top of page

தாமிரா

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Apr 27, 2023
  • 3 min read

ree

ஒரு கலைஞனுக்கு நேரக்கூடா மரணம் இது 😔

2021.

கொரோனா தனது ருத்ரதாண்டவத்தை அடுத்த பரிமாணத்தில் மக்களின் நுரையீரலில் நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம். இதுவரை எங்கோ ஒரு மூலையில் யாரோ இறந்து போன செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, கொஞ்சம் கொஞ்சமாக எனது நண்பர்களின் நண்பர்களுக்கு பரவத்துவங்கிய போதும், அதன் தீவிரம் புரியாமல் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்ற மிதப்பில் தடுப்பூசிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அன்று அந்த போன் கால் வரும் வரை.


ஏப்ரல் 27க்கு சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு அழைப்பில் தாமிரா சார்க்கு கொரோனா என்றும் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வந்தது. சென்று பார்ப்பதற்கோ, நலம் விசாரிக்கவோ எந்த வித வாய்ப்பும் இல்லை என்றும் சொன்னதால் வாட்சாப்பில் எட்டிப்பார்த்தேன். ஆன்லைனில் இல்லை. அனுப்பிய குறுஞ்செய்திகள் அத்தனையும் ஒற்றை டிக். ஆனாலும் அவர் புகைப்படத்தை பார்த்தபடி குணமாகிவிட மனதார வேண்டிக்கொண்டேன்.


வேண்டுதலின் இடையில், ஓர் இரவில் அவரை சாலையில் சந்தித்த அந்த முதல் தருணம் மீண்டும் மனதில் துளிர்விட்டது. தாமிரா ஒரு புளியங்கொம்பு. அவர் மனதில் இடம்பிடிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ஒரு மூன்றாவது மனிதனாக தொடர்பு கொண்டிருந்தேன். எத்தனை அழைப்புகள். எத்தனை வாட்சாப் மெசேஜ்.


இவரைப்போன்ற கலைஞர்களை திரும்பிப்பார்க்க வைப்பது அத்தனை சுலபமா என்ன ! சொல்லப்போனால் வேறு யாரோ ஒரு கௌதம் என்பவரின் பதிவை பார்த்துவிட்டு நான் என்று நினைத்துவிட்டு அழைத்தார். அதன் பிறகு தான் அவர் வாட்சாப் டிபியில் படமே தெரிந்தது.


பிறகு நான் இல்லை என்று இரண்டாவது சந்திப்பில் தெரிந்தவுடன் ”ச்ச்ச்ச்” என்றபடியே நெற்றியை தட்டிக்கொண்டார். ஆனாலும் அதற்கிடையில் என் பதிவுகள், என் எழுத்து, என் ஓவியம் அனைத்தின் மீதும் பேரன்பு கொள்ளத்துவங்கியிருந்தார். ’பீஃப் கடையில் பாலுமகேந்திரா’ என்ற பெயரில் நான் எழுதிய சிறுகதையை முகநூலில் வாசித்துவிட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவர் ”அவன்னு நெனச்சு தான் உங்கிட்ட பேசினேன். நீயும் சலச்சவன் இல்ல. நல்லாவே எழுதுற.” என்று மனதார வாழ்த்தினார். அப்போது ”நீங்கள்” என்பது ”நீ”யாகவும், ”சார்” என்பது ”அண்ணா”வாகவும் மாறத்துவங்கியிருந்து.


தாமிரா போன்ற ஒரு எழுத்தாளர் சொல்லும் போது தான் என் எழுத்தின் தீவிரமும் எனக்கு புரிந்தது. ”என்னிடமும் சொல்ல கதைகள் இருக்கிறது பாரேன்” என என்னை நானே தொளில் தட்டிக்கொள்ளும் தருணம் அவர் உருவாக்கியது. அதன் விளைவாக என் ”துபாய் ரிட்டன்” சிறுகதை குங்குமம் இதழில் வெளியானது.


அந்த காலகட்டத்தில் தான் கணிணியைத்தாண்டி காகிதங்களிலும் தீவிரமாக எழுதிக்கோண்டிருந்தேன். காகிதங்களில் எழுதும் போது அது மனதிற்கு வேறு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது என்று அவரிடமே ஒரு முறை கூறினேன். எதேச்சையாக எனது ஐந்து சப்ஜெக்ட் ruled நோட்டை வாங்கிப்பார்த்தவர் தனது அலுவலகத்தில் ஒரு பீரோவின் கண்ணாடிக்கதவை திறந்து அதில் புத்தகங்களுக்கு இடையில் நின்றுகொண்டிருந்த ஒரு நோட்டை எடுத்து ”இந்தா இதப்பிடி. உன் நோட்டு முடியப்போகுது. இனி இதில் எழுது. ரெண்டு மூனு பக்கம் தான் எழுதிருக்கேன். அத விட்ரு” என்றபடி அவரும் ஒரு ஐந்து சப்ஜெக்ட் நோட்டைக் கொடுத்தார். சில பக்கங்கள் பென்சிலில் எழுதப்பட்டிருந்து. அவரின் கதைகளுக்கான கருப்பொருளாக இருக்கக்கூடும். ”எழுதுனத எல்லாம் போட்டோ எடுத்து அனுப்பவா” என்றேன். ”எல்லாம் இங்க இருக்கு” என்று நெற்றியை காண்பித்தார்.


பொதுவாக அன்பளிப்பு பெறும் போது அளிப்பவரின் கையொப்பமிட்டு பெறுவோம். ஆனால் ஏற்கனவே அவர் பெயரையே கையொப்பமாக இட்ட அந்த நோட்டில் ஒரு சிறு பிள்ளையைப்போல அடுத்தடுத்த வரிகளில் என் பெயரை இணைத்துகொண்டேன். எனக்கே தெரியாமல் நான் எழுதுவதை படம் பிடித்து ஆச்சரியப்படுத்தினார். அவர் கொடுத்த Unruled நோட்டில் ஒரு பகுதியை ஓவியங்களுக்காக ஒதுக்கினேன். ஒரு நாள் அதையும் பார்த்து மெல்லிய புன்னகையுடன் திரும்ப கையில் கொடுத்தார்.


ஏப்ரல் 27, 2021

அதிகாலை 8 மணி (எனக்கு)


அறைத்தூக்கத்தில் வந்த போன் காலில் வந்தது அந்த செய்தி. மீளாத அதிர்ச்சியுடன் உடனே கிளம்பி மருத்துவமனை சென்றேன். வாசலில் நண்பர்கள், உறவினர்கள் கூட்டம். தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். ”இதோ இந்த வழியாப்போங்க அங்க வச்சிருப்பாங்க” என்று ஒரு சின்ன சந்தினை காட்டினார்கள். இதன் வழியாகப்பொனால் உள்ளே அறையில் வைத்திருப்பார்கள் போல என்று நினைத்துக்கொண்டு உள்ளே செல்ல செல்ல, சந்தின் இடதுபுறம் வரிசையாக பிணங்கள்.


இந்த பிணங்களுக்கு மத்தியில் அவர் இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டிருக்கும் போது சரியாக அவரைக்கடந்தேன். உண்மையில் அவர் தானா ? ஆம் அவர் தான். முகம் மட்டும் தெரியும் வண்ணம் ஒரு பெரிய அடர்நிற ப்ளாஸ்டிக் பையால் முழுதும் சுற்றப்பட்டு கிடந்தார். அந்த முகம் இன்னமும் நினைவில் இருக்கிறது.


நான் பெரிய தவறு செய்துவிட்டேன். இங்கு வந்திருக்கக்கூடாது. இனி ஆயுள் முழுதும் இந்த வெளுத்துப்போன முகம் என்னை சிதைக்குமே! அவரை கடைசியாக ஹோட்டலில் பார்த்த போது சிறுபிள்ளையைப்போல படுக்கையில் குப்புறப்படுத்த படி காலாட்டிக்கொண்டு அலைபேசியை டொக் டொக் என்று தட்டிக்கொண்டிருந்த அந்த முகத்துடன் அவரிடம் விடை பெற்றிருக்கலாம்.


அவசரப்பட்டுவிட்டோமே என்று மனம் புழுங்கத்துவங்கியது. ஒரு எழுத்தாளன் இப்படி பத்தோடு பதினொன்னாவது பிணமாக ஒரு மூலையில் கிடக்கும் சாபம் யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. அந்த மரணம் என்னை உலுக்கத்துவங்கியது.


அப்போது தான் கொரோனாவின் தீவிரம் புரியத்துவங்குகியிருந்தது. இந்த நிலை எப்போது வேண்டுமானால் எனக்கும் வரக்கூடும். என் வயதை ஒத்த மனிதர்கள் செத்து விழுவதை தான் பார்த்திருக்கிறோமே. நம் உடல்நிலை இருக்கும் லச்சணத்தில் அந்த கிருமி என்னை திரும்பிப்பார்த்தாலே மேலோகம் போய்விட வேண்டியது தான்.


இனிமேலும் இங்கிருக்க வேண்டாம். உடனே கிளம்பினேன் ஊருக்கு. எது நடந்தாலும் என் ஊரில் நடக்கட்டும். வாழ்வோ,மரணமோ இயற்கை முடிவு செய்யட்டும். முதன்முதலாக என் மரணம் அதன் விளைவு, என் குடும்பம் எல்லாம் என் கண் முன்னால் வந்து போனது.


எத்தனை சண்டை, எத்தனை சச்சரவுகள், எத்தனை பிணக்குகள். அத்தனையும் இத்தனை எளிதில் ஒரு நாளில் முடிந்துவிடுமா! இவ்வளவு தானா வாழ்க்கை! அப்படியானால் இதுவரை சேகரித்த புத்தகங்கள், திரைப்படங்கள், எழுதிய பக்கங்கள் இதற்கெல்லாம் என்னதான் அர்த்தம். வாழ்வின் இறுதி யதார்த்தம் தான் என்ன? இப்படி பல கேள்விகளை முன் வைத்தது அந்த மரணம்.


ஆனால் கலங்கிய நீர் தெளிவது போல அதில் ஒரு தெளிவு பிறந்தது. வாழ்க்கை மிகச்சிறியது. எதுவும் நிரந்தமில்லை. எந்த உறவும் நிரந்தரமில்லை. அதனால் எதற்காக வருந்தியும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இருக்கும் வரை எல்லோரையும் முடிந்தவரை நேசிக்க முயற்சி செய்வோம். வாழ்வின் எத்தனையோ தருணங்களில் ஒரு குருவாக தோள் கொடுத்த அவர் மரணத்திலும் ஒரு பாடம் நடத்திவிட்டு போயிருக்கிறார்.


நான் தான் சரியாக படிக்கவில்லை. புரிந்துகொள்ளவுமில்லை. விரல் நுனியில் நிறுத்தி அழகு பார்க்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியை கரங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளும் ஆசையில் இறுகுகளை அழுத்தி சிதைத்து மீண்டும் மடியில் அமராத வண்ணம் பறக்கடிக்க செய்துவிட்டேன்.


நேசிக்கும் உறவினை

இழந்திடும் நினைவுகள்

மரணத்திலும் கொடிது...


Comments


bottom of page