காரணமின்றி தொலைந்தவள்
- Gowtham G A
- Mar 2, 2023
- 1 min read
Updated: Mar 27, 2023
என் மடியில்
தலை சாய்த்து
வருடிய உன் கேசம்.
உன் பின்னந்தலை கொய்து
என்னருகே இழுக்கும்
என் வீரம்.
மணவறை சூடிய
காதலில் கலந்த
நம் கணங்கள்.
ஊடலில் முத்தம்
கூடலில் முத்தம்
அழுதால் முத்தம்
சிரித்தால் முத்தமென்று
மூர்ச்சையாகும் வரை
போரிட்ட முத்தங்கள்.
அச்சமென காதோரம்
கிசுகிசுத்த போதும்
நம் காதலின் நம்பிக்கையில்
வடிவமைத்த வருங்காலம்.
இவையெல்லாம்
நொடிப்பொழுதில்
மறந்து போன உன்னிடம்
மீண்டும் ஒரு முறை
மண்டியிட்டு கேட்கிறேன்
என் மீதான காயங்களில்
நீ கடந்து சென்ற வேளை
எனை தவிர்க்க
உடற்கூறின் காரணங்கள்
தேட வேண்டாம்.
அது என் மீதான காரணங்கள்
நீ தவிர்க்க விரும்பாத
நீ மன்னிக்க விரும்பாத
நீ மறக்க விரும்பாத
காயங்கள்...
அதன் விளைவாய்
முளைத்த சந்தேகங்கள்
விதைத்த அவநம்பிக்கைகள்
பேசித்தீர்க்க வழியிருந்தும்
தீர்ந்துவிடக்கூடாத வண்ணம்
வழக்கை கோர்த்த விதம்.
மரண தண்டனை கைதிக்கு கூட
அவன் தரப்பின் நியாயம்
கேட்கப்படும் வேளையில்
எனை ஊமை ஆக்கி
நீ எழுதிய தீர்ப்பில்
இப்போது
மீள மூடியா கைதியாய்
என் மனச்சிறையில்.
நீ எடுக்கும் மாத்திரைகளுடன்
நானும் மாத்திரை எடுக்கிறேன்
உறங்க
நீ போட்டுக்கொள்ளும்
ஊசிக்கு நிகராக
என் கரங்களிலும் ஊசி
எனை மறக்க.
இருவரும் சமம் என
பேசிய கோட்பாடெல்லாம்
எங்கே தொலைந்து போனதோ !
ஒரு பக்க நியாயத்தில்
எழுதிய தீர்ப்பாகிப்போனது
நம் கதை.
நீ சொல்லும் நியாயங்களில்
எது உண்மை எது பொய்
அறியும் சக்தி என்னிடமில்லை
தடயமற்று தொலைந்த நீ
எதிர்படும் வேளையில்
பொய் உரைத்திடாத
பதிலொன்றையாவது
சொல்லிவிடு...
எனை தவிர்க்கும்
உன் நிஜ காரணம் தான் என்ன ?
- ஜி. ஏ. கௌதம்



Comments