நீ - நான்
- Gowtham G A
- Feb 21, 2023
- 1 min read
Updated: Apr 21, 2023
நீயற்ற யாமங்களில்
மூர்க்கமாய் புணரும் இருள்
குறைந்த ஒளியில் நீ
நிறைந்த விழியால் நான்.
அனல்
உன் கண்களில் நேற்று
நம் விரல் இடுக்குகளில்
வெப்பக்காற்று.
தகிக்கும் தீரா நதி நீ
கொதிக்கும் பேரா வெள்ளம் நான்
வடிந்தாலும் முடியாத நீ
நிறைந்தாலும் அடங்காத நான்
காதல், நமக்குள் பழைய பாடல்
காமம், நமக்குள் புதிய ராகம்.
என் பேரரசி நீ
என் பெருமாட்சி நீ
என் வேட்கையும் நீ
என் சுதந்திரமும் நீ
என் துயரமும் நீ
என் தூங்கா மூளையும் நீ
மூளைக்குள் சவாரியும் நீ
சவாரியில் சிறுத்தையும் நீ
அனைத்துமாய் நீ
நீ.
எனை ஆளும்
எனை நாளும்
எனை கொல்லும்
எனை கொள்ளும்
யாவும் நீ.
புதிரான என் அகக்கண்ணில்
புகைப்படம் எடுத்தவள் நீ
அதில் சிரித்தவள் நீ
உன் அன்பெனும் ஓடையில்
நீந்த கற்றுக்கொள்ளும்
சிறு புழு நான்.
வண்ணங்கள் யாவும்
உன் விரல் தீண்டிய மோகங்கள்
தத்தி தத்தி தவழ்ந்து பிறழ்ந்து
உனைச் சேரவே இப்பயணம்.
இடையில் விழலாம்
சரிவைத் தொடலாம்
தடையில் நெருங்கலாம்
மீண்டும் மடி சேரலாம்.
உடைந்த சிறகுகளுடன்
மீண்டும் உனைத் தேடி
இந்த பட்டாம்பூச்சியின் பயணம்...
- Mr & Mrs கௌதம் ஜி. ஏ.



Comments