டைட்டில்ல உன் பெயர் போயிடுச்சா?
- Gowtham G A
- Mar 2, 2023
- 1 min read
Updated: Apr 5, 2024


என் எந்தப்படத்தையும்
இதுவரை நீ முழுவதாய்
திரையில் கண்டதில்லை
காணும் சந்தர்ப்பமும்
அமையவில்லை
இன்று மட்டும் விதிவிலக்கு.
வர முயற்சி செய்வதாய்
நீ சொன்ன ஒற்றை வரியில்
மனதோரம் சிறு நம்பிக்கை
ஏதோ கொஞ்சம் கருணை கொண்டு
நீ வந்துவிடுவாய் என.
மணிக்கொரு முறை
அலைபேசியை எட்டிப்பார்த்தேன்
வற்றிப்போன கடலில்
தரை தட்டிய கப்பல் போல
சலனமற்று கிடந்தது
உன் உள்பெட்டி.
ஏதோ ஒரு தருணத்தில்
ஏதோ ஒரு நொடியில்
அந்தப்பாதை வழியே
உன் வருகையை
ஏங்கித்தவித்தது மனம்
கடந்த நாட்களில்
என் பெயரை திரையில் காணாது
தவித்துப்போகும் உன் தவிப்பில்
ஒரு துளியேனும்
இன்று இருந்திருந்தால்
இத்தனை கூட்டத்திலும்
உன் முகம் கண்டிருப்பேன்.
ஒவ்வொரு முறையும்
எனைக்காண காரணம் தேட
தடுமாறும் உன் சிந்தை
இப்போதெல்லாம்
எனைத்தவிர்க்க
சிறப்பாக வேலை செய்கிறது.
எனைத்தவிர்க்க
நீ கூறும் காரணங்கள்
உலகின் தலைசிறந்த
திரைக்கதைகள்...
- ஜி. ஏ. கௌதம்
02 - மார்ச் - 2023



Comments