L போர்டு காதல்
- Gowtham G A
- Feb 15, 2023
- 4 min read
Updated: Jun 16, 2023
அதிகாலையில் சுப்ரபாதம் போட்டு எழுப்பும் அம்மாவுக்கு பதில் இன்று அக்கா,
”டேய் எந்திரிடா தடி மாடு. மணி ஒன்பது ஆகுது. இன்னும் தூங்கிட்டு இருக்கான் பாரு.”
என்று சொல்லியபடியே தலையில் கட்டியிருந்த துண்டை கழட்டி, தலையை துவட்ட ஆரம்பித்தாள்.
ஏற்கனவே செல்போனில் வைத்த எல்லா அலாரமும் என் காலை வாரிவிட, தலையை சொரிந்தவாரே பெட்டில் இருந்து எழுந்து கழிவறைக்குள் புகுந்தேன். பல் துலக்கும் போது நான் துப்பும் சத்தமும் அவள் துப்பும் சத்தமும் ஒன்றாக கேட்டது. அப்படி நான் என்ன தேசத்துரோகம் செய்தேன் ! லேட்டாக எழுந்தது ஒரு குத்தமா !!!
என்ன தான் ஒரு வீட்டில் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தாலும் ஒரே உலகத்தில் வாழ்வதில்லை தானே. புத்தகங்கள், திரைப்படங்கள் என என் உலகமும். கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர், வீடியோ கான்பிரன்ஸ் என அக்காவின் உலகமும். எப்போதும் சாமி புத்தகங்களையே படித்துக்கொண்டிருக்கும் அம்மாவின் உலகமும். டிஸ்கவரி, நேஷ்னல் ஜியோகிரபி சேனல்கள் பார்த்து தன்னை மேதமையாக நினைக்கும் அப்பாவின் உலகமும் வேறு வேறாகத்தானே இருக்கிறது. அக்கா தூங்கும் 11 மணியுடன் நான் தூங்கும் 3 மணியை ஒப்பிட்டு வீட்டில் எனக்கு சோம்பேறி பட்டம் கட்டியதன் பிண்ணனி இது தான். ஒரு வழியாக எழுந்து அறைத்தூக்கத்தில் அறைகுறையாக குளித்து ரெடி ஆகி தட்டில் 2 இட்லிகளை வைக்கும் போது மணி 10. அதுவும் தொப் தொப் என வைத்துவிட்டே துவங்கியது லலிதாவின் புராணம்.
“ஊருக்கு போகனும். காலைல 6 மணிக்கு எந்திரிக்கணும்னு சொன்னா அன்னைக்கு தான் உனக்கு வேணும்னே எதாச்சும் வேலை வந்து தொலைக்கும். உன்னய வச்சுக்கிட்டு ஒரு நோம்பிக்கு போக முடியுதா! அதான் உன்னய விட்டுட்டு அம்மாவும் அப்பாவும் முன்னாடியே ஊருக்கு கிளம்பிட்டாங்க. திரும்பி வர வண்டி வேணும்னு தான் நான் இங்கயே இருக்கேன். இல்லைன்னா நானும் அம்மா கூடவே கிளம்பிருப்பேன்.”
இதென்னடா கடைசில இப்படி ஒரு பழி என... பதிலுக்கு,
“ஏன் ? நீங்க போகவேண்டியது தானே மேடம். நீங்க இல்லைன்னா எங்களுக்கு வண்டி எடுத்துட்டு வர தெரியாதா !!!”
என போரில் வில்லில் இருந்து வரும் அம்பாக குறுக்கு கேள்வியை அனுப்பினேன்.
“நீ தூங்குற லச்சனத்துக்கும், வண்டி ஓட்டுற லச்சனத்துக்கும் எந்திரிச்சு கிளம்பி வந்து செர்றதுக்குள்ள அங்க ஃபங்ஷனே முடிஞ்சிரும்.”
என ஒரே பிராம்மஸ்திரத்தில் என் அம்புகளை காலி செய்தாள். எல்லாம் எனக்கு தேவை தான். என்ன தான் ப பிழைப்புக்கு எங்கயோ வேலை செஞ்சாலும் புத்தி என்னவோ சினிமாவ பத்தி தான் நினைக்குது. கல்யாணம் வரைக்கும் எப்படியும் நம்மால வேலைய விடவும் முடியாது. சினிமா பக்கமும் போகவும் முடியாது. இதுக்கு நடுவுல அக்காவோட கல்யாணம் வேற. இதுக்காகதான் சினிமா பக்கம் இன்னும் எடிப்பாக்காம தூரமாகவே எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன். சினிமாவுக்குள்ள இல்லாட்டியும் சினிமாவை பத்திய மொத்த அப்டேட்ஸும் நமக்கு அத்துப்படி. எந்தப்படம் இந்த வாரம் பூஜை போட்டிருக்காங்கன்னு தொடங்கி அந்த ஹீரோ அடுத்தடுத்து எத்தனை படங்கள் கமிட் ஆகி இருக்கார்ன்னு சினிமாக்காரங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச பெரும்பான்மையான விஷயங்கள் எனக்கு தெரியும்...
இப்போது மூன்றாவது மற்றும் நான்காவது இட்லிகளை கேட்காமலே வைத்துவிட்டு கிளம்வுவதற்கு தயாராகிவிட்டாள். நாம் கிளம்பும் போது ”நேரமாச்சு நேரமாச்சு” ன்னு புலம்பும் அதே பெண்ணினம் அவர்கள் கிளம்ப எடுத்துக்கொள்ளும் சில மணிநேரங்களை (அதாவது அவர்கள் மொழியில் ”சில நிமிடங்களை”) பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இப்போதே கிளம்ப ஆரம்பித்தால் தான் நான்கு இட்லிகளையும் நான் சாப்பிட்டு தட்டத்தை கழுவி வைத்து பாத்திரம் காயும் போது ரெடியாகி முடிப்பாள். அந்நேரம் நான் ரெடியாக கிளம்பும் போகும் போது மறுபடி ஒரு அர்ச்சனை விழும். இதற்குத்தான் நான் வரும் போதே உஷாராக ரெடி ஆகி வந்துவிட்டேன். தட்டத்தை கழுவி வைத்துவிட்டு எட்டிப்பார்க்கையில் காதுக்கு தோடு மாட்டிக்கொண்டே என்னை ”என்னடா பாக்குற. அதெல்லாம் ரெடியாகிடுவோம்” என்று சொல்லாமல் ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”கார்ல தான போரோம்! எதுக்கு இவ்ளோ மேக்கப்?”
என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துவிட்டு கேட்டேன்.
”பின்ன உன்ன மாதிரியா டவுசரோட வண்டில வரமுடியும்...”
என நான் போட்டிருந்த ஷார்ட்ஸை சுட்டிக்காட்டினாள்.
”வண்டி ஓட்டுறதுக்கு ஷார்ட்ஸ் போட்டிருந்தா பத்தாதா! என்னமோ ஊருக்கு போய் நேரா பஃங்ஷன்ல இறங்குற மாதிரி! ஊருக்கு போய் அங்க எப்படியும் ரெடி ஆவோம்ல. என என் தரப்பு நியாயத்தை முன் வைத்தேன்.
"அதுக்காக உன்ன மாதிரி அரைடவுசர், அரைசட்டை (ஸ்லீவ்லெஸ்) லாம் போட்டுட்டு வர முடியாது. ஒழுங்கா நல்ல டீஷர்ட்ட எடுத்து போடு"
என வாயில் ஒரு ஊக்கை கவ்விக்கொண்டு, தலையில் ஒரு ஊக்கை குத்திக்கொண்டே சொன்னாள். என்னடா இது அநியாயம் இந்த நாட்ல ஸ்லீவ்லெஸ் போடக்கூட ஒரு ஆண்மகனுக்கு சுதந்திரமில்லையா! ஆணாய் பிறந்ததிற்கே வெட்கப்படுகிறேன் !
அடிக்கிற வெயிலுக்கு இப்ப எதுக்கு டீ ஷர்ட்டு?
கேள்விகளுக்கிடையில் வாட்ச் கைகளை இறுக்கத் துவங்கியது.
அதெல்லாம் சொல்றேன். முதல்ல நீ அந்த எழவெடுத்த ஸ்லீவ்லெஸ கழட்டிட்டு டீஷர்ட மாத்து...
கடுப்பில் என் அறைக்குள் சென்று சில விநாடிகளில், எனக்கு பிடித்த சிவப்பு நிற மேக்ஸ்* டிஷர்ட்டுடன் வெளியில் வந்தேன்.
(* - ஆடி தள்ளுபடியில் மூன்று டிஷர்ட் 500 ரூபாய்க்கு எடுத்தது)
அவளும் கைப்பைகளை எடுத்துக்கொண்டு வர சரியாக இருந்தது. எங்களது பைகளை டிக்கியில் போட்டுவிட்டு, நான் வண்டியை பின்னால் எடுக்க, அக்கா சாலையில் இருபுறமும் வண்டிகள் எதும் வருகிறதா என பார்த்துக்கொண்டு இன்னும் வழி இருக்கு, இருக்கு என சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தாள். வண்டியை முழுதுமாக பின்னால் எடுத்து சாலைக்கு வந்த பின் அக்காவே பொறுப்பாக வாயிற்கதவை(gate) மூடிவிட்டு, வண்டி அருகே வரும் போது ஒரு நிமிஷம் இருன்னு சொல்லிட்டு மறுபடியும் எதையோ தேட வீட்டுக்குள் சென்று சென்றுவிட்டாள். சரியாக என் வண்டியில் “குயிலப்புடிச்சு கூண்டில் அடச்சு கூவச் சொல்லுகிற உலகம்” பாடல் FM இல் ஒலிக்கத்துவங்கியது.
சிறிது நேரம் கழித்து அறக்க பறக்க ஓடிவந்தாள். ”குங்குமச்சிமிழ் அம்மா கொண்டுவர சொல்லுச்சு. மறந்துவச்சுட்டேன்” என காமித்தாள். ஏன் இதை ஈரோட்டுல வாங்குனா போலிஸ் புடிச்சுக்குமாக்கும் என தோன்றியது எனக்கு. டிக்கியை திறக்க சொன்னாள். கொன்றுவேன் ஒழுங்கா டேஷ்போர்டுல வைன்னு புருவத்தை சுழித்துக்கொண்டு சொன்னேன். சரி என டேஷ்போர்டில் வைத்துவிட்டு மறுபடியும் ஒருமுறை வீட்டுக்கு சென்று கதவு சரியாக பூட்டிருக்கா என பூட்டை இழுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இன்னும் ஒருமுறை போங்கு காட்டினால், நாளை ”பாசத்துடன் வளர்த்த அக்காவை கருணையின்றி கொலை செய்த கொடூர தம்பி” என தினமலரில் செய்தியாக வந்துவிடுவோமோ என பயப்பட துவங்கினேன். குடுகுடு என ஓடிவந்து வண்டியின் முன்னால் அமர்ந்துகொண்டாள். "என்னக்கா எப்பவும் பின்னாடி தான உக்காந்துட்டு வருவ. இன்னைக்கென்ன முன்னாடி?" என கேட்டேன். "எல்லாம் சொல்றேண்டா. முதல்ல நீ வண்டிய எடு" என அவசரப்படுத்தினாள். வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வளசரவாக்கத்தில் எடுத்த வண்டி மியாட் ஹாஸ்பிடல் வழியாக கத்திபாரா போகலாம் என வண்டியை திருப்பும் போது..
”டேய் ! டேய் ! கே.கே.நகர் வழியா போடா.
அங்க ஒரு வேலை இருக்கு.”
”இன்னுமா !!! ஏங்கா என்ன படுத்துற... !!!
உன்ன வச்சுக்கிட்டு !!!”
”டேய் டேய் போடா. சொல்றேன்ல.”
”சரி போய்த்தொலையறேன்.”
வண்டியை வலப்புறம் திருப்பினேன்.
கொளுத்தும் வெயில். ஏசியை ஆன் செய்தேன். கொஞ்சம் இதமாக இருந்தது. பாடல்கள் மாறிக்கொண்டே வந்தன. கே.கே. நகர் ஆர்.டி.ஓ ஆபிஸ் வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது.
டேய் டேய் லெஃப்ட் எடுறா.
அங்க யாருக்கா இருக்கா !
அமிர்தா ஆண்டியும் அவங்க பொண்ணும்
பெங்களூர்ல இருந்து வந்திருக்காங்க !
அதுக்கு !?
ஆண்டியையும் கூட்டிட்டு வர சொல்லி அம்மா சொல்லிருக்கு.
(ஊக்கு குத்தும்போது அக்காவின் இன்னொரு காதில் போன் இருந்தது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது)
அம்மாவின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். எனக்கு அந்த ஆண்டியை சிறுவயதிலிருந்தே சுத்தமாக புடிக்காது. அதனால் அவங்க வீட்டுக்கும் போக மாட்டேன். இப்ப என்னடான்ன அவங்க கூட வண்டில...!!! கொடும...!!!
அக்கா !!! இது வேறயா !!!
அவங்கள பஸ்ஸோ டிரைனோ புடிச்சு வர சொல்ல வேண்டியது தான !?
டேய் பாவம்டா... வயசானவங்கள்ள !!
அதுக்கு நாம தான் கிடச்சோமா !?
அவரு பையன் எங்க போனாராம்.
டேய் அவரு அமெரிக்கா போய் 10 வருசம் ஆச்சுடா. நீயெல்லாம் எந்த கிரகத்துலடா இருக்க !?
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவள் புலம்ப, அவர்கள் பிளாட் வாசலில் வண்டி வந்து நின்றது. அக்கா அவர்களுக்கு போன் செய்தாள். போன் எடுக்கவில்லை. சில நொடிகள் காத்திருப்புக்கு பிறகு,
“அக்கா நீயே வீட்டுக்கு போய் பாரு !! இன்னும் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது. !”
“பார்ரா ! விட்டா துரை இந்த நேரத்துக்கு தான் எந்திரிச்சிருப்பீங்க. இதெல்லாம் நீங்க சொல்றீங்க !!”
அடைக்கப்பட்ட வாயுடன் அமைதியாக வாட்ச் மணி 11 ஐ காட்டியது. சிறிதுநேரம் கழித்து....
“சரி. இரு நான் போய் பாத்துட்டு வந்துட்றேன்”
என சொல்லிவிட்டு அக்கா எழும்போது, அக்காவின் கண்ணாடிக்கதவை யாரோ தட்டுவது போல இருந்தது. சத்தம் கேட்டு நான் திரும்பிப்பார்த்தேன். எனக்கு எடுப்பாக சிவப்பு நிற டாப்பில் சுடிதார் அணிந்திருந்த அந்த பேரழகியை கண்டவுடன் என் கண்களின் IRIS விரியத்துவங்கியது. பின்னணியில் வாத்தியங்கள் இசைக்க, அவள் தலைக்குப்பின்னால் அதீத ஒளியும் தெரிந்தன. என் தலைக்கு மேல் அம்பு விடும் குழந்தை ஒன்று சுற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
ஆனால் இப்படியெல்லாம் எந்த பில்டப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாக தெரிந்தாள் என் அக்காவுக்கு.
அவள் : அம்மாவுக்கு முட்டிவலி இன்னும் குணமாகல. இப்ப தான் டாக்டர் கால் பண்ணினாரு. நாளைக்கு செக்கப்புக்கு வர சொல்லிட்டாரு. அதனால !!!
அக்கா : அதனால ?
நான் : அதனால ? (மைண்ட்வாய்ஸ்)
அவள்: என்ன மட்டும் உங்க கூட கிளம்பி போக சொல்லிட்டாங்க.
சரியாக FM இல் ”மணமகளே மருமகளே வா வா ! உன் வலது காலை எடுத்துவைத்து வா! வா!” பாடல் ஒலிக்கத் துவங்கியது...



Comments