top of page

மன்னாதி மன்னவா

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Jul 16, 2023
  • 2 min read

Updated: Jul 17, 2023


ree

நினைவுகளின் அலைகடலில் தொலைந்துபோன பழைய பரிச்சயமான பாடல் என்னை மீண்டும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்த பால்ய காலத்திற்கு என்னை அழைத்துச் சென்றது. அந்தத் தருணங்கள் இன்னமும் என் இதயத்தில் நிலைத்திருக்கின்றன! நீண்ட காலமாக மறக்கப்பட்ட நினைவுகளை எழுப்பி, நம் இதயங்களை உணர்ச்சிகளால் நிரப்பும் சக்தி இசைக்கு உள்ளது என்பது மனம் ஏற்றுக்கொள்ளும் உண்மை.


”ராக்கம்மா கையத்தட்டு”, ”நான் ஆட்டோக்காரன்”, ”அதாண்டா இதாண்டா”, ”ராஜா கைய வச்சா” மாதிரியான Beat songs மட்டுமே எனை சூழ்ந்திருந்த காலம் அது. ”கண்ணே கலைமானே”, ”உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்” பாட்டெல்லாம் ஆரம்பிக்கும் போதே போரடிக்கிறது என சேனலை மாற்றிவிடுவேன். ஆனால் ‘கண்மணி அன்போடு’ பாடல் மட்டும் விதிவிலக்கு. அந்த வரிசையில் விதிவிலக்காக இணைந்துகொண்டது இந்த பாடல்.

ree

சுமதியை (சுகன்யா) கொல்ல பாலில் விஷம் கலக்கப்பட்டதை தெரிந்துகொண்டு தடுக்க தொலைபேசியில் அழைக்கிறார் வால்டர் வெற்றிவேல் (சத்யராஜ்). தொலைபேசி வேலை செய்யாததால் நேரடியாக வீட்டுக்கு விரைந்து வந்துகொண்டிருக்கிறார். இந்த விஷயம் தெரியாமல் பாலை குடிக்கப்போகும் சுமதியை தடுக்கிறது பசியில் அழுதுகொண்டிருக்கும் குழந்தை. பசியில் அழும் குழந்தைக்காக தாலாட்டு பாட ஆரம்பிப்பார் சுமதி. ஒரு பக்கம் வால்டர் வேகமாவ வந்து கொண்டிருக்க, இந்தப்பக்கம் சுமதி தான் கொண்டிருக்கும் அன்பினை பாடலால் விவரிக்கிறார்.


”மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…”

ree

நேரம் நெருங்குகிறது. படியில் வைத்திருந்த புட்டிப்பாலை எடுத்து பாலுட்டத்துவங்குகிறார். இதை பார்க்கும் நமக்கே மனம் பதபதைக்கச்செய்கிறது. ”யோவ் வால்டரு சீக்கிரம் வாய்யா. அந்த குழந்தைய காப்பாத்துய்யா” என மனம் ஏங்கத்துவங்குகிறது.


”மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் கிள்ளை ஒன்று உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தெய்வம் ஒன்று எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ”


என்று கண் இழந்த சூழலிலும் தனக்கு கிடைத்திருக்கும் ஆறுதலாக அக்குழந்தையை பாவிக்கிறாள். மையினால் கன்னத்தில் திருஷ்டிப்பொட்டிருக்கும் அந்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக பாலைக்குடிக்கிறது. சிறிது நேரத்தில் அதன் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிற்கத்துவங்குகிறது. இறுதியாக அந்தக்குழந்தையின் மூச்சு நின்று போகிறது. இறந்து போன குழந்தை உறங்கிக்கொண்டிருப்பதாக நினைத்து மார்பில் மெல்ல தட்டிக்கொடுத்தவாரே பாடிக்கொண்டே தூங்க வைக்கிறார் சுமதி. தொங்கிய தலையுடன் மரணித்த உடலை ஏந்தியபடி தொட்டிலில் இட்டுவிட்டு பசியாற்றிவிட்ட பூரிப்பில் பெரும் மகிழ்ச்சியுடன் மின்சாரமற்ற இரவின் நிழலில் நடனமாடத்துவங்குகிறார்.

ree
ree

வேகமாக வீட்டுக்கு வரும் வால்டர், உயிரோடு பாடிக்கொண்டிருக்கும் மனைவியை பார்த்து அவரை காப்பாற்றி விட்ட ஆனந்தத்தில் கண்களில் நீரோடு சுவற்றில் சாய்கிறார். நல்ல வேளையாக ஒன்றும் நிகழவில்லை என்ற நிம்மதி பெருமூச்சோடு அவரருகில் வருகிறார்.

ree
ree

அப்போது தான் காலியான பால் புட்டியின் ரப்பர் துளையிலிருந்து சொட்டு சொட்டாக சிந்திக்கிடக்கும் பாலை பார்க்கிறார். பயமேறிய முகத்தில் சிவந்த கண்களை துடைத்துக்கொண்டிருந்த முகத்தோடு குழந்தையை பார்க்கிறார். வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடக்கிறது.

ree
ree

இன்னொரு பக்கம் இது எதுவும் தெரியாமல் பாடிக்கொண்டிருக்கும் சுமதியை பார்க்கிறார்

ree
ree

இப்போது அவருக்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக புரியத்துவங்கியது. கண்களில் நீர் பெருக்கெடுக்க ஆதிவாசியின் அடித்தளமான குரலில் அழத்துவங்கிய வால்டர் மெல்ல தரையில் சரிகிறார்.

ree

எத்தனை செல்வமிருந்தாலும், பெரிய பதிவியில் இருந்தாலும், சொடுக்கிட்டால் கேட்க ஒரு கூட்டமே இருந்தாலும் அந்தக்குழந்தையைப்போல மரணத்தின் மடியில் ஊற்றும் பாலைத் தவிர்க்க முடியாத குழந்தைகளாகிப்போகிறோம் தானே.


தொலைக்காட்சியில் இந்தப் பாடலைப் பார்த்த அந்த பால்ய வயதின் மறக்க முடியாத தருணங்களின் நினைவுப் பாதையில் இன்று நினைவு கூர்கிறேன்.

Comments


bottom of page