வேண்டும்.
நம்ம ஹீரோ சீட்டில் இருந்தபடியே அவளுக்கு டாட்டா காட்டினான். அவளோ கண்களாலேயே “இன்னும் கொஞ்ச நேரம் என்னுடன் இருந்துவிட்டு அடுத்து வரும் பேருந்தில் சென்றால் தான் என்னவாம்” என கேட்க, அவளை வென்றவனாக சிரித்தவன் காற்றில் ஆடும் காகிதம் போல துள்ளியபடி எழுந்து படியை நோக்கி நகர்ந்தான். அதுவரை மன்மோகன் சிங்காக மௌனம் காத்திருந்த நடத்துநர் அப்போது பேச ஆரம்பித்தார் “தம்பி உனக்கு இன்னும் ரெண்டு நிறுத்தம் இருக்கு”. அவர் முகத்தைக்கூட பார்க்காத நம்ம ஹீரோ “பரவாலன்னா அடுத்த பஸ்ல போயிக்கிறேன்” என்றபடி கடைசி படியிலிருந்து தரையில் குதித்தான். இப்போது அவன் பேசிய மொழி அவருக்கு புரிந்திருந்தது. தன் விரலிடுக்கில் தற்கொலை செய்திருந்த விசிலுக்கு உயிர்ப்பூட்டியபடி புன்னகைத்தார்.
கீழே இறங்கியவன் அடுத்த பேருந்திற்காக நின்று கொண்டிருக்கும் அவளிடம் பேசத்துவங்கினான். பேருந்து மெல்ல நகர என் பார்வையிலிருந்து அவர்கள் விலகத்துவங்கினார்கள். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். நமது ஹீரோ மட்டும் அவளோடு பேசிக்கொண்டே ஓரக்கண்ணில் என்னைப்பார்த்தான். நான்கு விரல்களையும் மேலும் கீழுமாக அசைத்து அவனுக்கு டாட்டா காட்டினேன். தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கைகளால் தலையை சரி செய்வது போல் உயர்த்தி டாட்டா காட்டினான். தூரம் செல்லச்செல்ல அவர்கள் கூட்டத்தின் ஒரு புள்ளியாக தெரிந்து மறைந்தார்கள்.
தொடர்புக்கு: goodbadeditor@gmail.com




Comments